புதிய புத்தகங்கள்

புத்தக விழா வருகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய புதிய புத்தகங்கள் எதுவும் புத்தக விழாவிலோ அதற்குப் பிறகோ வரவில்லை.  கடைசியில் வந்த புத்தகம் நிலவு தேயாத தேசம்தான்.  இடைப்பட்ட காலத்தில் நான் எத்தனையோ எழுதி விட்டேன்.  என் வாழ்நாளில் நான் அதிகம் எழுதியது என்றால் புதிய புத்தகங்கள் வராத இந்த கால கட்டம்தான்.  தியாகராஜா நாவல் 200 பக்கங்கள் – இன்னும் ஒரு நூறு எழுதினால் முடிந்து விடும்.  அசோகா 300 பக்கங்கள் – குறிப்புகள் 1000 பக்கங்கள் எடுத்திருக்கிறேன்.  ஆனாலும் மூன்று ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் இல்லை.  இடையில் அ-காலம் தொடருக்காக எக்கச்சக்கமாகப் படிக்க வேண்டியிருந்தது.  இணைய தளத்தில் எழுதியதை ஸ்ரீராம் தொகுத்துக் கொண்டிருக்கிறார்.  நான்கு புத்தகங்கள் அனுப்பி விட்டார்.  மருத்துவமனையிலிருந்து வந்ததும் இந்த வேலைதான்.  நள்ளிரவு வரை.  வேறு எந்தப் பொழுதுபோக்கும் கிடையாது. குடி, தம், நண்பர்கள் எதுவும் கிடையாது. என்னிடம் கூட ஓரிரு நிமிடங்களே பேசுவார். மாதம் ஒருமுறை சொந்த ஊர் போவார்.  மொத்தத்தில் கர்மயோகி. அவரைப் போன்ற நண்பர் கிடைக்க நான் தவம் செய்திருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட தொகுப்பாளர் நண்பர் தமிழ் எழுத்தாளர்களிலேயே என் ஒருத்தனுக்கு மட்டும்தான் உண்டு.  மன்னிக்கவும்.  மன்னிக்கவும்.  என் தம்பியின் எழுத்தை விடாமல் தொடர்ந்து படித்ததனால் ஏற்பட்ட பாதிப்பு!  எனவே வரும் புத்தக விழாவில் என்னுடைய கீழ்க்கண்ட நூல்கள் கிடைக்கும்:

சொல் தீண்டிப் பழகு

அ-காலம்

விழா மாலைப் போதில்… (இது அசோகமித்திரனின் ஒரு குறுநாவல் தலைப்பு.  நான் தொகுப்பைப் படிக்கும்போது வேறு ஏதாவது ஒரு தலைப்பைப் பிடிக்க வேண்டும்.  அதுவரை இந்தத் தலைப்பு)

சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே!  (தொகுப்பைப் படிக்கும்போது இந்தத் தலைப்பையும் மாற்ற வேண்டும்.  ஒரு புத்தகத்தின் தலைப்பு இப்படி இருக்கக் கூடாது)

வால்டேரை நாம் எப்படிக் கைது செய்ய முடியும்?

கடவுளின் பாதையில்…

நான்தான் ஔரங்கசீப்… நாவல் முடிந்தால் அதுவும் வரலாம்.  ஆனால் நிச்சயம் இல்லை.  40 அத்தியாயங்கள் எழுதி விட்டேன்.  இன்னும் 20 அத்தியாயங்கள் இருக்கலாம்.  எத்தனை போகும் என்று எனக்கே தெரியாது. 

ஒவ்வொரு புத்தக விழா வரும்போதும் நமக்குப் பிடித்த எழுத்தாளரின் புதிய புத்தகம் வர வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  நியாயம்தான்.  ஆனால் சர்வதேசத்தன்மை கொண்ட எழுத்தையே தொடர்ந்து எழுதி வரும் நான் இது போதாது என்று நினைக்கிறேன்.  என் நண்பர் சொன்னதை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.  ”உங்களுடைய எழுத்துக்குக் குறைந்த பட்சம் ஆசிய அளவிலாவது நீங்கள் தெரியப்பட்டிருக்க வேண்டாமா?” அவருடைய இந்தக் கேள்வி என் செவிகளில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.  இந்தியாவின் ஆங்கில எழுத்தாளர்கள் மற்றும் ஹாருகி முராகாமி போன்றவர்களை விடவும் நான் சிறந்த எழுத்தாளன்.  இந்தியாவின் ஆங்கில எழுத்தாளர்கள் பெரும்பாலும் சராசரிகள்.  அப்படியிருந்தும் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதால் சர்வதேசப் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது தமிழில் மட்டும் வாசிக்கப்படுவது – அதிலும் என் எழுத்து நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கும்போது – குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.  அசோகமித்திரன் போன்றவர்களுக்குப் பிரச்சினையே இல்லை.  ஒரு எழுத்தாளன் என்றால் பட்டினிதான் கிடக்க வேண்டும்.  ஒரு எழுத்தாளன் என்றால் நூறு பேருக்குத்தான் தெரிய வேண்டும்.  இப்படிப்பட்ட நம்பிக்கைகள் கொண்டவர் அவர்.  தி. நகரில் அவர் தங்கியிருந்த அவருடைய மகனின் மிடில்க்ளாஸ் குடியிருப்பின் எதிரே இருந்த அரண்மனை இளையராஜாவினுடையது என்று என் கூட இருந்த அழகிய சிங்கர் சொன்னதும், நான் அசோகமித்திரனைப் பார்த்து “அந்த இடத்தில் அல்லவா நீங்கள் இருக்க வேண்டும்?” என்று கேட்டேன்.  அதற்கு அவர் என்னை “நீ என்ன லூசா?” என்பது போல் பார்த்து விட்டு, ”எழுத்தாளன்னா இப்டித்தான் இருக்கணும்” என்று தன்னுடைய உள்ளறையைக் காண்பித்தார்.  அவருக்கு அதுதான் சரி.  தினமும் குடித்து விட்டு வந்து பெண்டாட்டியை இழுத்துப் போட்டு அடிக்கும் கணவனை சில பெண்கள் வைரம், வைடூரியம் என்று சொல்லிக் கொள்வார்கள், நினைத்தும் கொள்வார்கள்.  அப்படி நினைக்காவிட்டால் அவர்கள் வாழ்வின் நிம்மதி கெட்டு விடும்.  அதுபோலத்தான் அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களைப் பார்க்கிறேன்.  ஏழ்மையில் திருப்தியுறுதல். 

நேற்று Skaneateles (யு.எஸ்.) என்ற ஊரிலிருந்து ஒரு வட இந்தியப் பெண் என்னுடைய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு எங்கே கிடைக்கும் என்று கேட்டு எழுதியிருந்தார்.  சமயத்தில் அமெரிக்கர்களும் எழுதுவதுண்டு.  முன்பெல்லாம் என்னை எப்படித் தெரிய வந்தது என்று நான் அவர்களைக் கேட்பது வழக்கம். இப்போது  கேட்பதில்லை.  காரணம், அதற்கு சரியான பதில் கிடைப்பதில்லை.  அதிலிருந்து அந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை என்று எடுத்துக் கொண்டேன்.  இப்படி அத்திப் பூத்தாற்போல் ஒன்றிரண்டு பேர் கேட்பது அல்ல என் எதிர்பார்ப்பு.  சினிமாவில் ரஹ்மான் எப்படி சர்வதேச அளவில் சென்றாரோ அம்மாதிரி அர்த்தத்தில் சொல்கிறேன்.

எனக்குப் புகழ் தேவையில்லை.  புகழால் எந்தப் பயனும் இல்லை.  அது ஒரு தடை.  ஆனால் என்னைப் போன்ற ஒரு எழுத்தாளன் பரந்துபட்ட அளவில் வாசிக்கப்பட வேண்டும்.  ஐரோப்பிய மொழிகளுக்கும் அரபிக்கும் அப்படிப்பட்ட வசதி உண்டு.  அதுதான் நான் எதிர்பார்ப்பதும்.  அந்தக் காரணத்தினால்தான் என் புதினங்களின் மொழிபெயர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறேன்.  மற்றபடி ஒவ்வொரு புத்தக விழாவுக்கும் ஐந்தாறு புத்தகங்களைக் கொண்டு வருவதும், இருநூறு முந்நூறு என்று புத்தகங்களை எழுதுவதும்தான் இன்றைய எழுத்தாளர்களின் பழக்கமாக உள்ளது.  ரோமாபுரியில் ரோமனாக இரு என்றபடி நானும் அவர்களைப் போலவேதான் இருக்கிறேன் என்றாலும் தனிப்பட்ட முறையில் இதில் எனக்கு உடன்பாடு இல்லை.  நாலைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புத்தகம் வந்தால் போதும் என்பதுதான் என் நிலைப்பாடு.  ஆனால் தமிழ்ச் சூழலில் அப்படி எழுதினால் நம் பெயர் நமக்கே மறந்து விடும். 

எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று இனிமேல் சொல்ல மாட்டேன்.  ’உங்களைச் சந்தித்தால் செத்து விடுவேன்’ என்று தன்னுடைய பரவசத்தை ஒரு 25 வயது பெண் வெளிப்படுத்துகிறாள் என்றால், என் எழுத்தை என் வாசகர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்று புரிகிறது.  ஆனாலும் எட்டரைக் கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்தில் வெறும் ஆயிரம் பிரதிகள் விற்றால் அது எழுத்தாளனுக்குப் போதுமா?  குறைந்த பட்சம் ஒரு பத்தாயிரம் பிரதி விற்க வேண்டாமா?  பிஞ்ஜில் ஔரங்கசீப் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது.  ஒரு லட்சம் சொச்சம் முறை வாசிக்கப்பட்டிருக்கிறது.  இதுவரை வந்துள்ள அத்தியாயங்கள் 30. அப்படியென்றால், 3500 வாசகர்கள் படிக்கிறார்கள் என்பது கணக்கு.  இலவசமாகப் படிப்பதில் இந்த எண்ணிக்கை.  அதுவும் ஔரங்கசீப் போன்ற ஒரு பிரபலமான ஆளைப் பற்றி. 

எனக்கு 2000 வாசகர்கள் உண்டு.  Hard core.  வேறு சிலருக்கு ஒரு லட்சம் இருக்கலாம்.  தெரிகிறது.  ஆனால் அது எனக்கு முக்கியம் அல்ல.  Allen Sealy என்று ஒரு ஆங்கிலோ இந்திய எழுத்தாளர்.  என் நண்பர்.  அவருடைய The Trotter-Nama மிக முக்கியமான நாவல்.  டேராடூனில் வசிக்கிறார்.  சர்வதேச அளவிலேயே அவருக்கு வாசகர்கள் கம்மிதான்.  ஆனால் இன்று அவர் ஒரு நாவல் எழுதினால் உலகின் மிகப் பெரிய, மிகச் சிறந்த பதிப்பகங்கள் அவர் நூலைப் பிரசுரிக்க நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முன்வரும்.  வருஷத்தில் முக்கால்வாசி நாட்கள் உலகம் பூராவும் சுற்றிக் கொண்டுதான் இருப்பார்.  கருத்தரங்குகள்.  அழைப்புகள்.  ஆனால் இதுவரையிலான என் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்துமே என் செலவில் நடந்தவைதான்.  சர்வதேச இலக்கிய வரைபடத்தில் நம் பெயர் இருக்கிறதா என்பதுதான் இதையெல்லாம் தீர்மானிக்கிறது.  ஃப்ரெஞ்சிலோ அரபியிலோ ஒரு ஒன்றைணா நாவலை எழுதினாலும் அடுத்த நாள் நீங்கள் உலகப் புகழ் பெற்று விடுவீர்கள், பத்ரிக் மோதியானோ போல.  உடனடியாக பத்து ஐரோப்பிய மொழிகளில் உங்கள் நாவல் மொழிபெயர்க்கப்படும்.  மோதியானோவுக்கு நடந்தது போல நோபலும் கிடைக்கலாம். 

தமிழ் இந்திய அளவிலேயே ஒடுக்கப்பட்ட மொழி.  தமிழர்கள் மறந்து விட்ட மொழி.  அப்படி ஒரு மொழியில் எழுதிக் கொண்டிருப்பதும், அதை நீங்கள் வாசிப்பதும் அதிசய நிகழ்வுகள்தான்.  அதுவே ஒரு கொண்டாட்டம்தான்.  புத்தக விழாவில் என்னுடைய ஐந்து புதிய புத்தகங்களோடு சந்திப்போம்.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai