எட்டி எழுகவென்றறம்!

ஜெயமோகன் எழுத்துகளை நான் கொஞ்சம்தான் படித்திருக்கிறேன்.  அநேகமாகத் தமிழ் தெரிந்த யாருமே இப்படித்தான் சொல்லிக் கொள்ள முடியும்.  அவர் அத்தனை எழுதியிருக்கிறார்.  நான் படித்த கொஞ்சத்தில் அறம் ஒரு மறக்க முடியாத கதை.  ஏனென்றால், அது என் கதை.  அதில் வரும் ஒரு எழுத்தாளன் நான்தான்.  ஜெயமோகன் கற்பனை பண்ணினது வேறு நபர்.  ஆனால் படித்த எனக்கு அது நான் என்று தோன்றியது.  காரணம், அதை நான் வாழ்ந்திருக்கிறேன்.  அந்தக் கதையில் ஒரு ஆச்சி வருகிறாள்.  என் கதையில் ஆச்சி வரவில்லை.  அறம் பாடி விட்டு வந்து விடுவேன்.  ஒரே ஒருமுறை அறம் பாடியிருக்கிறேன்.  என்னைக் கெடுத்தவன் குலமறுந்தது. குலமற வேண்டும் என்று பாடினதில்லை.  வயிறு பற்றி எரியும்.  அறம் எழும்.  குலம் அறும்.

இது என் அனுபவம்.

ஏனென்றால், எழுத்து எனக்கு தவம்.  உனக்கு அது மலம் என்றால் அது உன் பாடு.  உனக்குப் பிரச்சினை என்றால் வேறு வழியில் போ.  தவம் செய்பவனின் முகத்தில் மூத்திரம் போனால் இயற்கை உன்னைத் தண்டிக்கும்.  சில சமயம் தண்டிக்காமலும் போகும்.

அதற்கும் ஜெயமோகன் கதைதான்.  அந்தக் கதையும் எனக்குப் பிடித்த கதை.  இரு நோயாளிகள்.  அதில் வரும் ஒரு  நோயாளி புதுமைப்பித்தன்.  உங்களுக்கு எப்படி காசநோய் வந்தது என்று ஒருத்தர் கேட்பார்.  ”இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேரும் என் முகத்தின் மீது காறித் துப்பினார்கள். அதனால் காச நோய் வந்தது” என்பார் புதுமைப்பித்தன்.

இதுவும் என் கதை என்பதால் எனக்குப் பிடித்துப் போயிற்று.  ஒரே வித்தியாசம், எனக்குக் காசம் வந்து நாற்பதிலேயே சாகவில்லை.

இன்று ஒரு சிறுவன் என் மீது காறி உமிழ்கிறேன் என்று எழுதியிருக்கிறான்.  அவன் ஜெயமோகனின் தீவிர வாசகன் என்பது ஒரு நகைமுரண். 

இரு நோயாளிகளை விட அறம் சிறந்த கதை.  காரணம், அது என் கதையோடு ரொம்பவும் ஒட்டிப் போகிறது.  அதில் வரும் ஒரு எழுத்தாளன் நூறு புத்தகங்களை ஒரு செட்டியாருக்காக எழுதிக் கொடுக்கிறான்.  செட்டியார் அவனுக்கு 3000 ரூ. தர வேண்டும்.  தர மறுத்து விடுகிறார்.  அந்தப் பணத்தை நம்பித்தான் எழுத்தாளன் தன் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயத்திருக்கிறான்.  செட்டியாரின் காலைப் பிடித்துக் கேட்கிறான்.  பணம் மறுக்கப்படுகிறது.  தொடர்ந்து எழுத்தாளன் தனக்கு நேர்ந்ததைச் சொல்கிறான்.

‘என் வயத்திலே அடிச்ச நீயும் உன் பிள்ளகுட்டிகளும் வாழ்ந்திடுமா…வாழ்ந்தா சரஸ்வதி தேவ்டியான்னு அர்த்தம்’னு சொல்லிட்டே சட்டுன்னு பேனாவ எடுத்து ஒரு வெண்பாவை எழுதி அவ தட்டிலே இருந்த இட்டிலிய எடுத்து பூசி அவ வீட்டு கதவிலே ஒட்டிட்டு வந்திட்டேன்.’  

அந்த வெண்பாவின் இறுதி வரி:

’செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்.’ 

எல்லா சிறுபத்திரிகை எழுத்தாளர்களைப் போலவும் கூலி இல்லாமல் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தபஸ் போல் எழுதி வருகிறேன்.  இப்போது ஔரங்கசீப் நாவலுக்காக நாலு மணி நேரம்தான் உறக்கம்.  திரும்பவும் சொல்கிறேன், என் எழுத்து உனக்கு மலமாகவும் தெரியலாம்.  சுஜாதாவுக்கு அப்படித்தான் தெரிந்திருக்கிறது.  ஆனால் நீ யாரடா என்னைத் திருடன் என்று சொல்லவும், காறி உமிழவும்?  நீ என் மீது காறி உமிழும்படி நான் என்ன செய்தேன்?  இத்தனைக்கும் இவன் வயது முப்பதாம்.

எனக்கு வெண்பா பாடத் தெரியாது.  காலையில் அதைப் படித்ததிலிருந்து நெஞ்சு வலித்துக் கொண்டிருக்கிறது.  அதற்கான கூலியை அந்தச் சிறுவன் பெறுவான். பெறாவிட்டால் சரஸ்வதி தேவ்டியான்னு அர்த்தம்…