தலைப்பில்லாத குறுங்கதை: காயத்ரி ஆர்.

“பெஸ்ட் மாம்பழம் ஆஃப் த இயர்” என்று சப்புக் கொட்டிக்கொண்டு என் கணவர் சாப்பிடவும் ஆசையாக நானும் ஒரு துண்டு வாயில் போட்டுக் கொண்டபோதுதான் சனி இன்னும் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருந்தது உறுதியாயிற்று. எனக்கு அந்தத் துண்டில் ஆரஞ்சு வாசனை வந்தது. பெருங்காயத்தில் முட்டைக்கோஸ் வாசனை வந்தது. சாக்லேட்டில் தீய்ந்த வாசனை. எல்லா பதார்த்தங்களின் வாசனையும் வேறாகிப் போனது. எல்லோரிடமும் புலம்பிப் புலம்பி எனக்கு மாளவில்லை. எதையாவது சாப்பிட்டால் மாறும் என் முகபாவத்திற்காக சுற்றியிருப்பவர்கள் ஆர்வமாக என் முகத்தையே பார்க்கத் தொடங்கினர்.

கோவிட் பூச்சி செய்த அழிச்சாட்டியம் மூன்று மாதமாகியும் மிச்சமிருப்பது தெரிந்தது. விளக்குமாற்றால் அடித்த கரப்பான் பூச்சியாய் மருத்துவமனையில் ஒரு மூக்கோட்டை ரூமில் கிடந்த போதே தெரிந்து விட்டது, இனி நம் உடம்பு பழைய உடம்பாய் இருக்கப் போவதில்லையென்று. கண்டதையும் ஓட்டிக் கொண்டிருக்கும் மனம் அப்போது நிச்சலனமாக இருந்தது. என்னால் எதையுமே உணர முடியவில்லை. Mental fogging to the max. ஜகன்மோகினி படத்தைப் பார்த்தாலே இரவில் விளக்கைப் போட்டுக் கொண்டு தூங்கும் எனக்கு அன்னபெல் பார்த்தும் ஒன்றும் தோன்றாதபோது நிச்சயமாகியது இது சாதாரண பூச்சியில்லையென்று. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபின் இரண்டு வாரங்கள் நரகமாகிப் போனது. தீவிரமான களைப்பும், brain foggingகும் , இருமலும் அடி துவம்சம்.

ஒரு நாள் கண் ஓரங்களில் திடீரென அரிக்க ஆரம்பித்தது. இமை வேர்களில் சொரசொரவென்று பொடியாகத் தேய்க்கும்போது உணர்ந்தேன். கண்களைத் தேய்த்துத் தேய்த்து பெரிதாகக் கண்கட்டி வந்துவிட்டது. கண் டாக்டர் “கோவிடுக்கு சாப்பிட்ட ஸ்டிராய்ட் மருந்துகள் இம்யூனிட்டியை கம்மியாக்கியிருக்கும். அதனால் கண்களில் இருக்கும் பாக்டீரியா…”என்று சொல்லிக் கொண்டுபோக மறுபடி நான் சாப்பிட வேண்டியிருக்கும் ஆண்டிபயாட்டிக்குளை நினைத்து நொந்து கொண்டிருந்தேன்.

வாசனையோ சுத்தமாக இல்லை. வீட்டுத்தொட்டியில் இருந்த மல்லிப்பூச் செடியில் பதிமூன்று பூக்கள் இருந்தும் வாசனை தெரியாததால் செடிக்குள் தலையைவிட்டு மூக்கைக் குத்திக்கொண்டதுதான் மிச்சம். ம்ஹும்…தம்மாத்தூண்டு வாசனைகூட தெரியவில்லை. வாசனை இல்லையென்றால் ருசி கேட்கவே வேண்டாம். எப்படியோ ஒரு சுபமுஹூர்த்த நாளில் சுமாராக வாசனையும், ருசியும் தெரிய ஆரம்பித்தவுடன் சந்தோஷப்பட வக்கில்லாமல் கோக்குமாக்கான வாசனையும் ருசியும்.

“மா, இதுக்கு பேரு parosmia. ந்யூரான்ஸ் சரியான செய்தியை மூக்கிலிருந்து மூளைக்குக் கொண்டு போவதில் குழப்பம்.”

“உங்கம்மாக்கு அது ஒண்ணும் பிரச்சனையில்லடா. பழக்கம்தான்.”

“என்ன?…” காதும் மந்தமாகிப் போனது.

“ஏங்க பல்லு லைட்டா அரிக்கற மாதிரி இருக்கு…”

“பல்லா?…”

“இல்ல…பல்லு மேல…ஈறுல…”

அப்போது வேகவேகமாக உள்ளே வந்த அநிருத் என்னைப் பார்த்துக் கேட்டான்.

“மா, ஒரு சந்தேகம்…மேஜிகல் ரியலிஸம்னா என்ன?”

“என் வாழ்க்கை டா…”