கதையில் வரும் பெயரும் நீங்களும் ஒன்றா? (சிறுகதை)

என் நண்பர்களிடம் பலமுறை சொல்லி விட்டேன், ஆனால் யாரும் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.  அல்லது, நான் சொல்வதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லையோ என்னவோ. கதைகளில் நான் அவர்களின் பெயரையே போட்டு எழுதினால் சிலர் சண்டைக்கு வருகிறார்கள்; சிலர் நானா அப்படிச் செய்வேன், நானா அப்படிச் செய்வேன் என்று சொல்லிக் கதறிக் கொண்டே சவுக்கு மிளாறால் தங்களையே ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக் கொள்கிறார்கள்.  யாருக்கும் அது ஒரு கதை, நம்மிடமிருந்து சாரு கச்சாப் பொருளையே எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது மறந்து போய் விடுகிறது.  காரணம், அவர்கள் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள்.  அவர்களின் பெயர் அங்கே அவர்களுக்குத் தெரிகிறது.  மற்றவர்கள் தன்னைப் பற்றி மட்டமாக நினைத்து விடுவார்களே, நம் இமேஜ் என்னாவது, இத்யாதி, இத்யாதி பயங்கள்

கதையில் வருவதெல்லாம் பாத்திரங்கள், அவ்வளவுதான்.  நானே ஒரு பாத்திரம்தான்.  எது உண்மை, எது பொய்?

நம் சிந்தனை அல்லது நம் யோசனை எழுத்தாக மாறி கணினித் திரையில் வந்து விழும்போதே அது சிந்தனை என்ற வடிவத்திலிருந்து மாறி வேறோர் பொருளாக வேறோர் ஜீவியாக உருமாற்றம் அடைந்து விடவில்லையா?  பாலும் தயிரும் வேறு வேறு இல்லையா?  அதிலும் நான் எழுதுவது சீஸ்.  எத்தனை பெரிய மாற்றங்களுக்குப் பிறகு எழுத்து உருவாகிறது.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  இன்று காலை நடந்தது.  இன்று செவ்வாய்க்கிழமை இல்லையா?  செவ்வாய்க்கிழமை என்றால் வீடு அமீத் ஷா வந்த சென்னை போல் ஆகி விடும்.  ஏனென்றால், செவ்வாய்க்கிழமை தோறும் செல்லம்மாளுக்கு ஆன்மீக வகுப்பு உண்டு.  மாலை ஆறரைக்கு.  என்ன திடீரென்று செல்லம்மாள் என்கிறீர்களா?  புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையைப் படியுங்கள், புரியும்.  இங்கே நான்தான் பிரமநாயகம் பிள்ளை. 

அந்தக் கதைக்கும் என் வாழ்வுக்கும் இரண்டு முக்கிய வித்தியாசங்கள்.  இந்த செல்லம்மாள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறாள்.  நூறு வயது வாழ்வாள்.  நானும் ஜவுளிக்கடையில் கூலியாக வேலை செய்யவில்லை.  எழுத்தாளனாக நன்றாகத்தான் இருக்கிறேன்.  ஆனாலும் அந்த செல்லம்மாளுக்கும் இந்த செல்லம்மாளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.  அவளுக்கு உடம்பு.  இவளுக்கு வேறு என்னன்னமோ.  என்னென்னமோ என்பது என்ன என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது.  பிரமநாயகம் ஜவுளிக்கடை கூலி, நான் எழுத்தாளன் என்ற வித்தியாசம் இருந்தாலும் நானும் பிரமநாயகமும் அச்சில் வார்க்கப்பட்டவர்கள்தான் என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை.  ஏதேதோ சித்தாந்தக் காரணங்களால் கொஞ்ச காலம் நான் புதுமைப்பித்தன் மீது மனஸ்தாபம் கொண்டிருந்த காலகட்டத்தில் கூட நான் பிரமநாயகம் பிள்ளைதான் என்பதில் எனக்குச் சந்தேகமே இருந்ததில்லை. 

இது பற்றி நான் வேறொரு கதைதான் எழுத வேண்டும்.  அந்தக் கதையில் நான் நிர்வாணமாக வருகிறேன் என்பதால், இப்போது இந்தக் காலத்தில் வாசகர் மத்தியிலும் சொஸைட்டியிலும் என் இமேஜ் சற்று உயர்ந்திருக்கிறபடியால் லஜ்ஜை உண்டாகிறது.  ஆனாலும் அந்த நிர்வாணம் என் மீது திணிக்கப்பட்டது என்பதால் நான் குற்றவாளி அல்ல என்பதையும் முன்கூட்டியே உங்களுக்குத் தெரியப்படுத்தி விடுகிறேன்.  இந்தப் பின்னணியில்தான் அந்த நிர்வாணக் கதையை எழுதுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.  என்றாலும் எழுதி விடுவேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், கடவுளின் கருணை இருந்தால். 

என்ன பார்த்தோம், ஆ, செவ்வாய்க்கிழமை என்றால் அமீத் ஷா வந்த சென்னை மாதிரி ஆகி விடும் எங்கள் இல்லம்.  அந்த நாளின் பிரத்தியேகமான சட்டதிட்டங்களில் ஒன்று, அன்று நான் மீன் வாங்கக் கூடாது.  ஆசாரமெல்லாம் ஒன்றும் இல்லை.  செவ்வாய்க்கிழமை வேலைப் பளு அதிகம் என்பதால் மீன் போன்ற ஆடம்பரச் சமையலுக்கெல்லாம் நேரம் இருக்காது.  சொல்லப் போனால் சாம்பார் வைப்பதை விட மீன் குழம்புக்கு நேரம் கம்மிதான் ஆகும்.  இன்னொரு விஷயம், நான்தான் எடுபிடியாக எல்லா சமையல் வேலையையும் செய்து விடுகிறேனே, புளியைக் கரைத்து ஊற்றி பக்குவமாக உப்பு போட்டு தாளித்துக் கொட்டுவது ஒரு வேலையா?  சரி, விடுங்கள்.  எது எப்படியோ, செவ்வாய்க்கிழமைகளில் வீடு அல்லோலகல்லோலப்படும் என்பதே நிதர்சனம். 

பணிப்பெண்களாக இருந்தாலும் அன்றைய தினம் லீவு எடுக்கக் கூடாது, முடியாது.  எடுத்தால் அநேகமாக கல்த்தா தான்.  அப்படி என்னதான் செய்வார்கள் உங்கள் செல்லம்மாள் என்று நீங்கள் என்னைக் கேட்டால் என்னைப் படிப்பதை இந்த வாக்கியத்தோடு நிறுத்தி விட்டு என் பக்கமே வராமல் ஓடிப் போய் விடுங்கள்.  எத்தனை ஆயிரம் தடவை சொல்வது செல்லம்மாள் ஏன் பிஸியாக இருக்கிறாள் என்று.  இந்தக் கதையில் அதை நான் சொல்லப் போவதில்லை.  ஏனென்றால், அதையே சொல்லிச் சொல்லி சில நண்பர்கள் உங்கள் எழுத்தை இனிமேல் படிக்கவே போவதில்லை என்று ரத்தத்தால் சத்தியம் செய்திருக்கிறார்கள்.  இதே காரணம்தான்.  செல்லம்மாள் ஏன் எப்போதும் பிஸியாகவே இருக்கிறாள் என்பதை எழுதப் போனதால் வந்த வினை.  ஆகவே இந்தக் கதையில் என்ன ஆனாலும் சரி, செல்லம்மாள் ஏன் எப்போதும் பிஸியாகவே இருக்கிறாள் என்பதை நான் சொல்லப் போவதில்லை. 

சரி, தொலையட்டும்.  இது ரொம்பப் புதிய விஷயமாக இருப்பதால் சொல்லித் தொலைக்கிறேன்.  ஒருநாள் சாந்தோம் நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை அடித்துக் கொண்டு ஓடுகிறது என்று நகரசபை அதிகாரிகளை வரவழைத்து அதைச் சரி செய்து கொண்டிருந்தாள்.  போதுமா?  இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்.  ரத்தச் சத்தியம் செய்தவர்கள் ஞாபகம் வருகிறார்கள்.

இன்று காலை மேட்டருக்கு வருவோம்.  அதற்கும் முன்னால் என்ன சொன்னேன், ஞாபகம் உண்டோ?  என் நண்பர்கள் ஏன் இப்படி பெயரைப் போட்டால் சங்கடப்படுகிறார்கள்?  பெயர்தான் ஒன்றே தவிர கதையில் உருப் பெற்றிருக்கும் மனிதன் வேறு ஆள் இல்லையா?  இதோ பாருங்கள்.  நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.  செல்லம்மாள் பூனைகளுக்கு உணவு எடுத்துக் கொண்டு போவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.  Dry food ஒரு பாத்திரத்தில், நான் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கொள்ளும்போது அவித்து வைத்த சிக்கன் துண்டுகள் சூப்போடு ஒரு பாத்திரத்தில், wet cat food sachets மூன்று பாக்கெட், பத்து பூனைகளுக்கு பத்து கிண்ணம், கீழே தரைத் தளத்தில் பத்து பூனைகளும் பேண்டு வைப்பதை எடுத்து கவரில் போட்டு சுத்தம் செய்ய ஒரு குப்பை கவர் (விளக்குமாறு கீழேயே இருக்கிறது)… எல்லாவற்றையும் சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் பத்து டபரா செட்டைத் தூக்கி வருவது போல் தூக்கிக் கொண்டு செல்லம்மாள் கீழே கிளம்பிக் கொண்டிருக்கும்போது ஒரு போன்.  அவளுக்கு போன் வந்தால் நான் எடுக்க மாட்டேன்.  கார்த்திக் போனாக இருந்தாலும் சரி.  நாள் பூராவும் ஒருத்தருக்கு நீங்கள் எடுபிடி வேலை செய்து பார்த்தால் நீங்களும் அவருக்கு வரும் போனை எடுக்க மாட்டீர்கள், புரிகிறதா? எடு என்று சைகை செய்தாள்.  எடுத்தேன்.  பணிப்பெண். 

“சொல்லுங்கம்மா…”

“சார், நான் ஆஸ்பத்திரிக்குப் போகிறேன்… லேட்டா வருவேன்…”

நான் அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  கொலைப் பசி என்பதை விட அவசரத்துக்கு இன்னொரு காரணம், இன்று நூடுல்ஸ்.  நூடுல்ஸ் ஆறிப் போனால் மனிதன் சாப்பிட முடியுமா?  இன்று வீட்டில் இட்லி மாவு இல்லை.  நான் நூடுல்ஸுக்கு அடிமை.  ஆனால் இந்த இந்திய நூடுல்ஸைப் பன்றி கூட சாப்பிடாது என்பது என் திண்ணமான எண்ணம். தாய்லாந்தில் போய் நீங்கள் நூடுல்ஸ் சாப்பிட்டுப் பாருங்கள்.  அப்புறம் சொல்லுங்கள். 

”சரிம்மா…”

“என்னப்பா… என்னவாம்?”

செல்லம்மா குரலில் பதற்றம்.  நேற்றே பணிப்பெண் ஆஸ்பத்தரிக்குப் போய் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  செவ்வாய்க்கிழமை போக வேண்டாம் என்று சொல்லியிருந்தாள் செல்லமாள். 

“தடுப்பூசி போடப் போறாங்களாம்… லேட்டா வர்றாங்களாம்…”

சொல்லி விட்டு பன்றி கூட சாப்பிடத் துணியாத அந்த இந்திய நூடுல்ஸை சாப்பிட எத்தனித்தேன்.  உடனே சர்வர் சுந்தரம் எல்லா காப்பி டபராக்களையும் எடுத்து வைப்பது போல் தன் தளவாடங்கள் அனைத்தையும் மேஜை மேல் வைத்து விட்டு போனை வாங்கி மீண்டும் பணிப்பெண்ணுக்கே டயல் செய்தாள் செல்லம்மாள். 

பேசி விட்டு “அட ஏன் சாரு, வாய்வுப் பிரச்சினைக்காக ஆஸ்பத்தரி போயிருக்காங்களாம்.  லேட்டா வர்றாங்களாம், நான் பயந்துட்டேன், இன்னிக்குப் போய் கொரோனா தடுப்பூசி போட்டால் கிளாஸ் என்ன ஆகிறது?” என்று கேட்டுக் கொண்டே அந்தப் பூனைத் தளவாடங்களை எடுத்துத் தன் கைகளில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க ஆரம்பித்தாள் செல்லம்மாள்.  ஒரு அம்மாள் இத்தனை கஷ்டப்படுகிறாள், நீயும் கீழே போய் அவர்களுக்கு உதவி செய்வதற்கென்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?  அப்படியென்றால் நீங்கள்… வேண்டாம்.  சாபம் கொடுத்தால் சாபம் கொடுத்தவரையும் பாதிக்குமாம்.  பாகவதத்தில் போட்டிருக்கிறது. 

ஆனால் இந்தக் கதையில் நீங்கள் கவனிக்க வேண்டியது,  ரெண்டே பேரிடம் ஒரு முப்பது வினாடி உரையாடல் எப்படியெப்படி மாறிப் போனது?  அப்படியிருக்கும்போது… இப்போது கதையின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.   

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai