அய்யாசாமியும் ஸல்மான் ரஷ்டியும்…

ஒரு இசையமைப்பாளர் என்னைப் பற்றி ஒரு பிரபல பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக எனக்குப் பல கடிதங்கள் வந்துள்ளன.  அந்த இசையமைப்பாளர் பற்றி எதுவும் எழுதக் கூடாது என்று முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளாகவே அதைக் கடைப்பிடித்தும் வருகிறேன்.  அதனால் எனக்கு வந்துள்ள கடிதங்களுக்கு  நான் பதில் எழுதவில்லை.  என்னுடைய விலை மதிக்க முடியாத நேரம் இது போன்ற வெட்டிப் பேச்சுக்களில் கழிவதை நான் விரும்பவில்லை.  அதேபோல் ஒரு சாமியாரைப் பற்றியும் நான் வாயே திறக்காமல் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.  பெயரைச் சொன்னாலே பெங்களூர் கோர்ட்டில் கேஸ் போட்டு என்னை பெங்களூருக்கு இழுத்தடிக்கிறார் சாமியார்.  என்னுடைய விலை மதிக்க முடியாத நேரம் பெங்களூருக்கு அலைவதிலும் எனக்கு இஷ்டமில்லை.  செய்வதற்கு எனக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது.

உலகின் நம்பர் ஒன் பதிப்பாளர் என்னிடம் இரண்டு நாவல்களை ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்.  கேட்டு ஒன்றரை மாதம் ஆயிற்று.  எக்ஸைலை ஏப்ரலில்தான் தருவேன் என்று சொல்லி விட்டேன்.  தேகம் அளவில் மிக மிகச் சிறியது என்பதால் ஜனவரி முதல் வாரம் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டேன்.  ஆனால் இன்னும் எடிட்டிங் வேலை நான் நினைத்தது போல் இல்லாமல் இழுத்துக் கொண்டு போகிறது.  literary agent பின்னால் நாய் அலை அலைய வேண்டுமே என்று விசனத்தில் இருந்தேன்.  நான் வணங்கும் மஹா அவ்தார் பாபாவும் Mahanta வும் அந்தப் பிரச்சினை இல்லாமல் பதிப்பாளரே என்னிடம் கேட்கும்படியான நல்வினையை அருளி விட்டார்கள்.

ஸல்மான் ரஷ்டி நம்மூர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தாலியறுத்தான் சந்து முனையில் உள்ள டீக்கடைக்கு வந்து டீ குடித்து விட்டு காசு கொடுத்தால் டீக்கடைக்காரர் திரு அய்யாசாமி “சில்லறை இல்ல பாயி… சில்லறையாக் குடு” என்றுதானே சொல்வார்?  ”அய்யாசாமிக்கு என்னை அடையாளம் தெரியாமல் போயிற்றே?” என்று ஸல்மான் ரஷ்டி புலம்ப முடியுமா சொல்லுங்கள்?

Comments are closed.