மதுவும் தனிமையும்

வாசகர் வட்டம் ரொம்ப டல் அடிக்கிறது.  நானே போஸ்ட் போட்டாலும் எதிர்வினைகள் கம்மியாக உள்ளன.  ஏன் என்று தெரியவில்லை.  சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  நாளையும் நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) வீட்டில் தனியாகவே இருப்பேன்.  இப்படித் தனியாக இருந்து வெகு காலம் ஆகி விட்டது.  அவந்திகாவுக்கு அப்படி இல்லை.  எழுத்தாளனைத் திருமணம் செய்து கொண்டால் தனிமைக்குப் பழகாமல் இருக்க முடியுமா?  முன்பெல்லாம் அடிக்கடி வெளியே போய் விடுவேன்.  இப்போது அது கம்மியாகி இருந்தாலும் நாள் கணக்கில் வெளியூர்களுக்குச் சென்று விடுகிறேனே? 

அவந்திகா இப்போது ஆன்மீகப் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.  சென்ற வாரம் காஞ்சீபுரத்தில் ஒன்றரை மணி நேரம் பிரவாகமாகப் பேசினாளாம்.  அடப் பாவி… காலம் எப்படியெல்லாம் மாறுகிறது! மூன்று நிமிஷம் பேசுவதற்கே முன்னூறு யோசனை செய்வாள்.  ஒன்றரை மணி நேரமா?  “நானா பேசுகிறேன்?  Mahanta அல்லவா பேசுகிறார்” என்றாள்.  நான் வாயை மூடிக் கொண்டேன். 

என் நண்பர்கள் சிலர் மனைவியைப் பிரிந்து தனியாக இருக்கும் போது குடிக்கிறார்கள்.  பத்து நாள் தனியாக இருந்தால் பத்து நாளும் குடிக்கிறார்கள்.  எனக்கு அது வருத்தத்தை அளிக்கிறது.  குடி என்பது கொண்டாட்டமாக இருக்க வேண்டுமே தவிர வேறு ஒன்றின் பதிலியாக ஆக முடியாது.  அதாவது, ஏதோ ஒரு வெற்றிடத்தை இட்டு நிரப்புவதற்காக குடித்தால் குடி நம்மை வென்று விடும்.  தின்று விடும் என்றும் பாட பேதம் போட்டுக் கொள்ளலாம்.  குடி நமக்கு அடிமையாக இருக்க வேண்டுமே ஒழிய குடிக்கு நாம் அடிமையாகி விடக் கூடாது.  ஆனால் நம்மை அடிமையாக்கி விடும் தன்மை மதுவுக்கும் பெண்களுக்கும் உண்டு.  அதனால்தான் மது, மாது என்று அடுக்குமொழியில் சொன்னார்களோ என்னவோ! இருந்தாலும் இந்த இரண்டு விஷயங்களையும் நம்மை ஆள அனுமதித்து விடாமல் சரசமாக (சமமாக என்பது பாடபேதம்) வைத்துக் கொள்வது நமக்கு நல்லது. 

”மும்பை வந்து நாள் ஆயிற்று, இந்த மாத இறுதியில் வருகிறேன்; Aer போகலாம்” என்றேன்.  நான் மும்பை போகும் போதெல்லாம் அந்த நண்பரோடு Aer போயிருக்கிறேன்.  Four Seasons ஓட்டலின் 34-ஆவது மாடியில் இருக்கிறது Aer பார்.  அங்கே அமர்ந்து ஃப்ரெஞ்ச் வைனை அருந்தியபடி எதிரே தெரியும் அரபிக் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அற்புதமான அனுபவம்.  நண்பரோ ”மும்பை வாருங்கள்; ஆனால் Aer போக முடியாது” என்றார்.  காரணம் விசாரித்ததில் நண்பர் தாற்காலிமாக குடிப்பதை நிறுத்தி விட்டாராம்.  ”மார்ச்சில் வாருங்கள்; போகலாம்” என்றார்.  மார்ச்சில் முடியாது; நான் வால்பராய்சோ போகிறேன் என்று பதில் சொன்னேன்.  மேலும் விசாரித்த போது விஷயம் புரிந்தது.  பிள்ளைப் பேறுக்காக மனைவி புக்ககம் சென்றிருக்கிறார்.  வர மூன்று நான்கு மாதம் ஆகும்.  தனிமையை விரட்ட குடியை நாட, டிஸம்பர் பூராவும் குடி சீஸனாகப் போய் விட்டது.  டிஸம்பர் முடிந்தது புத்தாண்டு வந்து விட்டதா, குடியை விட்டு விடுகிறேன் என்று புத்தாண்டு சபதம் போட்டு விட்டார்.  (ஜூனியர் விகடனுக்கு நன்றி!)

அடக் கருமமே!  ஏன் காணாததைக் கண்டது போல் விழுந்து அள்ள வேண்டும்; பிறகு புத்தாண்டு சபதம் போட வேண்டும்?  வாரம் ஒருமுறையோ இரண்டு முறையோ அளவாக, நன்கு தேர்ந்த திராட்சை ரசமான ஷாம்பெய்னாகக் குடித்தால் இந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை அல்லவா? என்னவோ, நண்பர்கள் என் எழுத்தைப் படித்து ரசிக்கிறார்களே தவிர பின்பற்றுவது இல்லை.  மடாக் குடியனைப் போல் குடிக்க வேண்டியது; பிறகு ஜூனியர் விகடனைப் பார்த்து மிரண்டு போய் புத்தாண்டு சபதம் போட வேண்டியது.  தேவையா?  உலகம் பூராவும் மக்கள் குடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  ஆனால் எங்கேயும் யாரும் குடியால் அழிந்தது இல்லை.  தமிழன் மட்டும்தான் அழிகிறான் என்றால் மதுவில் அல்ல பிரச்சினை.  அவன் குடிக்கும் முறை சரியில்லை.  அவன் குடிக்கும் மதுவும் சரியானது அல்ல.  மிகக் கீழ்த்தரமான, மனிதப் பயன்பாட்டுக்கு லாயக்கே இல்லாத, சாக்கடையைப் போன்ற மதுவே தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. 

நான் சொல்வதை நம்ப முடியவில்லையா?  இதைப் பரிசோதனை செய்து பாருங்கள்.  ஓல்ட் மாங்க் ரம்மை மிலிட்டரி நண்பரிடமிருந்து வாங்கிக் குடித்தால் மறுநாள் முதுகு வலிக்காது; கழுத்து வலிக்காது.  நான்கு பேர் தடியால் அடித்தது போல் உடம்பெல்லாம் வலிக்காது.   ஒரு நல்ல மஸாஜ் க்ளப்புக்குப் போய் வந்தது போல் உடம்பு கலகலவென்று இருக்கும்.  இதே ஓல்ட் மாங்கை டாஸ்மாக்கில் குடித்துப் பாருங்கள்.  போலீஸிடமிருந்து லத்தி சார்ஜ் பெற்றது போல் உடம்பெல்லாம் வலி பின்னும்.  ஆக, எங்கே இருக்கிறது பிரச்சினை? 

மேலும், ஒரு பெக்கை குடிக்க அரை மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  நாலு பெக் இரண்டு மணி நேரம்.  இதற்கு டாஸ்மாக்கில் வசதி இருக்கிறதா?  அங்கே அடிக்கும் மூத்திர நாற்றத்தில் இது சாத்தியமா?  அரை மணி நேரத்தில் நாலு பெக் அடித்து நாலு காலால் நடக்கிறான் தமிழன்.  இதற்குக் குடி என்னய்யா செய்யும்? 

பெங்களூரை எடுத்துக் கொள்ளுங்கள்.  எங்கே பார்த்தாலும் restaurant and bar தான். எல்லோரும் குடும்பம் குடும்பமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  நானும் நண்பனும் கொஞ்சம் கோனியாக் குடித்தோம். அது ஒரு குடிகார விடுதியைப் போலவே இல்லை.   தமிழ்நாட்டில் இந்த நிலை இல்லையே?  இங்கே தேவையானது தரமான குடியே தவிர குடி அல்ல பிரச்சினை.

என்னால் குடிக்காமல் ஆறு மாதம் கூட இருக்க முடியும்.  Almost Island செமினாரில் பல தேசங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள்.  அதில் எனக்குத் தெரிந்தவர்களும் அடக்கம்.  வைன் வெள்ளமாய் ஓடியது.  என் நண்பர்கள் எத்தனையோ வற்புறுத்தினார்கள்.  குடிக்கவில்லை.  அப்புறம்தான் யோசித்தேன்.  குடி என்பது ஒரு obsession ஆக இருக்கக் கூடாது என்று முடிவுக்கு வந்தேன்.  குடிக்காமல் இருப்பவர்களும் குடிக்கு அடிமை ஆனவர்களும் ஆன இரண்டு தரப்பினருமே குடி பற்றிய obsession இல் இருப்பவர்கள்.  எனக்குக் குடி ஒரு பொருட்டே அல்ல.  குடிக்கலாம்; குடிக்காமலும் இருக்கலாம்.  எழுத்தைத் தவிர வேறு எதுவுமே எனக்கு obsession ஆக இருக்க என் வாழ்நாளில் அனுமதிக்க மாட்டேன்…

 

Comments are closed.