கோக் அடிக்‌ஷன்

டியர் சாரு,

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய பாக்ஸ்தானி கஜ’லின், கோக் ஸ்டியோ கவர் ஸாங் ஒன்றைப் பகிர்ந்திருந்தீர்கள். அப்போது அது எனக்கு வாரக்கணக்கில் ரிப்பீட் மோடில் ஓடியது. அதே காலகட்டத்தில்தான் ஆத்திஃப் அஸ்லம், ராஹத் ஃபதே அலிகான் போன்றவர்களை தொடர் ப்ராட்டஸ்ட்கள் மூலம் “முதிர் கண்ண” பாலிவுட் குரல்கதறர்கள் (gaலா phaடுக்கள்) துரத்தி அடித்தனர்.

எனக்குச் சரியாக நியாபகமில்லை. நீங்கள் கண்டிப்பாகப் பகிர்ந்திருப்பீர்கள். ஆனாலும் ஒளரங்கசீப் எனும் சூப்பர் டூப்பர் “வெப் சீரீஸ்” ஓடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இதை ஒரே ஒரு முறை உங்களுக்கு ரீ ரெகமண்ட் பண்ணுவதில் பழுதில்லை என்று எண்ணுகிறேன். கீழ்க்காணும் இந்தப் பாடலும் கூட ரிப்பீட்டில் ஓடியது. அதில் ஒரு கதைக்குரிய சம்பவமும் என் வாழ்வில் நடந்தது. (இதை ஒரு ரா மெட்டீரியலாக அராத்துவுக்கு பாஸ் பண்ணினால் கண்டிப்பாக ஏதாவது வரும்; ஆனால் நான் அராத்தைத் தொடர்பு கொள்வது என்பது வாய்ப்பே இல்லை. தவிர அது, அதே ஃபேக் கலக அவுட்புட்டாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.)

சாரு, பகதூர் ஷாஹ் (தங்கள் அவதானத்திற்கு, ஷா(ஹ்!) ஆனால் ‘ஹ்’ ஐ உச்சரிக்கக் கூடாது. அது நாஷ்ட்டலிக் அறிந்தவர்கள் சமாச்சாரம்) எப்படி உருதில் (ஸாரி, உர்தூவில்) கஜல் எழுத நேர்ந்தது? முந்நூறு ஆண்டுகளில் முகல்கள் எப்படி ஃபார்ஸியிலிருந்து வழுவி ஹிந்துஸ்தானி பக்கம் வந்தனர்? கருந்தேள் ஒரு காட்டு மதராஸி ஆயிற்றே? அவருக்கு கஜல் ட்ரான்ஸ்லேஷன் க்ரெடிட் கொடுத்திருக்கிறீர்களே, அவர் நிஜத்தில் என்ன பண்ணினார், என்ன பங்களிப்பு, ஜுபான்- ஏ -உர்தூவில் எந்தளவு ஆளுமை உண்டு? இப்படி பல நேயர் கேள்விகள் உள்ளன. எனக்கு நீங்கள் எழுதாவிட்டாலும் பரவாயில்லை. எப்போதாவது ஒரு முறை இதை ஒட்டிய டாப்பிக்குகளை உங்கள் ப்ளாகிலோ வேறு ஏதோ ஊடாகவோ டச் செய்யுங்கள் போதும். இன்னும் பல கேள்விகள் மண்டையில் குடைகின்றன. இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நமஸ்காரங்கள்.

சாரு,

ஆர் வீ ஸ்டில் ஃப்ரண்ட்ஸ்?

– அய்யன்

டியர் அய்யர்,

நீங்கள் ‘ன்’ விகுதியோடு எழுதினாலும் எனக்கு ‘ன்’ போடுவது மரியாதைக் குறைவாகத் தெரிவதால் ‘ர்’ விகுதியே போட்டு விட்டேன்.  உங்கள் கடிதங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை என்றாலும் நான் அவற்றைப் பலமுறை வாசிக்கிறேன்.  சில சமயம் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டு விவாதிக்கிறேன்.  பதில் எழுத நேரம் இல்லை என்ற சப்பை பதில்தான் இருக்கிறது.  ஆனால் ஒன்று நிச்சயம்.  உங்கள் கடிதங்களில் முக்கால்வாசி அல்லது எல்லாமே பிரசுரிக்கத் தகுந்தவை.  பல சமயங்களில் தோன்றும், நீங்கள் ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதிலேயே எழுத ஆரம்பிக்கலாம் என்று.  அல்லது, கதையாக எழுதி விடலாம்.  உங்களுடைய சென்ற கடிதத்தில் கெட்ட வார்த்தை அதிகம் இருந்ததால் பிரசுரிக்கவில்லை.  என்னுடைய ப்ளாகை இப்போது குடும்பம் குடும்பமாகப் படிப்பதால் வந்த வினை.  என் சுதந்திரம் கொஞ்சம் போய் விட்டது.  அராத்துவின் கதை (வனயோனா) பற்றிக் கூட ஒரு குடும்பத் தலைவர் ஆட்சேபம் செய்து போன் பண்ணினார்.  அவர் சொல்வது சரிதான்.  குடும்பமே வாசிக்கிறது என்கிற போது நான் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.  உங்களுக்கு வட்டார வழக்கு எல்லாம் சர்வ சகஜமாக வருகிறது.  உங்களின் போன கடிதத்தில் வட்டார வழக்கில் மிரட்டி இருந்தீர்கள்.  எனக்கு எந்த வட்டார வழக்குமே தெரியவில்லையே என்று ரொம்பவும் வருந்தினேன்.  நான் மிக விரும்பும் சென்னை வட்டார வழக்கு கூட எனக்குத் தெரியாது.  சோ, கமல் போன்றவர்கள் பிராமணர்களாக இருந்தும் சென்னை வட்டார வழக்கில் கில்லாடிகள்.   கதையில் தேவைப்படும்போது என் வடசென்னை நண்பர்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது எனக்கு. 

அது என்ன, நீங்களும் மற்றவர்களும் அராத்துவும் நியாபகம் என்றே எழுதுகிறீர்கள்.  உங்களுக்கெல்லாம் பள்ளியில் அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்களா?  அராத்துவின் கதையில் நியாபகம் என்பதை ஞாபகம் என்று மாற்றினேன்.  பேச்சு வழக்கு என்றால் பரவாயில்லை.  கதைசொல்லியின் வர்ணனையிலேயே அப்படித்தான் வருகிறது.  என் காலத்துக்குப் பிறகு அராத்துவின் பிழையான தமிழை யார் திருத்துவார்கள் என்று ரொம்பக் கவலையாக இருக்கிறது.  அவருடைய கண்டெண்ட் பிரமாதமாக இருக்கிறது.  தமிழ்தான் தத்தளிக்கிறது.  அவருக்கு ஒரு நல்ல எடிட்டர் இருந்தால் நலம்.  ஆனால் அவருடைய எடிட்டர்கள் அவரை விட மோசம்.  ஆனால் கவனமாக எழுதினால் ஒரு பிழை கூட இல்லாமல் எழுதக் கூடியவர்தான்.  இது எல்லாம் போக, வாழ்க்கையை வாழ்கை என்று எழுதுபவர்களை ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் என்பது என் அவா. 

நானும் ஒரு கோக் அடிக்ட்தான்.  ரெண்டு கோக்குக்குமேதான்.  வெளிநாடு போனால் இந்தியர்களைப் போல் தேடித் தேடியெல்லாம் தண்ணீர் குடிப்பதில்லை.  கோக்கும் பழரசமும்தான்.  ஊருக்குத் திரும்பிய பிறகுதான் தண்ணீர்.  தண்ணீர் என்று சொல்லி சோடாவைக் கொடுக்கும் உலகத்தில் கோக் எத்தனையோ தேவலாம்.  கோக் குடித்தால் குடலை அரித்து விடும், கேன்ஸர் வரும் என்றெல்லாம் சொல்கிறார்கள்.  எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.  வருடம் பூராவும் தண்ணீர் குடிக்கிறோம், சில நாட்கள் கோக் குடித்தால் என்ன?  மேலும், சென்னையின் குடிநீரை விட கோக் ஒன்றும் கெடுதல் இல்லை.  ஆனால் சீலே விஷயம் வேறு.  அங்கே எனக்குக் கோக் கூட சரியாகக் கிடைக்கவில்லை.  (என் வீட்டில் கோக் தடை செய்யப்பட்ட விஷயம்!)

கோக் ஸ்டுடியோவுக்கு வந்தால் அதில் எனக்குப் பாகிஸ்தானின் நிகழ்ச்சிகள்தான் பிடிக்கிறது.  இந்தியாவின் கோக் எம்டிவி படு தண்டம்.  ரஹ்மான்தான் அவ்வப்போது இந்திய கோக் எம்டிவி பாடல்களை அனுப்பி வைப்பார்.  அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டும் பிரமாதமாக இருக்கும்.  ஒரு ஜென் துறவி பாடி, ரஹ்மான் உருவாக்கிய பாடல் மிகவும் நன்றாக இருந்தது.  மற்றபடி நான் ரசிப்பது பாகிஸ்தான் கோக் ஸ்டுடியோதான்.  அவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். இந்திய கோக் எம்டிவி அவர்களைத் தொடவே முடியாத உயரம் அது.  (நல்லவேளை, நான் ஹிந்து.  இல்லாவிட்டால் இப்படிச் சொல்வதற்கு என் தேசப் பற்று பற்றி சந்தேகமும் வசையும் எழுந்து விடும்!)

குல் பன்ரா

குல் பன்ரா பஷ்டூ இனத்துப் பேரழகி என்பதைத் தவிர வேறு எனக்குப் பிடித்தது எதுவும் இல்லை.  காரணம், எனக்கு நாட்டுப்புற இசை அவ்வளவாகப் பிடிக்காது.  எனவே நீங்கள் கொடுத்திருக்கும் பாடலும் முன்பே கேட்டுக் கடந்து வந்ததுதான்.  குல் பன்ராவுடன் பாடும் ஆத்திஃப் அஸ்லம் அப்படி இல்லை.  எனக்குப் பிடித்தமான பாடகர்தான்.  ஆனால் அவரை விட அதிகம் பிடித்தவர் ஸஜ்ஜத் அலி.  குறிப்பாக இந்தப் பாடல்கள்: 

தும் நராஸ் ஹோ.  பல நூறு தடவை கேட்ட பாடல்.  ஸஜ்ஜத் அலி.

ஆனால் ஸஜ்ஜத் அலி நமக்குப் பிடித்த பாடகர் என்று அவரது மற்ற பாடல்களைக் கேட்டால் அறுவையாக இருக்கும்.  பாடல் நன்றாக இருப்பது இசையமைப்பாளரைப் பொறுத்ததும் இல்லையா?  உதாரணமாக, விஸ்வரூபம் படத்தில் வரும் முதல் பாடல், நான் திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல். 

ஃபரீஹா பர்வேஸும் எனக்கு மிகப் பிடித்த பாடகர். ஜோகி என்ற பாடலை ஆயிரக்கணக்கான தடவை கேட்டிருக்கிறேன்.

அய்யர், நீங்கள் எழுதும் கடிதங்களைப் பார்க்கும்போது உங்கள் வாழ்வில் ஒரு நாவலுக்குரிய பல சம்பவங்கள் இருக்கும்போல் தெரிகிறது.  நீங்களே ஒரு நாவல் எழுதினால் என்ன?  இல்லாவிட்டால் துண்டு துண்டாக எழுதுங்களேன்.  கடிதத்தில் நீங்கள் குறிப்பிடுவதை அராத்துவுக்கு அனுப்ப முடியாவிட்டால் எனக்கு அனுப்புங்கள்.  அராத்துவோடு நீங்கள் மட்டுமல்ல, அவரோடு நட்பு பாராட்டுவது பலருக்கும் கடினமே.  எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர்களில் யாருமே அராத்துவைப் பிடிக்காதவர்கள்தான்.  ஒருத்தர் அராத்துவை அல்லக்கை என்றுதான் குறிப்பிடவே செய்வார்.  அந்த அளவுக்கு வெறுப்பு.  அவரைப் பிடித்த ஒரே ஒருவர் என்றால் அது செல்வகுமார் மட்டுமே.  காரணம் அராத்து அல்ல.  செல்வகுமார் ஒரு நடமாடும் வள்ளலார்.  அவருக்குப் பிடிக்காத யாருமே கிடையாது.  இந்த வெறுப்புக்குக் காரணம் அராத்துவா, மற்றவர்களா என்று எனக்குத் தெரியாது.  ஆனால் அராத்து என்னிடம் பழகுவது போல் மற்ற யாரிடமும் பழகுவதில்லை என்பது மட்டும் எனக்கும் அவருக்கும் அவர் மனைவிக்கும் தெரியும்.  ஏனென்றால், ஒருமுறை அவர் மனைவி அவரிடம், ”சாருவிடம் (ஃபோனில்) பேசும் போது மட்டும் உங்கள் குரல் மென்மையாக இருக்கிறதே, என்ன காரணம்?” என்று கேட்டாராம்.  அப்படி மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு என்னிடம் அவரது இயல்புக்கு மாறாக நடந்து கொள்வார்.  எனக்கே அவர் சொன்ன பிறகுதான் அந்த விஷயம் தெரிந்தது.   அதற்கு முன்பு வரை அவர் பழகுவதற்கு மிக இனிமையான மனிதர் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.  பிறகுதான் கவனித்துப் பார்த்த போது தெரிந்தது, அவர் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார்.  அவர்கள் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன்.  அதிலும் பெண் வர்க்கத்திடம் அதிக முரட்டுத்தனம்.  ஆனாலும் அவருக்கு அதிக அளவில் தோழிகள் இருப்பதைப் பார்க்கும்போது பெண்களுக்கு அதுதான் பிடித்திருக்கிறது போலும் என்று எடுத்துக் கொள்கிறேன். 

நான் அதற்கு நேர் எதிர்.  மாம்பழத்தைக் கூட தோல் உரிக்க வேண்டும்.  என்னிடம் பேசுவதும் பழகுவதும் அதை விட சுலபமானது.  ஆனால் அறம், மதிப்பீடுகள், இலக்கியம் என்று வந்தால் நட்பைத் தூக்கி எறிந்து விடுவேன்.  நீங்கள் எனக்கு உயிரையே கொடுத்திருந்தாலும் சரி.  அதற்குத் தயாராக இருந்தால் மட்டுமே என்னோடு பழகலாம்.  அதற்காக மூர்க்கன் என்று நினைத்து விடாதீர்கள்.  நீங்கள் ஒரு தயாரிப்பாளர்.  உங்கள் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறீர்கள்.  படம் குப்பை.  எப்படி இருக்கிறது என்று கேட்டால், ம், சுமாரா இருக்கு என்று சொல்லும் அளவுக்கு லௌகீக வாழ்க்கை தெரியும்.  அதேபோல் அது குப்பை என்று வெளியேவும் எழுத மாட்டேன்.  அப்படி ஒரு படத்தைப் பற்றி மூன்று ஆண்டுகள் எதுவும் எழுதாமல் வாயை மூடிக் கொண்டு இருந்தேன்.  ஏதாவது எழுதி வைத்தால் அவருக்குப் பல கோடிகள் நஷ்டமாகி விடும்.  ஆனால் கோடி கொடுத்தாலும் பாராட்டி எழுத மாட்டேன். 

என்னோடு மிக நெருங்கிப் பழகிய ஒரு நண்பர் இருந்தார்.  அவர் அளவுக்கு நீண்ட காலம் என்னோடு நெருக்கமாகப் பழகியவர் யாரும் இல்லை.  அவரை நான்தான் உருவாக்கினேன்.  அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பு போட்டார்.  சமர்ப்பணம் கோணங்கி என்று இருந்தது.  இதுதான் உங்களை நான் கடைசியாகப் பார்ப்பது என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.  இருபது ஆண்டுகள் ஒரே தட்டில் சாப்பிட்டிருக்கிறோம்.  என் பெயர் தேவையே இல்லை.  அம்பது பேர் படிக்கும் புத்தகத்தில் என் பெயர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?  நான் கோணங்கியின் எழுத்தை விமர்சிக்கும் போதெல்லாம் அந்த நண்பரும் கூடச் சேர்ந்து கொண்டு திட்டுவார்.  ஒரு நாள் கூட அவர் கோணங்கியின் எழுத்தைப் பாராட்டி என்னிடம் பேசியதில்லை.  அவர் கோணங்கியின் எழுத்தைப் போற்றுபவர் என்றால் அதை ஒருமுறையாவது என்னிடம் சொல்லியிருக்கலாமே? இருபது ஆண்டுகள் இருக்கும்.  சந்திக்கவே இல்லை.  ஃபிடல் காஸ்ட்ரோ சொன்னதுதான், Within the revolution, everything.  Against the revolution, nothing.  தாமஸ் அலேயாவின் படம் ஒன்றில் ஒரு பெண் பாத்திரம் காஸ்ட்ரோவை பாஸ்டர்ட் என்று திட்டுவாள்.  அதையும் மனதில் வைத்துத்தான் காஸ்ட்ரோ அப்படிச் சொல்லியிருக்க வேண்டும்.  அலேயா புரட்சியை ஏற்றுக் கொண்டவர்.  எனவே காஸ்ட்ரோவின் வட்டத்தில் இருப்பவர்.  என் வட்டத்தில் இருந்தால் நீங்கள் என்னை முட்டாள் என்று கூட சொல்லலாம்.  ஆனால் கோணங்கிக்கு சமர்ப்பணம் என்று சொன்னால், என்னை நீங்கள் அறிஞன் என்றால் கூட கல்தாதான்.  ஏனென்றால், இரண்டுமே இரண்டு எதிரெதிர் எழுத்துச் செயல்பாடுகள். 

அதனால்தான் என்னுடன் பழகுவதற்கு நான் முன் நிபந்தனை விதிக்கிறேன்.  என் எழுத்தை ஓரளவுக்காவது படித்திருந்தால்தான் என்னோடு பழக முடியும்.  ஜெயமோகனோடு அவருடைய ஒரு எழுத்தைக் கூட படிக்காமல் பழகலாம்.  அவரை ஒருமையில் அழைக்கும் நண்பர் ஒருவரிடம் விஷ்ணுபுரம் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன்.  இல்லை என்றார்.  அப்போது நான் அவரிடம், நீங்கள் ஸீரோ டிகிரி படிக்காமல் என்னோடு பழக இயலாது என்றேன்.  படித்து விட்டேனே என்றார் கவர்ச்சியான சிரிப்புடன்.  அது போதும்.  பாராட்டு எதுவும் எனக்குத் தேவையில்லை.  ஏனென்றால், பெரியோரைப் புகழ அந்தப் பெரியோரை விட நமக்குத் தகுதி அதிகமாக இருக்க வேண்டும்.  பலருக்கும் அது தெரிவதில்லை. நம்மை விடவும் சிறியவர்களின் பாராட்டைக் கேட்டு மனம் குளிரும் அளவுக்கு பலஹீனமானவன் அல்ல நான்.  ஆனால் என்னைப் படிக்காமலேயே என்னை அணுகுபவர்களோடு என்னால் பழக இயலாது. 

