ஓர் எதிர்வினை

அன்புள்ள சாரு அவர்களுக்கு,

“கதையில் வரும் பெயரும் நீங்களும் ஒன்றா?” என்ற சிறுகதையைப் படித்தேன். வழக்கம் போல் நீரோட்ட நடை. நிஜத்தில் திரியும் மனிதர்களை எடுத்து கதையில் புனையும் போது ஏ‌ற்படு‌ம் ஒரு மாற்றத்தை இக்கதை சொல்கிறது. உங்கள் சிந்தனையுடன், நீங்கள் கண்ட மனிதர்களை உரசுவதில், புது அர்த்தம் ஒன்று பிறக்கிறது.
வேறொரு பார்வையை இக்கதை அளிக்கிறது. நம் பெயரும், நாமும் ஒன்றா? இக்கேள்வியை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று, ஒருவன் பெயர் மதி என்று இருக்கும். ஆனால், அவன் முட்டாளாக இருக்கலாம். இவ்வாறு மிகவும் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

இரண்டு, சமுதாயம் மனிதனை பெயரைக் கொண்டு அடையாளப் படுத்துகிறது . அவனுடைய மானம், புகழ் எல்லாம் அந்தப் பெயருடன் ஒட்டிக் கொண்டு இருக்கும். நாள் போக போக, ஒருவன் செயலில் கவனத்தை அளிக்காமல், தன் பெயரை எவ்வாறெல்லாம் உயர்த்தலாம் என முயற்சிக்கிறான். குறைந்தபட்சம் பாதகம் வராமலாவது இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஆதலால், பெயர் என்பது வெறும் பெயர் மட்டும் இல்லமால் ஆகிறது.
“மற்றவர்கள் தன்னைப் பற்றி மட்டமாக நினைத்து விடுவார்களே, நம் இமேஜ் என்னாவது, இத்யாதி, இத்யாதி பயங்கள்.”

இங்கே மற்றவர்கள் என்பது உண்மையில்லை. நம் மனதில்தான் மற்றவர்கள் என்ற ஒன்று உள்ளது. மற்றவர்கள் நம்மை எப்படி பார்க்கவேண்டும் என்று நாம் நினைத்து, அதற்கேற்றவாறு நடக்கிறோம். மனதில் இல்லமால் இருப்பவர்களாக இருக்கும் மற்றவர்களுக்காக வாழ ஆரம்பிக்கிறோம். பின், அந்தப் போலியான ஒரு பிம்பத்தைப் பாதுகாக்கிறோம்.

கதைக்கும் நிஜத்துக்கும் இருக்கும் இடைவெளி போன்று மனதுக்கும் நிஜத்துக்கும் இடைவெளி இருப்பது தென்படுகிறது. அப்படிப் பார்த்தால் கதைக்கும் மனதுக்கும் வித்தியாசம் இல்லையோ?. வித்தியாசம் இல்லையென்றால் மக்களும் நிஜத்தில் பாத்திரங்களாகத்தான் இருக்கிறார்கள். கதையில் வாழ்கிறார்கள். ’கதையில் வரும் பெயரும் நீங்களும் ஒன்றா?’ என்று இருந்தது இப்போது நீங்கள் நாங்கள் என்பதே ஒன்று உண்டா? என்று கேட்கும் வகையில் மாறுகிறது.
இப்போது நம்மை நாமே கீழ்வரும் கேள்வியைக் கேட்க வேண்டும் போல,
“எது உண்மை, எது பொய்?” 
இவ்வாறு பல்வேறு விதமாக சிந்திக்க வைப்பதாக இருந்தது இச்சிறுகதை. 

உங்கள் வாசகன், 

தினேஷ்