எழுத்தும் வாழ்க்கையும்...

 

நீண்ட தினங்களாக எழுதாதது பற்றிய ஒரு சிறிய முன் குறிப்பு: என் நண்பர் சீனிவாசனுக்கு ஜூன் 21 அன்று பிறந்த நாள். அதை பாண்டிச்சேரியில் கொண்டாடலாம் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். ஏற்கனவே என்றால் ஒரு மாதத்திற்கு முன்னதாக. நாங்கள் சந்தித்துக் கொள்வதே இரண்டு மாதத்திற்கு ஒருமுறை என்று சுருங்கி விட்டதால் அதைக் கொஞ்சம் கொண்டாட்டமாகவே வைத்துக் கொள்ளலாம் என்று ஆசைப் பட்டோம். இரண்டு தினங்கள் முன்பாகவே பாண்டி சென்று விட்டோம். கூடவே இன்னும் இரண்டு நண்பர்கள். ஆனால் நான் மட்டும் யாருடனுடம் பேசாமல் மடிக் கணினியில் கட்டுரையைத் தட்டிக் கொண்டிருந்தேன். திரைப்பட விமர்சனம் என்பதால் எழுதுவதற்கு சில தினங்களே பிடித்தது. அதன் பாடல்களை டௌன்லோட் செய்வது; படத்தைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்ப்பது; பாடல்களின் இந்தி ஸ்க்ரிப்டை வாசிப்பது என்று பல வேலைகள் கிடந்தன. நண்பர்களோடு கலந்து கொள்ளவே இல்லை. இரவு பத்து மணி வாக்கில் சென்று ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மீண்டும் தட்ட ஆரம்பித்து விடுவேன்.

ஆனால் சனிக்கிழமை ஆகியும் கட்டுரை முடியாததால் பதற்றம் கூடியது. அதனால் நண்பர்களுடன் ஒரு வார்த்தை பேசாமல் எழுத்தைத் தொடர்ந்தேன். அதற்குள் எங்கள் ஹோட்டலையும் மாற்றியிருந்தோம். நகரத்தின் சந்தடியிலிருந்து விலகி காலாப்பட்டில் இருக்கும் ஜேம்ஸ் கோர்ட்டில் அறை எடுத்திருந்தோம். அறைக்கு நேர் எதிரே ரம்மியமான தோற்றத்தில் கடல்.

இதற்கிடையில் செக் நாட்டிலிருந்து என்னைச் சந்திப்பதற்காகக் கேட்டு, நான் பாண்டிச்சேரியில் இருக்கிறேன் என்று சொன்னதும் தேடிக் கொண்டு வந்து விட்டார். பாரிஸ் ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படிக்கிறார். இந்த உலகத்திலேயே அழகானவர்கள் செக் தேசத்துப் பெண்கள்தான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தப் பெண்ணைப் பார்த்தபோது அது உண்மை என்று தெரிந்தது. ஸீரோ டிகிரியைப் படித்து விட்டு சந்திக்க வந்தவர். பெயரை மட்டும் கேட்டு விட்டு உயிர்மைக்காக எழுதிக் கொண்டிருந்த குலால் பட விமர்சனத்தைத் தொடர்ந்தேன். மொத்தம் இரண்டு தினங்கள் எங்களோடு இருந்தார் அந்த செக் பெண். சீனிவாசனும் நண்பர்களும்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அறைக்குள் அமர்ந்து டைப் செய்து கொண்டிருந்தேன். எழுத்துக்காக என்னென்னவோ தியாகங்கள் செய்து கொண்டிருப்பதாக நான் அவ்வப்போது எழுதுவேன் இல்லையா, அந்த தியாகத்தில் ஒன்று இது. (உயிர்மை ஆசிரியர் கூட இத்தகைய தியாகத்தைச் செய்வாரா என்றால் எதிர்மறையான பதில்தான் கிடைக்கும்!)

இதற்கிடையில் உயிர்மை ஆசிரியருக்கு நான் பாண்டியில் இருக்கும் விஷயம் தெரியாது. தெரிந்திருந்தால் ‘அவன் வழக்கம்போல் குடித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்; அவனுடைய கட்டுரை இல்லாமலேயே பத்திரிகையை பிரஸ்ஸுக்கு அனுப்பி விடுவோம்’ என்று முடிவு செய்திருப்பார். நான் இருக்கும் நிலை சீனிவாசனுக்கும் அந்தப் பெண்ணுக்கும்தானே தெரியும்? அதனால் அவரிடம் நான் பாண்டிச்சேரியில் இருக்கும் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை.

சனிக்கிழமை இரவுக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் முடிக்கும் போது ஒரு தவறு நடந்து எழுதிய கட்டுரையின் பாதிப் பகுதி காணாமல் போய் விட்டது. எழுதியவற்றைப் பாதுகாக்க மறந்து விட்டதால் ஏதோ ஒரு பட்டனைத் தட்ட பாதி கட்டுரை காலி. இப்போது அதையெல்லாம் திரும்ப டைப் செய்ய வேண்டும். பாடல்களைத் திரும்பவும் கேட்க வேண்டும். அந்த ஏ.சி. அறையிலும் எனக்கு வேர்த்து விட்டது. எழுந்து நிதானமாக பத்து நிமிடங்கள் மௌனமாக இருந்து விட்டு மீண்டும் ஆரம்பித்தேன்.

சீனிவாசனும் அவர் நண்பர்களும் என்னைப் பார்த்து விட்டு பயந்தே போனார்கள். ”இப்படியெல்லாம் யாரும் எதற்காகவும் வேலை செய்து நான் பார்த்ததில்லை” என்றார் சீனிவாசன்.

இரவு இரண்டு மணி ஆகியும் கட்டுரையை முடிக்க முடியவில்லை. தலை தானாக ஆட ஆரம்பித்து விட்டது. நான்கு மணிக்கு அலாரம் வைத்து விட்டுப் படுத்தேன். நான்கு மணிக்கு எழுந்து கொள்ள முடியவில்லை. தூக்கம் பிய்த்துக் கொண்டு வந்தது. ஐந்து மணிக்கு அலாரம் நேரத்தை மாற்றி வைத்து விட்டுப் படுத்தேன். ஐந்து மணிக்கும் அதே நிலை. பிறகு ஆறு மணிக்கு மாற்றி வைத்து விட்டுப் படுத்தேன். ஆறு மணிக்கும் எழுந்து கொள்ளவில்லையெனில் இந்த மாத உயிர்மையில் குலால் விமர்சனம் வர வாய்ப்பில்லை.

பல காரணங்கள் இருந்தன. ஒன்று; இதுவரை உயிர்மையின் முதல் இதழிலிருந்து அதில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரே ஆத்மா அடியேன்தான். வெளிநாடு சென்றால் மட்டுமே ஒரு சிறிய இடைவெளி விழும். அதனால் இப்போது அப்படி ஒரு இடைவெளி தர நான் விரும்பவில்லை. அடுத்து, அனுராக் காஷ்யப்பின் தேவ்.டியை விட குலால் பல மடங்கு நன்றாக இருந்தது. மூன்றாவது, குலால் வெளிவந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன.

ஆறு மணிக்கு எழுந்து டைப் செய்ய ஆரம்பித்தேன். எட்டு மணிக்குக் கிட்டத்தட்ட முடித்திருந்தேன். இன்னும் கொஞ்சம் மீதியிருந்ததை காரில் போய்க் கொண்டிருக்கும் போதே அடித்துக் கொள்ளலாம்.

மதுராந்தகம் வந்த போது முடித்திருந்தேன். அப்போது பார்த்து என்னுடைய மடிக் கணினியில் பிரச்சினை. உடனே சீனிவாசன் ஒரு யோசனை சொன்னார். அவருடைய ஃப்ளாஷ்ட்ரைவில் இந்தக் கட்டுரையை மாற்றிக் கொண்டு அவருடைய மடிக்கணினி மூலம் அனுப்பி விடலாம்.

காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு வேலையை ஆரம்பித்தார்.

”நீங்கள் அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டு ஒரு ஓட்டலுக்குச் சென்று இட்லி சாப்பிட்டேன். (எனக்குக் காலைப் பசி தாங்காது). சூடான, மென்மையான பெரிய பெரிய இட்லி. சாம்பாரில் நிறைய காய்கறிகள். கார சட்னி. தேங்காய்ச் சட்னி. நான்கு இட்லிக்கு 12 ரூபாய்தான். சென்னையில், மனிதர்களால் சாப்பிடவே முடியாத இட்லியைக் கொடுத்து, கொள்ளை விலை சொல்லி எப்படிப் பகல் கொள்ளையடிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அப்போது அங்கே வந்த ஒருவர் எனக்கு வணக்கம் சொல்லி ”வசந்த் டீவியில் நீங்கள் பேசியது எதார்த்தமாக இருந்தது” என்றார். அதிர்ந்து போனேன். ஏனென்றால் சென்ற திங்கட்கிழமைதான் அந்தத் தொலைக்காட்சியில் ஒரு டாக்‌ஷோவில் பேசியிருந்தேன். ஆனால் அந்த நிகழ்ச்சி காலை பத்தரையிலிருந்து பதினொன்றரை வரை ’லைவ்’ஆக ஒளிபரப்பானது.

நேயர்கள் என்னோடு போனிலும் பேசலாம். எக்கச்சக்கமான பேர் பேச வந்தார்கள். விளம்பர இடைவேளையின் போது தொலைக்காட்சி நண்பரிடம் இது பற்றி ஆச்சரியத்துடன் கேட்டேன்.

”அட நீங்க வேற சார்; இரவு இரண்டு மணிக்கு என்றால் கூட இதே அளவு கூட்டம் வரும்” என்றார்.

அதுதான் என் ஆச்சரியம். ஒரு திங்கட்கிழமை காலை பத்தரை மணிக்கு இவ்வளவு பேர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? அதுவும் வசந்த் டீவியில். இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? எனக்கு அந்த அலுவலகத்துக்குச் செல்லும் வரை வசந்த் டீ.வி. என்ற ஒரு சேனல் இருக்கும் விஷயமே தெரியாது. அதோடு, வசந்த் & கோவுக்கும் இந்த வசந்த் டீவிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றும் தெரியாது. அங்கே சென்ற பிறகுதான் விஷயம் புரிந்தது.

ஓட்டலிலிருந்து திரும்பி வந்த போது சீனிவாசன் காரை விட்டு வெளியே வந்து பிளாட்பாரத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். காலையிலேயே அக்னியாய் சுட்டெரித்தது வெயில். நானும் அவர் அருகிலேயே அமர்ந்தேன். ஃஃப்ளாஷ் ட்ரைவில் கட்டுரையை இறக்கி முடித்தபோது சரியாக அவருடைய மடிக் கணினியில் ‘பவர்’ முடிந்து போனது.

ஆஃப் செய்து விட்டு பாபாவை தியானித்தபடி ‘ஆன்’ செய்தேன். உயிர்மைக்கு அனுப்பிய அடுத்த வினாடியே மீண்டும் ‘ஆஃப்’ ஆகி விட்டது. போன் செய்து கிடைத்ததா என்று கேட்டேன். “கிடைத்தது; யாரோ சீனிவாசன் என்பவர் அனுப்பியிருக்கிறார்” என்றார் உயிர்மை அதிபர். “பாபாவுக்கு சீனிவாசன் என்றும் பெயர் உண்டு” என்று சொல்லி விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

பின் குறிப்பு 1: ஊருக்குத் திரும்பிய பிறகும் கட்டுரை எதுவும் எழுத முடியவில்லை. மடிக் கணினி இன்னும் சரியாகவில்லை

2. சீனிவாசனும், நீதிமணியும், நானும் சென்னையிலிருந்து கிளம்பி ஹிமாச்சல் பிரதேஷில் சீனத்து எல்லையில் உள்ள லஹௌல் ஸ்பிட்டி வரை காரிலேயே பயணம் செய்து வரலாம் என்று இருக்கிறோம். அநேகமாக ஆகஸ்ட் மாதம். பயணம் ஒரு மாதம் எடுக்கும். ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டும் மலைப்பாதையில் கார் ஓட்டிப் பழக்கப்பட்ட அந்த ஊர் ட்ரைவரை அமர்த்திக் கொள்ளலாம் என்று திட்டம். காரில் இன்னும் ஒரே ஒரு இடம் இருக்கிறது. வர விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும். எந்தப் பயமும் வேண்டாம். ஒரே ஒரு ஆணோடு தனியாகச் செல்வதுதான் ஆபத்து. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களோடு பயணம் செய்வது ரொம்பவே பாதுகாப்பானது.

ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று நினைக்கிறேன். யாராவது ஸ்பான்ஸர் செய்தால் நலம்.

***

24.6.2009.

11.00 a.m.