(ஒரு சிறிய முன்குறிப்பு: மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் பற்றி அவ்வப்போது ஓரிரு வார்த்தைகளை எழுதி வந்திருக்கிறேன். இப்போது உயிர்மையில் வெளிவந்திருக்கும் இந்த ஆறு கவிதைகளையும் சற்றே திறந்த மனதுடன் வாசித்துப் பாருங்கள். ஏன் திறந்த மனதுடன் என்று சொல்கிறேன் என்றால், உங்கள் வீடு தாஜ்மகாலின் பக்கத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதன் அருமை தெரியாது. அதே போல் மனுஷ்ய புத்திரன் உங்களின் அருகாமையில் இருக்கிறார். தன் தொலைபேசி எண்ணையெல்லாம் கொடுக்கிறார். பார்ப்பதற்கும் உங்களுடைய வீட்டுக்கு வரும் நண்பனைப் போலவோ, உங்களுடைய அலுவலக சகாவைப் போலவோதான் இருக்கிறார். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கும் இந்தக் கவிஞனைப் பற்றிய அடையாளம் தெரியவில்லை.
சுதந்திரப் போராட்டம் என்ற காரணத்தினால் தமிழனுக்கு பாரதியின் விலாசம் தெரிந்தது. ஆனால் இப்போது அம்மாதிரியான மக்கள் போராட்டம் எதுவும் இல்லை. அதனால்தான் பாரதிக்குப் பின் வந்த ஒரு மகத்தான கவிஞனான மனுஷ்ய புத்திரனை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. இந்தக் கவிதைகளை வாசித்துப் பாருங்கள். சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் எந்த ஒரு கவிஞனுக்கும் குறைவில்லாத கவித்துவத்துவத்தின் வீச்சை இதில் நீங்கள் காணலாம். இன்றைய தமிழ் வாழ்க்கையை ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறான் கவிஞன். இக்கவிதைகளை சாருஆன்லைன் இணைய தளத்தில் மறு பிரசுரம் செய்வதில் பெருமை அடைகிறேன். ஆனால் இக்கவிதைகள் கோடிக்கணக்கான தமிழர்களைச் சென்று அடைய வேண்டியவை. அது தமிழ்நாட்டில் நடக்கவில்லை. கேரளத்தில் இக்கவிதைகளைப் போற்றிக் கொண்டாடி ஒரு லட்சம் பிரதிகள் விற்கும் மாத்ரு பூமியிலோ, கலா கௌமுதியிலோ வெளியிட்டிருப்பார்கள்.
இக்கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மனுஷ்ய புத்திரன் சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டும் என்பது என் தீராத விருப்பம்.
சாரு
2.2.2010
***
எல்லாவற்றிற்கும் பின்னே ஒரு கதை இருக்கும்
அறியத்தான் வேண்டுமா
நீ அதை
புல் தரையின் நடுவே கிடக்கும்
ஒரு கைப்பையைப் பற்றி
ஒரு இடிந்த சுவரில் எழுதப்பட்ட
சூசகமான வாக்கியம் பற்றி
ஒரு இரவிலும் அணைக்கப்படாத
ஒரு குழல் விளக்கினைப் பற்றி
கொடியில் காயும் ஓர் ஆடையின்
ரத்தக் கறை பற்றி
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
o
காரணங்கள் உனக்கு
தெரியத்தான் வேண்டுமா
ஒரு வழிப்போக்கனின் பாதையில்
எங்கிருந்தோ கேட்கும்
தீனமான அழுகுரல்கள் பற்றி
எல்லாக் குளிர்காலங்களிலும்
தவறாமல் ஏற்படும்
மனநோய் பற்றி
கைவிடப்பட்ட ஒரு வீட்டின்
திறந்துகிடக்கும்
எல்லா வாயில்களும் பற்றி
தழும்பும் இரு முலைகளுக்கு நடுவே
பார்க்க நேரும்
ஒரு நீளமான தீக்காய வடு பற்றி
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
o
நீ கண்டுபிடிக்காமல் இருப்பதே
நல்லது
அவர்கள் ஏன்
தங்களைக் குறித்து
அவ்வளவு சிறிய பொய்களைச்
சொல்கிறார்கள் என்பதை
அவர்கள் ஏன்
பேசத் தொடங்கும்போதே
அழத் தொடங்கிவிடுகிறார்கள் என்பதை
அவர்கள் ஏன்
செய்யாத குற்றங்களுக்குக்கூட
மன்னிப்பு கேட்கிறார்கள் என்பதை
அவர்கள் ஏன்
எந்த நிபந்தனையும் இல்லாமல்
தம்மை ஒப்புக்கொடுத்தார்கள் என்பதை
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
o
நீ
பேச்சுக்கொடுக்காதே
தினமும் டைரி எழுதும்
பழக்கம் உள்ளவர்களோடு
இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்ததும்
எல்லாம் சரியாகிவிடும் என்று
நம்புகிறவர்களோடு
தனக்குத் தானே பேசிக்கொண்டு
சாலையைக் கடப்பவர்களோடு
நிராகரிக்கப்பட்ட காதல்களுக்காக
குடிப்பவர்களோடு
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
o
நீ கதைகேட்க
விருப்பம் கொண்டவன் எனில்
பணம் கொடுத்து வரவழைத்த
வேசியிடம் அதைக் கேட்காதே
உதவி நாடி வந்த அதிதியிடம்
அதைக் கேட்காதே
உன்னால் வெற்றிகொள்ளப்பட்டவர்களிடம்
அதைக் கேட்காதே
அவமானங்களை நேர்த்தியாக
மறைத்துக் கொள்பவர்களிடம்
அதைக் கேட்காதே
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
o
நீ கதைகளை அறிந்துதான்
தீரவேண்டுமெனில்
அறிந்துகொள்
வேட்டையாடப்பட்ட
ஒரு சிறுத்தையின் கண்களை
திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட
ஒரு சிறுவனின் கண்களை
ஆழ்ந்த புணர்ச்சியில்
வெறுமையாகும் சாம்பல் கண்களை
புன்னைகையுடன்
உன்னை அணைத்துக்கொள்ளும்
துரோகத்தின் கண்களை
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
***
உனது சாயலுள்ள பெண்
உனது சாயலுள்ள பெண்
தனது கைப்பையைத் திறந்து
எதையோ எடுக்கிறாள்
முன்னே வந்து விழும் கேசத்தை
உன்னைப்போலவே ஒதுக்கியபடி
ஒரு முகவரிச் சீட்டைத் தருகிறாள்
உனது சாயலுள்ள பெண்களுக்கு
பொதுவாக என்ன பெயர் இருக்குமோ
அதுவே அவளுக்கும் இருந்தது
நான் அவளுக்கு உதவமுடியாத
நிலையில் இருப்பதை
மிகவும் நல்லிதயம் கொண்ட
சொற்களால் விளக்கினேன்
இந்தக் காலகட்டத்தில்
வேறு சில இடங்களிலும்
அவள் இதையே கேட்டிருக்கவேண்டும்
உனது முகம் வாடும்போது
எப்படி உன் கண்கள்
ஏங்கி அலைபாயுமோ
அதேபோலத்தான்
உனது சாயலுள்ள பெண்ணின் கண்கள்
அலைபாய்கின்றன
தனது திட்டம் எவ்வளவு
நம்பகமானது என்பதை
அவள் எனக்குப்
பிடிவாதமாக விளக்க முயன்றாள்
நான் அவளுக்கு
ஒரு தேநீர் அளிக்க விரும்பினேன்
அது ஒரு வீணான நம்பிக்கையைக்
கொடுக்கலாம் என்பதால் அதைக் கைவிட்டேன்
அவள் எனக்கு
எத்தகைய நன்மையைக்
கொண்டுவந்திருக்கிறாள்
என்பதைச் சொல்லும்போது
அவள் குரல் மெலிதாக உடைகிறது
உனது சாயலுள்ள பெண்களுக்கு
என்னை இணங்கச் செய்யமுடியும்
என்ற நம்பிக்கை எப்படியோ
வந்துவிடுகிறது
நான் இன்னொரு சந்தர்ப்பத்தில்
அதை ஏற்கமுடியலாம் என்றேன்
இன்னொரு சந்தர்ப்பம் என்பது
வாழ்க்கையில் வருவதே இல்லை
என்று அவள் சொல்லும்போது
உனது சாயலுள்ள பெண்
உன்னைப்பற்றிப் பேசுவதாகவே
எனக்குத் தோன்றியது
எனது நண்பர்கள் யாராவது
இதில் ஆர்வம் காட்டுவார்களா என்று
கேட்டபோது அவளது நம்பிக்கை
வெகுவாக வற்றியிருந்தது
அத்தகைய நண்பர்கள் யாரும்
எனக்கு இல்லை என்றபோது
ஒருகணம் உண்மையிலேயே
தனிமையாக உணர்ந்தேன்
அவள் ஒரு சிறிய
நோட்டுப் புத்தகத்தில்
நான் இன்று அவள் சந்தித்த
எத்தனையாவது ஆள் என்பதைக்
குறித்துக்கொண்டாள்
அவளிடம் கசப்போ ஏமாற்றமோ இல்லை
களைப்பு மட்டுமே இருந்தது
உனது சாயலுள்ள பெண்ணிற்கு
எதையாவது தரவிரும்பினேன்
பத்து நிமிடங்களுக்கு முன்பு
அறிமுகமான ஒரு பெண்ணிற்குத் தர
இந்த உலகில் எதுவுமே இல்லை
ஆயினும்
எதையாவது தரவிரும்பினேன்
தனது காகிதங்களை சேகரித்துக்கொண்டாள்
அதே இன்முகத்துடன்
வணக்கம் தெரிவித்தாள்
எவ்வளவு மென்மையாக
கதவுகளைத் திறந்துகொண்டு வந்தாளோ
அதே மென்மையுடன்
சாத்திக்கொண்டு போகிறாள்
அவளுக்கு நான்
இதைவிடவும் மேலான ஒன்றைச்
சொல்லியிருக்கலாம்
குறைந்தபட்சம்
அவளது சாயலுள்ள
ஒரு பெண்ணை
நான் எப்படி நடத்தினேனோ
அதேபோலத்தான்
அவளையும் நடத்தினேன்
என்பதையாவது
***
இதற்கு முன்னும் இதற்குப் பிறகும்
நீலக் குழல்விளக்கின் வெளிச்சம்
ஒரு முழு நிர்வாணம்
ஒரு பாதி நிர்வாணம்
இரண்டு காலிக் கோப்பைகள்
உதடுகளில் துடிக்கும் ஒற்றைச் சொல்
ஒரு மெல்லிய மனத்தடை
ஒரு மெல்லிய புன்சிரிப்பு
அவ்வளவு அவகாசம் இல்லாதபோதும்
எவ்வளவோ இருக்கத்தான் செய்கிறது
சுவரில் தொங்கும் குதிரையின்
படத்தைப் பார்க்கிறாய்
நான் பார்ப்பது காலண்டரில்
இருக்கும் தேதியை
ஒரு பறவையின் நிழல்
நம்மீது விழுகிறது
பிறகு
காமத்தின் நிழல்
சாகசத்தின் நிழல்
பயத்தின் நிழல்
இன்று ஒரு புதிய மச்சத்தைக்
கண்டுபிடித்தேன்
ஒரு புதிய தீவிற்கு
ஒரு புதிய நட்சத்திரத்திற்கு
ஒரு புதிய எரிமலைக்கு
அதைக் கண்டுபிடித்தவனின் பெயரை
இடுவதைப்போல
அந்த மச்சம் என் பெயரால்
அழைக்கப்படலாம்
ஒரு விம்முதல்
ஒரு அரவணைப்பு
ஒரு போலி விலகல்
ஒரு தவிப்பின் பேதமை
என்ன செய்வதென்று தெரியவில்லை
உண்மையில்
என்ன செய்வதென்று தெரியவில்லை
நீலக் குழல்விளக்கே
இதற்கு முன்பு
இந்த வாழ்க்கையில்
ஏதேனும் இருந்ததா?
இதற்குப்பின்
ஏதேனும் இருக்கப்போகிறதா?
***
மாம்சத்தின் வாள்
மாம்சத்தின் வாளை
நீ தொடும் மறுகணம்
அதன் ரத்தவேட்கை
கண்விழித்து விடுகிறது
நான் உடைகளைத்
தளர்த்திக் கொள்வதுபோல
என் குரல்வளையை இறுக்கும்
தூக்குக் கயிற்றின் முடிச்சைத் தளர்த்திக் கொள்கிறேன்
மாம்சத்தின் வாளை
நீ உன் கையில் எடுத்துக் கொள்ளும்போது
அது தீர்க்கமாக சீண்டப்படுகிறது
அமைதியிழந்து காற்றில் அலைகிறது
நான் யாரோ ஒருவனைப்போல
என்னை விலக்கிக்கொள்ள விரும்பினேன்
நான் பயன்படுத்தப்படும்
ஒரு உடலாக மட்டுமே இருக்க விரும்பினேன்
மாம்சத்தின் வாளை
நீ முத்தமிடும்போது
அது என்னைத்தான் முத்தமிடுகிறாயா
என தடுமாற்றத்துடன் கேட்கிறது
நான் அந்தக் காட்சியைப்
புகைப்படம் எடுத்துக்கொள்ள நினைத்தேன்
அது பாதுகாப்பற்றது என்பதால்
இன்னும் பாதுகாப்பற்ற ஒரு வாக்கியத்தில்
அந்தக் கணத்தை நான் சேமித்துவிடுகிறேன்
மாம்சத்தின் வாளை
உன் நாவால் நீ ஈரப்படுத்தும்போது
சட்டென அது ஒரு கனவு காண்கிறது
எங்கெங்கும் நீலமாயிருக்கும் ஒரு கடல்
அந்தக் கனவு அக்கணமே நீங்கிவிடுகிறது
நான் யாராக அதுவரை இருந்தேனோ
அதை இரக்கமின்றி ரத்து செய்கிறேன்
எது அதுவரை அவ்வளவு கனத்ததோ
அதைக் கீழே இறக்கிவிடுகிறேன்
மாம்சத்தின் வாளை
நீ உறிஞ்சும்போது
உன் இமைகள் கவிகின்றன
யுகாந்திரங்களின் வன்மத்துடன்
உன் உடல் நடுங்குகிறது
நான் உன் தலையை
இறுகப் பற்றிக்கொள்கிறேன்
அது அப்போது உன் தலை அல்ல
ஒரு வினோத கிரகம் என்று தோன்றிவிடுகிறது
மாம்சத்தின் வாளை
முழுமையாக உன்னில்
செலுத்திகொள்ளும்போது
அது தன்னந்தனியாகப் பிரிந்து
உன்னிடமே வந்துவிடுகிறது
நான் முழுமையாக இழக்கிறேன்
நான் முழுமையாக இழக்கிறேன்
நான் முழுமையாக இழக்கிறேன்
நான் முழுமையாக இழக்கிறேன்
மாம்சத்தின் வாளை
நீ பயன்படுத்துவது
ஒரு உலோகத்தின் வாளைப்
பயன்படுத்துவதைவிட
பல மடங்கு ஆபத்தானது
பிறகு அது ஒருபோதும்
உறைக்குத் திரும்புவதே இல்லை
ஒரு இலக்கையும்
அடைந்து முடிவதும் இல்லை
***
பணிநீக்க உத்தரவு
எப்போதும்போல்
வீட்டிற்குக் கிளம்பும்போது
அவளது பணிநீக்க உத்தரவு
தரப்பட்டது
வருத்தமோ
கோபமோ இல்லாமல்
வழக்கமாகத் தரப்படும்
எதையோ ஒன்றைப்போல
அவள் இனி
அங்கே ஒருபோதும்
வரவேண்டியதில்லை என்பது
அவளுக்குச் சொல்லப்பட்டது
தான் இதற்கு ஆயத்தமாக இருக்கவில்லை
என்பதை அவள் சொல்லவிரும்பினாள்
உடனடியாக ஒரு நாளின்
அத்தனை பழக்கங்களையும் மாற்றிக்கொள்வது
சிரமம் என்று சொல்ல விரும்பினாள்
இந்த வேலை தனக்குப் பிடித்திருந்தது என்றும்
இங்கே எளிமையான பல உறவுகள் இருக்கின்றன
என்றும் சொல்ல விரும்பினாள்
ஆனால் அவள் எதையுமே
சொல்லவில்லை
அதை விவாதிக்கக் கூடாத
புனித ரகசியமாக மாற்றிவிடவேண்டும்
என்று அவளுக்குத் தோன்றியது
ஒரு காதல் கடிதத்தைப்
படிப்பதுபோலவே
அவள் தனது பணிநீக்க உத்தரவைத்
திரும்பத் திரும்பப் படிக்கிறாள்
தெளிவான வாக்கியங்களில்
புலப்படாத ஒன்று மிச்சமிருப்பதாகவே
அவளுக்குத் தோன்றியது
காமிராவின் லென்சிலிருந்து ஒரு காட்சி
தொலைதூரத்திற்கு விலக்கப்படுவதுபோல
தன்னைச் சுற்றியிருக்கிற
ஒவ்வொன்றும் எவ்வளவு விரைவாக
விலகுகிறது என்பதை
வியப்புடன் பார்க்கிறாள்
சக பணியாளர்கள்
அவள் கண்களைச் சந்திப்பதை
தவிர்க்கின்றனர்
அவளை
ஆறுதல்படுத்தும் பொருட்டு
கோபமாக எதையோ முணுமுணுக்கின்றனர்
அது அவர்களுக்குக்கூட
கேட்டதா என்பது சந்தேகம்
பணிநீக்க உத்தரவை
அப்போதுதான் பிடுங்கப்பட்ட
ஒரு தாவரத்தைப் பார்ப்பதுபோல
பார்க்கிறாள்
அது ஈரமாக இருந்தது
வெப்பமாக இருந்தது
வாசனையோடு இருந்தது
அது உறுதியான
மௌனத்தோடு இருந்தது.
ஆனால் அது
உண்மையில்
ஒரு பிடுங்கப்பட்ட தாவரம் அல்ல
அது தன் கைகளில்
கொஞ்சம் கொஞ்சமாக
வளர்வதை அவள் உணர்கிறாள்
வீட்டிற்குப் போய் சேர்வதற்குள்
அது உண்மையில் பெரிய மரமாகிவிடும்
என அவளுக்கு மிகவும் அச்சமாகவே இருந்தது
முதல் முதலாக
அந்தியின் மஞ்சள் வெயில்
எவ்வளவு அடர்த்தியானது
என்பதைக் கவனிக்கிறாள்
நாளைக் காலையில்
எவ்வளவு தாமதமாக
எழுந்துகொள்ள முடியுமோ
எழுந்துகொள்ளலாம்
நாளை மதியம்
ஆறிப்போன எதையும் சாப்பிட வேண்டியதில்லை
செய்யவேண்டியவையோ
செய்யத்தவறியவையோ
ஒன்றுமே இல்லை
துணி துவைப்பதற்காக
விடுமுறை நாட்களுக்குக்
காத்திருக்க வேண்டியதில்லை
திடீரெனெ
அவ்வளவு பிரமாண்டமாகிவிட்ட உலகம்
அவ்வளவு நிறைய கிடைத்த நேரம்
அவ்வளவு பொறுப்பற்ற தன்மை
அவளைக் கிளர்ச்சியடைய வைக்கிறது
வீடுகளை நோக்கி ஆவேசமாக நகரும்
இந்த சாயங்கால மனித வெள்ளத்தினூடே
எத்தனை பேர்
ஒரு பணிநீக்க உத்தரவுடன்
வீடு திரும்புவார்கள்
என்று நினைக்கத் தொடங்கினாள்
தன்னைப்போல
யாரவது ஒருவர்
நாளைக் காலை
இதே பாதையில் வரத் தேவையற்றவர்கள்
இருக்கிறார்களா
என ஒவ்வொரு முகமாக உற்றுப் பார்க்கிறாள்
இது ஒரு சிறிய பிரச்சினை
ஒரு காபி குடித்தால்
எல்லாம் சரியாகிவிடும் என்று
அவளுக்குத் தோன்றியது
ஒரு நல்ல காபி மட்டுமே
கடவுள்கள், மனிதர்கள் உருவாக்கிய
எல்லாப் பிரச்சினைகளையும்
தீர்க்கக்கூடியது
என்று நினைத்தபடியே
மீண்டும் ஒருமுறை
தனது பணிநீக்க உத்தரவைப்
படிக்கத் தொடங்குகிறாள்
***

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்
நாம் ஏன் இப்படி
இருக்கிறோம்
சதா முணுமுணுத்துக்கொண்டு
எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு
எதையாவது சுத்தம் செய்துகொண்டு
யாரையாவது சபித்துக்கொண்டு
எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு
எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு
எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு
ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு
தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு
யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு
ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு
கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு
நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு
நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு
கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு
மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று எப்போதும் யோசித்துக்கொண்டு
பொறுக்கிகளுக்குப் பயந்துகொண்டு
புகழுள்ள மனிதர்களை அனாவசியமாய்த் தெரிந்துகொண்டு
சதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு
எப்போதும் பருவநிலையினைப் பற்றி புகார் செய்துகொண்டு
சிறிய வருமானத்திற்கான சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு
அதிர்ஷ்டத்தின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு
யாருடைய சாவுக்காவது காத்துக்கொண்டு
நமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு
முட்டாள்களின் கவிதையைப் படித்துக்கொண்டு
குடிக்கும்போது அழுதுகொண்டு
புணர்ச்சியில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு
அடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு
சிறுவர்களையும் சிறுமிகளையும் ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டு
பௌர்ணமி தினங்களில் மனம் உடைந்து அழுதுகொண்டு
எதையாவது தொலைத்துக்கொண்டு
எதையாவது தேடிக்கொண்டு
தவறான முடிவுகளுக்காக வருந்திக்கொண்டு
தவறிப்போன சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக்கொண்டு
யாருடைய அன்புக்காகவாவது ஏங்கிக்கொண்டு
யாரையாவது இணங்கச் செய்துகொண்டு
கடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு
சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு
பிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு
தன் வழியே போகும் எறும்புகளை நசுக்கி அழித்துக்கொண்டு
கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு
போலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு
எதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய் திட்டமிட்டுக்கொண்டு
தூக்க மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு
மற்றவர்களின் கடமைகளை நினைவூட்டிக்கொண்டு
நமது இயலாமையை மறைக்க யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு
பூனைகளுக்கு உணவுதர மறுத்துக்கொண்டு
யாரையாவது இறுகப் பற்றிக்கொண்டு
உடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு
மலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு
யாருடைய உள்ளாடையையோ திருடி முகர்ந்துகொண்டு
பொது அறிவை வளர்த்துக்கொண்டு
எதற்காவது பயன்படுமென்று எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு
சொற்பொழிவுகளில் கைதட்டிக்கொண்டு
நிழல்களுக்குப் பயந்துகொண்டு
எப்போதும் யாரையாவது கண்காணித்துக்கொண்டு
உடல் பயிற்சியினால் மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு
எளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை நிரூபித்துக்கொண்டு
தங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு
அவமதிப்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க கற்றுக்கொண்டு
புகைப்படங்களைப் பாதுகாத்துக்கொண்டு
திறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு
வேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு
நம் பால்யத்தை நினைவுகூர்ந்துகொண்டு
ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு
வேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு
யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு
எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு
எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு
எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு
சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு
மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு
நாம் ஏன்
இப்படி இருக்கிறோம்
***
manushyaputhiran@gmail.com
9444366704
நன்றி:உயிர்மை
மார்ச் 2010