அதுவும் தவிர, இன்னொன்றும் உள்ளது.  அசோகமித்திரனிடம் போய் “தமிழிலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது கல்கிதான்” என்று சொன்னால் அவரும் படு சந்தோஷத்துடன் “ஆஹா, கல்கியைப் போல் யாரால் எழுத முடியும்?  அபாரமான எழுத்தாளர்” என்று பாராட்டுவார்.  கிண்டலுக்கு அல்ல.  நிஜமாகவே.  ஆனால் என்னிடம் அப்படிச் சொன்னால் குட் பைதான். ஏனென்றால், கல்கி என் கடவுளைக் கொன்றவர்.  அதுவும் பட்டினி போட்டு.  அது சம்பந்தமான எல்லா வரலாற்றையும் என் புதுமைப்பித்தன் பற்றிய உரையில் பேசியிருக்கிறேன்.  கல்கி நல்லவர்தான்.  புதுமைப்பித்தன் பட்டினி கிடந்த போது பணம் வசூலித்தெல்லாம் கொடுத்தவர்தான்.  ஆனாலும் கல்கிதான் இலக்கியம் என்று தமிழ் ஜனம் நம்புகிறது.  அப்படித்தான் கல்கியும் ராஜாஜியும் நம்பினார்கள்.  அந்த நம்பிக்கைதான் புதுமைப்பித்தனை பட்டினி போட்டது.  இல்லையென்றால், தமிழ்ச் சிறுகதையின் பிதாமகன் ஏன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களில் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது, மூன்று நாட்கள் ஆகிறது என்று எழுத வேண்டும்.  அதை விடக் கொடுமை என்னவென்றால், புதுமைப்பித்தனின் மனைவி நானும் சாப்பிட்டு நாலு நாட்கள் ஆகிறது என்று எழுதுகிறார்.  அந்தக் கடிதங்களைப் படிப்பதற்கு முன்னும் சரி, இப்போதும் சரி, ஒரு பெண் பட்டினி கிடந்து நான் கேட்டதே இல்லை.  அதிலும் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்.  ஆனால் கல்கியெல்லாம் ஜேஜே என்று சினிமா சூப்பர் ஸ்டார் மாதிரி வாழ்ந்தார். 

இங்கே கல்கி என்பது ஒரு நபர் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  அவர் ஒரு குறியீடு.  அந்தக் குறியீடு இன்றைய பட்டுக்கோட்டை பிரபாகர் வரை நீள்கிறது.  ஆனால் இப்போதைய நிலை கொஞ்சம் பரவாயில்லை.  ராஜேஷ் குமார் 25 லட்சம் வாசிப்பு என்றும் சாரு ஒரு லட்சம் வாசிப்பு என்று புள்ளிவிவரம் சொன்னாலும் இலக்கியம் எங்கே இருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. 

எனவே இங்கே தமிழ்ச் சூழலில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடப்பது ஒரு கெரில்லா யுத்தம்.  வெகுஜனக் கலாச்சாரம் இங்கே இலக்கியச் சூழலை இல்லாமல் ஆக்கி விட்டது.  அதற்கு எதிரான யுத்தத்தில் என்னோடு கை கோர்க்காதவர்களும் எதிரியின் பக்கம் பேசுபவர்களும் என் நட்பு வட்டத்தில் இருக்க முடியாது.  ஏன் இத்தனை அழுத்தமாகச் சொல்கிறேன் என்றால், கமல்ஹாசன் போன்ற உலக இலக்கியம் வாசித்த ஒருவர், உலக சினிமாவின் மாணவர், ஞானக்கூத்தன் பற்றிய ஒரு ஆவணப் படத்தில் ஒரு ஏழு நிமிடம் பேசும் போது, ஐந்து நிமிடம் தன்னுடைய கவிதையை ஞானக்கூத்தன் பாராட்டினார் என்று பேசுவாரா? அந்தத் துணிச்சலை இங்கே ஒரு நடிகனுக்குக் கொடுத்தது யார் அய்யர்?  சொல்லுங்கள்.  ஞானக்கூத்தனுக்கு வேறு வழியே இல்லை.  பாராட்டித்தான் ஆக வேண்டும்.  இவ்வளவு பெரிய நடிகர் கவிதை என்ற பெயரில் எதையோ கிறுக்கிக் கொண்டு வந்து காண்பித்து எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்.  என்ன சொல்வது?  நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.  சொன்னார்.  அதைப் பற்றி ஞானக்கூத்தன் பற்றிய ஆவணப் படத்தில் ஏழு நிமிடப் பேச்சில் ஐந்து நிமிடம் பேசுகிறார் கமல்.  முழுக்க முழுக்க தன் கவிதை பற்றிய சுய புராணம்.  இங்கே என்ன பிரச்சினை என்றால், அதை எடுத்த இயக்குனர் திலகம் ஒரு இளைஞன்.  அந்த இளைஞனுக்கு அதை வெட்டி எறிய எந்த அதிகாரமும் இல்லை. துணிச்சலும் இல்லை.

தமிழ்நாட்டிலேயே கமலின் கவிதை வெறும் குப்பை என்று சொன்ன ஒரே ஆள் நான்தான் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.  முன்பும் சிலர் இருந்தனர்.  தர்மு சிவராமு, சுந்தர ராமசாமி என்று.  இப்போது இல்லை.  ஒரு மகத்தான கவிதைப் பாரம்பரியம் உள்ள ஒரு மொழியில் ஒரு பிரபல நடிகர் எதையோ கிறுக்கி அதைக் கவிதை என்று சொல்வது ஏன்?  இந்த அதிகாரம் எங்கிருந்து வருகிறது தெரியுமா?  ராஜாஜியிடமிருந்து.  க.நா.சு. ராஜாஜி வீட்டுக்குப் போன போது அவரை அவமதித்தவர் ராஜாஜி.  புதுமைப்பித்தனுக்கு எப்படி கதை எழுத வேண்டும் என்று பாடம் எடுத்தவர் ராஜாஜி.  ராஜாஜி கெட்டவரா?  அற்புதமான மனிதர்.  அப்பழுக்கில்லாதவர்.  ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷனாகத் திகழ்ந்தவர்.  அப்படிப்பட்டவர் இலக்கியம் என்று வந்ததும் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகனுக்குப் பாடம் எடுக்கிறார்.  காரணம், தமிழ்ச் சமூகம் இங்கே கல்கியைத்தான் எழுத்தாளர் என்று கொண்டாடுகிறது.  இப்போது சமூகம் பாலகுமாரனையும், கல்கியையும் கொண்டாடுவதைப் போல.  அந்த அதிகாரத்தில்தான் ராஜாஜி புதுமைப்பித்தனுக்குப் பாடம் எடுத்தார்.  இப்போது கமல் ஞானக்கூத்தனுக்கு எடுக்கிறார்.  ராஜாஜிக்கு 1958இல் இலக்கியத்துக்கான சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. அவர் எழுதிய சக்ரவர்த்தித் திருமகன் என்ற புத்தகத்துக்காகக் கிடைத்த விருது.  ராமாயணத்தைத் திரும்ப எழுதிய புத்தகம் அது. 

இப்படிப்பட்ட கேடு கெட்ட சூழலைத்தான் இலக்கியவாதிகள் மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதைத்தான் கெரில்லா யுத்தம் என்று குறிப்பிட்டேன்.  இதில் எதிர்ப் பக்கம் நின்று கொண்டிருப்பவர்களோடு எனக்கு நட்பு இல்லை.

டியர் அய்யர், நீங்கள் இது எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.  உங்கள் கடிதத்தை முன் வைத்து என் மனதில் குமுறிக் கொண்டிருந்த விஷயங்களைக் கொட்டி விட்டேன்.  கடிதத்தில் வரும் நீங்கள் என்பது சூழல்.  நீங்கள் அல்ல.  நீங்கள் என்னை வாசிப்பவர்.  அதனால் எப்போதும் நம்முடைய நட்பு தொடரும்…

சாரு    

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai