சினிமாவும் எழுத்தும்…

வணக்கம்.

எனது முந்தைய மின்னஞ்சலில் நீவிர் அதிகம் நேரம் செலவிடக் கூடாது என்பதனாலேயே அதில் சுருக்கமாக அறிமுகத்துடன் கர்ணன் திரைப்படத்தைப் பற்றி உங்களது எண்ணங்களை கேட்டபடி அதனை அமைத்திருந்தேன். அதனாலேயே நீங்கள் அவ்வாறு பதில் அளித்து இருப்பீர்களோ என்று தோன்றியது. பின் அதில் நான் சினிமாக்காரன் என்று குறிப்பிட்டு அதனால் கூட அவ்வாறு நீங்கள் பதில் எழுதிஇருப்பீர்கள் என்று தோன்றியது.

பிறகு அம்மின்னஞ்சலில் நான் உங்களைப் பிடிக்கும் என்று நான் பதிவிட்டதை உங்கள் ப்ளாகில் உங்கள் எழுத்துப் பிடிக்கும் என்று தவறாக பதிவிட்டு விட்டீர்கள். ஆம் தங்களது நேனோ சிறுகதை புத்தகத்தில் முதல் சில கதைகளை படித்ததில் உங்கள் எழுத்து எனக்குப் பிடிக்கும். தொடர்ந்து படிக்கையில் அதில் ஒரு சிறுகதை எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதனாலேயே வெட்டு ஏற்பட்டுவிட்டது. நான் குடி போதையில் உளறினால் கூட அப்படி ஒன்றை எழுதி இருக்க இயலாது. இன்னும் சொல்லப்போனால் பெரும் எழுத்தாளர்கள் ஒரு படி மேலே சென்று போதையில் வாந்தி எடுத்தால் கூட அப்படி ஒன்றை நிகழ்த்தி இருக்க இயலாது என்ற பாணியில் அச்சிறுகதை இருந்ததனால் அதன் அர்த்தங்களும் குறியீடுகளோ எனக்கு புரியாததால் என்னால் தொடர முடியவில்லை. Jodorowsky படங்கள் போன்ற ஓர் படைப்பு என்று நினைத்துவிட்டு அராத்துவின் ஆட்டோமொபைல்ஸ் பற்றிய சிறுகதைத் தொகுப்பிற்கு தாவி விட்டேன். அது என்னை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தமையால் அதனை அன்றே முழுவதையும் படித்தும்முடித்துவிட்டேன். ஒன்றை முழுமையாக புரியாமலே அதனை தொடர இயலாத என்னுடைய தன்மையே இதற்குக் காரணமாகும். பின்னர் தங்களது மற்ற இலக்கியங்களைப் படிக்கும் நேரம் கூடி வரவில்லை. நான் தங்களை படித்தமட்டில் தங்களது புத்தகங்களை பெரிதும் படித்ததில்லை. சினிமாவையே எனது வாழ்வாக நினைப்பதினால் உங்கள் பிளாக்கில் வரும் திரைப்பட விமர்சனங்களை மட்டும் தேடி உன்னிப்பாக படித்து வந்தேன். மேலும் யூட்யூபில் நீங்கள் திரைப்படம் பற்றி பேசிய வீடியோக்களை தேடி உன்னிப்பாக கவனித்து வந்தேன். மற்றும் zoom video call-ல் anthromorphism பற்றி பேசியது எனக்கு பெரும் தெளிவினை ஏற்படுத்தியது. இவ்வாறு கலை பற்றிய விஷயங்களை தேடிப் படிப்பதும் பார்ப்பதுமாய் இருந்ததில் கர்ணன் திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. அத்திரைப்படம் என்னை மிகவும் உலுக்கியது மேலும் கண்ணீர் விடச் செய்தது. இருப்பினும் திரைக்கதையில் சில குறைபாடுகள் இருப்பது போல் தோன்றியது. எனவேயே அத்திரைப்படத்தின் விமர்சனம் பற்றி உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். நீங்கள் அத்திரைப்படத்தை பார்த்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. பார்த்தும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் கூட நினைத்திருக்கலாம். நான் கற்றுக் கொள்வதற்காகவே அதை கோரினேன். மேலும் முகமூடி பக்கங்களை பற்றி மாரி செல்வராஜ் இடம் கேட்டு கற்றுக்கொள்ள ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக கேட்கப்படும்.

இப்படிக்கு

முகமூடி பக்கங்களை நோக்கி சரத்.

நன்றி

சரத்,

எப்போதும் பெரியவர்களிடம் பேசும்போது நீவிர் என்ற வார்த்தையைத் தவிருங்கள்.  அது தமிழில் நீ என்று ஒருமையில் விளிப்பதற்குச் சமம்.  நீங்கள் அறியாமல்தான் அந்த வார்த்தையைப் பிரயோகப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதால் சொல்கிறேன்.

