8.4.2009 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஆதவன் தீட்சண்யா என்பவரின் நேர்காணல் வெளிவந்திருந்தது. அதில் அவர் சகட்டு மேனிக்குத் தமிழ் எழுத்தாளர்கள் மீது அவதூறு செய்திருந்தார். அதற்குக் கீழ்க்காணும் விளக்கத்தை விகடனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை வெளியிடாமல் தனது ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தியிருக்கிறது அப்பத்திரிகை.
பொதுவாகவே ஜனரஞ்சகப் பத்திரிகைகள் தமிழில் சீரியஸாக இயங்கி வரும் எழுத்தாளர்கள் மீது விரோதம் பாராட்டி வருவதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். இதுவே ஒரு சினிமா நடிகர் எழுதிய எதிர்வினை என்றால் முதல் பக்கத்திலேயே வெளியிட்டுத் தங்களுடைய சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். முன்பெல்லாம் சினிமாவுக்காக பேசும் படம் என்று பிரத்தியேகமாக ஒரு சினிமாப் பத்திரிகை வந்தது. இப்போது எல்லாப் பத்திரிகைகளின் எல்லாப் பக்கங்களுமே சினிமா நடிகைகளின் அரைகுறை ஆடைப் புகைப்படங்கள்தான். இது பத்திரிகைகளின் வியாபார நுணுக்கமாக இருக்கலாம். போட்டி அதிகமுள்ள துறை அது. வியாபாரம் நன்றாக கன ஜோராக நடத்தட்டும். வாழ்த்துக்கள். ஆனால் இடையில் இது என்ன எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்? அதுவும் வேறொரு எழுத்தாளரை விட்டு? அவதூறுக்கு பதில் எழுதினால் வெளியிட மாட்டார்கள்.
எழுத்தாளர்கள் குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் அலையும் ஜென்மங்கள்; குடித்து விட்டு கலாட்டா செய்யும் பேர்வழிகள் என்று ஆதவன் தீட்சண்யா எழுதியதை வெளியிட்டு, அதற்கு நான் எழுதிய மிகச் சிறிய எதிர்வினையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்திருப்பதும் அதே வியாபார நுணுக்கம்தானா? விகடனுக்கும் எழுத்தாளர்களைப் பற்றிய அதே மேலான கருத்துதான் இருக்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டுமா? இங்கே எந்த எழுத்தாளர் குடிக்கும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார்? எனக்குத் தெரிந்து விகடனில் பத்தி எழுதிய எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ரவிக்குமார் எம். எல். ஏ, அழகிய பெரியவன் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடன் ஆகியோரும் கவிஞர் தேவதச்சன் போன்றவர்களும் குடிக்கும் வழக்கம் இல்லாதவர்கள் ஆயிற்றே? அப்படியிருக்கும் போது ஏன் இந்த அவதூறு?
சரி, குடிப்பவனெல்லாம் சமூக விரோதியா? கஞ்சா குடித்தாரே பாரதி அவர் சமூக விரோதியா? ஜெயகாந்தன் சமூக விரோதியா? இப்படிப்பட்ட அவதூறுகள் விகடனில் வெளிவரும் காரணம் என்ன?
கீழே வருவது நான் விகடனுக்கு எழுதியிருந்த எதிர்வினை:
தமிழ்நாடு நடிகர்களை மட்டுமே கொண்டாடும் சமூகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மற்றபடி சினிமாவுக்கும், தொலைக்காட்சி சீரியலுக்கும் வசனம் எழுதுபவர்தான் இங்கே எழுத்தாளர் என்று அறியப்படுகிறார். இவர்கள் தவிர, தமிழ் மொழியில் மிகத் தீவிரமாக இயங்கிய எந்த எழுத்தாளைனப் பற்றியும் இச்சமூகத்திற்கு அக்கறை இல்லை. உலகின் சிறந்த நாவல் வரிசையில் வரக்கூடிய புயலிலே ஒரு தோணி என்ற நாவலை எழுதிய ப. சிங்காரத்தைப் பற்றியோ, நோபல் பரிசு பெறக்கூடிய தரத்தில் எழுதிய தர்மு சிவராமு, ஆத்மாநாம், நகுலன், அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி – இப்படி நூறு பெயர்களைச் சொல்ல முடியும். இவர்களையெல்லாம் இந்த சமூகம் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அதனால் யாருக்கு நஷ்டம்?
’உழவனையோ தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா?’ என்று கேட்கிறார். ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ. போல் தோற்றமளிக்கும் இவர் என்ன உழவனா? சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது, சமதர்மம் மலர வேண்டும் என்று நினைக்காத ஒரு எழுத்தாளனை இவரால் காண்பிக்க முடியுமா? ஆனால், எல்லோருக்கும் சோறு மட்டும் கிடைத்தால் போதும் என்று மார்க்சீயத்தை சோற்றுத் தத்துவமாகப் புரிந்து கொண்ட ரஷ்யா கடைசியில் என்ன ஆயிற்று? சமூகத்தை ஒரு மாட்டுப் பண்ணையைப் போல் ஆக்கி எல்லோருக்கும் ரொட்டியும் வோட்காவும் கொடுத்தார்கள். எழுத்தாளர்களையெல்லாம் தூக்கி ஜெயிலில் போட்டார்கள். . ஜோசஃப் ப்ராட்ஸ்கியிடம் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரிடம் அனுமதி பெற்றுத்தான் கவிதை எழுத வேண்டும் என்று சொன்னது நீதிமன்றம். பிறகு அவரை நாடு கடத்தினார்கள். அவருக்கு நோபல் கிடைத்தது.
நோபலை விடுங்கள். துர்கனேவ், தாஸ்தாவஸ்கி, டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ் என்று எத்தனையோ மேதைகளை உருவாக்கிய ரஷ்யாவில் கம்யூனிசம் வந்தது. மாதா கோவிலை மளிகைக் கடையாக மாற்றினார்கள். கலையும் தத்துவமும் தேவையில்லை என்று தூக்கியெறிந்தார்கள். தேசம் இருண்டது. இன்றைய தினம் ஆறு வயதுக் குழந்தைகள் கூட தங்கள் ரொட்டிக்காக விபச்சாரம் செய்ய வேண்டிய அவல நிலை.
சீனாவில் கலாச்சாரப் புரட்சி என்று சொல்லி பல்கலைக்கழகங்களை மூடி விட்டு எழுத்தாளர்களையும், பேராசிரியர்களையும் உழவு செய்ய அனுப்பினார்கள். தேசமே அழிந்து போயிற்று. கம்பூச்சியாவின் கதையும் அதேதான். சிந்தனையைச் சிறை வைத்து விட்டு வெறும் சோற்றை மட்டுமே தின்று வாழ்வதற்கு மனிதன் என்ன மாடா? அதனால்தான் எழுத்தாளனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று எழுதி வருகிறேன்.
அடுத்து, ”ஒரு கவிஞன் குடித்து விட்டுத் தகராறு செய்து போலீஸ் அடித்தால் அதை ‘மனித உரிமை மீறல்’ என்று அலறுகிறார்கள்” என்கிறார். ஒழுக்க மதிப்பீடு என்று வரும்போது முற்போக்கு, பிற்போக்கு எல்லாமே ஒரே போக்காகச் சிந்திப்பதைக் கவனியுங்கள். அந்தப் பிரஸ்தாபக் கவிஞர் விகடன் வாசகர்கள் நன்கு அறிந்த ஃப்ரான்சிஸ் கிருபாதான். அவர் ஒன்றும் குடித்து விட்டுத் தகராறு செய்யவில்லை. அவர் தாடி வைத்திருப்பார்; கொஞ்சம் கருப்பாகவும் இருப்பார். கேட்க வேண்டுமா? அவர் தேடிச் சென்ற சினிமா இயக்குனரின் வீட்டு அடையாளம் தெரியாமல் அடுத்த வீட்டுக் கதவைத் தட்டி விட்ட அவரை டெரரிஸ்ட் என்றே முடிவு செய்து விட்டது போலீஸ். தாடி வைத்த, கருப்பு நிறமுள்ளவர்களெல்லாம் டெரரிஸ்ட் என்றால் தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான பேரை சிறையில் தள்ள வேண்டியிருக்குமே? நல்ல வேளை, ஆதவன் தீட்சண்யா போலீஸ் கமிஷனராக இல்லை. (ஆனால் கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் இப்படி ஏகப்பட்ட கமிசார்கள் இருந்தனர்).
இங்கே ஒருவரை போலீஸ் பிடித்து விசாரித்தால், தான் ஒரு டெரரிஸ்ட் இல்லை என்று அவரே அந்தக் கணமே நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் டெரரிஸ்ட் தான். போலீஸ் அடித்த அடியில் கிருபாவின் கால்கள் உடைந்து விட்டன. இன்னும் சரியாகவில்லை. ஏனய்யா, பாரதி கூடத்தான் தாடி வைத்திருந்தார். கஞ்சாவும் அடித்தார். அன்றைய தினம் பாரதியே மாட்டியிருந்தால் கூட அவருக்கும் கிருபாவுக்குக் கிடைத்த மரியாதைதான் கிடைத்திருக்கும். இப்படி எழுத்தாளர்களை கிரிமினல்களைப் போல் நடத்தும் சமூகம் உருப்படுமா என்பதுதான் என்னுடைய கேள்வி.
கிருபாவுக்கு மட்டும் அல்ல; அழகிய பெரியவன் என்று ஒரு எழுத்தாளர். உலகின் எந்தச் சிறந்த எழுத்தாளனுக்கும் இணையான எழுத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர். 35 வயது வரை வேலை கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் க்யூவில் நின்று கொண்டிருக்கும் போது அந்த அலுவலக அதிகாரியால் தாக்கப்பட்டார். அவர் ஒரு தலித்தாக இருந்தும் யாரும் கேட்கவில்லை. கேட்க இங்கே நாதியில்லை.
ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் முற்போக்கு, தலித் என்பதைல்லாம் முகமூடியைப் போல் பயன்படுத்துகிறார்கள். காரணம், எழுத்தை உருவாக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் தீட்சண்யா உழைக்காமலேயே மேலே வந்துவிடப் பார்க்கிறார். அந்த வகையில் இவர்கள்தான் முதலாளித்துவவாதிகள். உதாரணமாக, முடிவை மாற்றி எழுதிய கதைகள் என்ற கதையில் இவர் மலம் அள்ளுபவர்கள் மலம் அள்ளும் தொழிலையே செய்ய வேண்டும் என்று எழுதி, பல தலித் எழுத்தாளர்களின் கண்டனத்தைப் பெற்றவர். இப்போது தெரிகிறதா இவருடைய நிறம்?
விகடனில் போஸ் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்த உடனே போலீஸ் இன்ஃபார்மராக மாறி சக எழுத்தாளர்களைத் தாக்குகிறார். உலகத்திலேயே போலீஸ் இன்ஃபார்மராக மாறிய ஒரே எழுத்தாளர் இவராகத்தான் இருக்க வேண்டும்.
சாரு நிவேதிதா.
2.4.2009.
|