தமிழ் சினிமாக்காரர்களின் ஆழ்மனதிலேயே எழுத்தாளர்கள் தம் வீட்டு ஏவல் பிராணி என்பதாகத்தான் ஒரு எண்ணம் படிந்து கிடக்கிறது.  நேற்று நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.  அவர் ஒரு இயக்குனர்.  என்னுடைய நெருங்கிய நண்பர்.  மிகவும் நெருங்கிய நண்பர் என்றே சொல்ல வேண்டும்.  மிகவும் நல்லவர்.  சினிமா உலகின் மாசு எதுவும் அண்டாதவர்.  காரணம், அவருடைய குடும்பப் பின்னணி.  ரொம்ப நாள் கழித்து அவருடன் நேற்று ஒரு சிறிய போன் உரையாடல்.  கடைசியாக அவர் ஒரு விஷயம் சொன்னார்.  அதை அவர் சொன்னதன் காரணம், என் மீதான அவருடைய பிரியத்தின் வெளிப்பாடு.  வாத்ஸல்யத்தின் வெளிப்பாடு.  “நேரம் கிடைக்கும்போது நம்ம ஆஃபீஸ் பக்கம் வாங்களேன் சார்.”  உடனே நான் “ஆஃபீஸ் எங்கே இருக்கு?” என்று கேட்டேன்.  விருகம்பாக்கம் என்றார்.  ஓ, வந்திருவோம் என்று முடித்தேன்.

உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.  சினிமாக்காரர்களின் ஆழ்மன வெளிப்பாடு இது.  நான் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வருகிறேன் தெரியுமா?  என் எழுத்தில் பரிச்சயமுள்ளவர்களுக்குத் தெரியும், சீலேயில் நிகானோர் பார்ரா (Nicanor Parra) என்று ஒரு கவிஞர் இருந்தார். இவர் பிறந்தது 1914.  இறந்தது 2018.  ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்தவர்.  வாழ்ந்தது 105 ஆண்டுகள்.  இவரைச் சந்திப்பதற்கு தென்னமெரிக்க நாட்டின் அதிபர்கள் தேதி கேட்டு விட்டு மாதக் கணக்கில், வருடக் கணக்கில் காத்திருந்தார்கள்.  இங்கே நம்மூருக்குப் பக்கத்தில் கேரளத்திலும் அதேதான் நிலை.  ஒருநாள் ஒரு இயக்குனர் மோகன் லாலிடம் ஃபோனில் கேட்கிறார், நீர் சாரு நிவேதிதாவைப் படித்திருக்கிறீரா?  எதிர்ப் பக்கத்திலிருந்து இல்லை என்று பதில் வருகிறது.  (மம்முட்டி போல் லால் படிப்பவர் அல்ல).  உடனே இயக்குனர் “நீரெல்லாம் ஒரு மனுசனாய்யா?” என்கிறார்.  ஒருவேளை என்னிடம் பந்தா காண்பிப்பதற்காகக் கூட அந்த மூத்த இயக்குனர் இப்படி ஒரு சீன் போட்டிருக்கலாம்.  ஆனால் இப்படித்தான் நடந்தது.  மோகன் லால் நேரில் இல்லாததால் எனக்கு தர்மசங்கடம் இல்லாமல் ஆயிற்று.  கொஞ்சம் எனக்குக் குழப்பம்தான்.  ஆனால் மம்முட்டியை நேரில் பார்த்து, அவர் என்னிடம் காட்டிய பணிவையும் மரியாதையையும் பார்த்தபோது அந்த இயக்குனர் பேசியதன் பின்னணியைப் புரிந்து கொண்டேன். 

கேரளத்தில் எழுத்தாளனைக் காண முதலமைச்சர்தான் காத்திருக்க வேண்டும். 

என்னை அலுவலகத்துக்கு வரச் சொன்ன நண்பர் அன்பு மிகுதியினால்தான் அப்படிச் சொன்னார்.  தன் பிரியத்தை வெளிப்படுத்த அவருக்குத் தெரிந்த ஒரு உபாயம் அது.  இன்னும் பல விஷயங்களை நேரில் கலந்து ஆலோசிக்கவும் அழைத்த ஒரு பிஸினஸ் அழைப்பாகவும் இருக்கலாம்.  ஆனாலும் – கமலின் நண்பரான அந்த இயக்குனர் – இதேபோல் கமலிடம் கேஷுவலாக “நம்ம ஆஃபீஸ் பக்கம் வாங்களேன் சார்” என்று கூப்பிட முடியுமா?  இதுதான் என் கேள்வி.  ரஜினிகாந்திடம் இப்படிச் சொல்ல முடியுமா?

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்கள் துறையில் செய்துள்ள சாதனைகளை விட என் துறையான எழுத்தில் நான் செய்திருக்கும் சாதனைகள் அதிகம்.  கேரளத்தில் கல்லூரி மாணவர்கள் என் நூல்களைப் பயின்று வருகிறார்கள்.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே கோட்டயம் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரி நாவல் பற்றி அந்த மாணவர்கள் என்னோடு சேர்ந்து கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள். 

என் பயோடேட்டாவை நானே சொல்லிச் சொல்லி எனக்கு அலுத்து விட்டது.  அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். 

சமீபத்தில் கற்றது தமிழ் ராமுடன் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி விரிவாக எழுதியிருந்தேன்.  முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி ஒரு அரை நிமிடம் அவரிடம் ஒரு காணொலி கேட்டேன்.  அவர் சொன்னால் நாலு பேர் படிப்பார்கள் என்று கேட்டேன்.  அவருக்கு நான் பல ஆண்டுகளாக பிராண்ட் அம்பாஸடராக இருந்திருக்கிறேன்.  நட்பு மட்டும் காரணம் அல்ல.  அவர் படங்கள் எனக்குப் பிடித்தவை என்பதால்.  தங்க மீன்கள் என்ற ஒரே ஒரு படத்தைத் தவிர.  அவர் கூப்பிட்ட குரலுக்கு தரமணிக்கு காணொலிப் பேட்டிகள் தந்தேன்.  என் வீட்டில்தான் அவரது உதவியாளர்கள் வந்து எடுத்துக் கொள்வார்கள்.  அவர் படங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவேன்.  ஆனால் முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி அரை நிமிடம் பேசுங்கள் என்றேன்.  முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி நண்பர் சாரு நிவேதிதா சொல்லக் கேள்விப்பட்டேன், படிக்க ஆர்வமாக இருக்கிறேன் – இவ்வளவுதான்.  ராம் பதில்: “அது சரியா இருக்காது சார்.  வேணாம்.  ஒரு வாரத்துல பரத்வாஜ் ரங்கன் ஒரு பேட்டி எடுக்கிறாப்ல.  அதுல வேணும்னா ஒரு வரி கோத்து விட்டுர்றேன்.” 

அதாவது ஒரு இயக்குனர் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் ஒரு குறிப்பிட்ட நூலை ப்ரமோட் பண்ணுவது தப்பாகப் போய் விடுமாம். அப்புறம் நீர் ஏன் என்னை உம்முடைய படத்துக்கு அணுகுகிறீர்? ஒரு பேட்டியினூடாகக் கோர்த்து விடுகிறாராம். நான் என்ன வேசி வீட்டுக்கா கூப்பிட்டேன், ரகசியமாகச் செய்வதற்கு?

இது பற்றி நான் குமுதத்தில் எழுதியதும், அடித்துப் பிடித்துக் கொண்டு அஞ்சே நிமிடத்தில் போன். அதில் சொன்ன விஷயம்தான் அட்டகாசம். நானே உங்கள் வீட்டுக்கு வந்து புத்தகத்தை வாங்கிக் கொள்கிறேன் சார்.

அதாவது, அண்ணன் என் வீட்டுக்கு வருவதுதான் எனக்குத் தரப்படும் ஆகப் பெரும் கௌரவம். பிறகு புத்தகத்தைப் படித்து விட்டு போனில் ஆகா ஓகோ என்று ஒரு பத்து நிமிடம் பாராட்டு கிடைக்கும். நான் ஒரு போக்கத்த பயல். இதை அப்படியே எதிலாவது எழுதி விடுங்கள் ராம், அல்லது, விடியோவில் பேசிடுங்க என்றால் ஆள் காணாமல் போய் விடுவார். இப்படித்தான் நிலவு தேயாத தேசம் புத்தகத்துக்கு நடந்தது. வீட்டுக்கு அவர் படத்துக்கு ப்ரமோஷன் விடியோவுக்காக வந்தவரிடம் அந்த நூலைக் கொடுத்தேன். ஒரே வாரத்தில் படித்து விட்டு ஆஹா ஓஹோ போன். இதையே ஒரு விடியோவில் அனுப்புங்கள் என்றால் ஆள் காணமல் போய் விட்டார். எத்தனையோ முறை போன் செய்து கேட்டும் பயன் இல்லை.

இந்தப் பின்னணியில் கர்ணன் விமர்சனத்தைப் பாருங்கள்.  நான் ஏன் கர்ணன் படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டும்?  மாரி செல்வராஜ் முகமூடிகளின் பள்ளத்தாக்கு படித்தாரா?  விமர்சனம் எழுதினாரா?  எழுதினார் என்றால் (திட்டக் கூட செய்யலாம்) நானும் கர்ணனுக்கு எழுதுகிறேன். 

இனிமேல் சினிமாக்காரர்களோடு எனக்குக் கொடுக்கல் வாங்கல்தான்.  நீங்கள் ஒரு வரி எழுதினால்  நான் முழுநீள மதிப்புரை எழுதுகிறேன்.  ஆனால் பரஸ்பர முதுகு சொறிதல் வேண்டாம்.  நீங்களும் சுதந்திரமாக இருங்கள்.  நானும் அப்படியே.  ஆனாலும் ஒருத்தர் கூட முன்வர மாட்டார்கள்.  ஏனென்றால், அவர்களுக்குத் தேவை இலவச சேவை.  காரணம், எழுத்தாளர்கள் இங்கே ஏவல் பிராணிகள். 

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai