என்னுடைய புத்தகங்கள்

என்னுடைய நேரம் அவ்வளவையும் புனைவெழுத்துக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.  அதன் காரணமாக, எனக்கு வரும் கடிதங்களை தளத்தில் வெளியிட்டு பதில் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன்.  ஆனால் கடிதம் எழுதுபவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பதில் எழுதி விடுகிறேன்.  நெருங்கிய நண்பர்களாக இருந்தால் போனில் வாய்ஸ் மெஸேஜோடு சரி. 

நேற்று கூட இரவு பதினோரு மணிக்குப் படுத்து நான்கு மணிக்கு எழுந்து ஔரங்கசீப்பில் மூழ்கினேன்.  ஔரங்கசீப்பை முடித்தாலும் நிலைமை இப்படித்தான் இருக்கும்.  முக்கால்வாசி முடித்து வைத்த தியாகராஜரை எடுக்க வேண்டும்.  தியாகராஜாவை எழுதிக் கொண்டிருக்கும்போது தஞ்சை மராட்டியர் பற்றிக் கொஞ்சம் ஆய்வு செய்தபோது தற்செயலாக ஔரங்கசீப்பின் கடிதங்களில் வந்து விழுந்தேன்.  அதுதான் ஔரங்கசீப்.  இப்போது எனக்கு வந்த இரண்டு கடிதங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,

போன மாதம் ஒரு புத்தகத் திருவிழாவில் உங்களது “மலாவி என்றொரு தேசம்” புத்தகத்தை வாங்கினேன். அதற்கு முன்பு யூட்யூபில் உங்களது உரைகளை கேட்டு உள்ளேன். குமுதத்தில் உங்கள் தொடரான சொல் தீண்டிப் பழகை மிக ஆர்வமுடன் வாசித்தேன்.

எனக்கு பயணம் மற்றும் பயண நூல்கள் மீது இயல்பான ஆர்வம் உள்ளதால் அந்தப் புத்தகத்தை மிகுந்த சுவாரஸ்யத்துடன் வாசித்தேன். அந்த நூல் மூலமாக மலாவியின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் சிக்கல்கள் பற்றி அறிய முடிந்தது. இது போன்ற நூல்களை மேற்கத்தியர்கள் பிற நாடுகளைப் பற்றி நிறைய எழுதியுள்ளனர். ஆனால் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் அந்த அந்த நாடுகளின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையை அறிவதில் பெரும்பாலான இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆம்ஸ்டர்டாம் சென்ற என் நண்பன் அங்கு உள்ள சிகப்பு விளக்குப் பகுதிகளுக்குச் சென்று, பிறகு  அங்கு கிடைக்கும் மரிஜுவானா  சாக்லேட்களை உண்டு, அவைதான்  அந்த நாட்டின் சிறப்பு அம்சங்கள் என்று என்னிடம் சொன்னான். உலகிலேயே மிகச் சிறந்த மிதிவண்டி உள்கட்டமைப்புக்கும் (Bicycle Infrastructure) வெள்ளத்தைத் தடுக்கும் Dykes என்ற அமைப்புக்கும் பெயர் போன நாடு நெதர்லாந்து. அவற்றைப் பார்த்தாயா என்று கேட்டால், “ஓ நெதெர்லாந்துல அதலாம் இருக்கா” என்று கேட்டான்.

இத்தகைய சூழலில் மலாவி என்ற தேசத்தைப் பற்றிய அறிமுகத்தை இந்த தொகுப்பின் மூலமாக அளித்ததற்கு மிக்க நன்றி. அத்துடன் ஜேகே, யு ஜி, ஓஷோ போன்ற ஞானிகளை அறிமுகம் செய்து வைத்து அவர்களை மேலும் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறீர்கள். அடுத்ததாக உங்களின் துருக்கி பயண நூலையும் புனைவுகளையும் படிக்க மிக ஆர்வமாக உள்ளேன்.

அன்புடன்,

கார்த்திக்

நாகர்கோயில்

இன்னொரு கடிதம் அனுஷா என்ற கல்லூரி மாணவியிடமிருந்து.  எக்ஸைல் நாவல் பற்றி.  எக்ஸைல் நாவல் பற்றி சிலாகித்து இதுவரை ஒரு பெண் கூட எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை.  உங்கள் கடிதத்தை வெளியிடலாமா என்று கேட்டேன்.  இனிஷியலோடேயே வெளியிடலாம் என்றார். 

அந்தக் கடிதம்:

எக்ஸைல் படித்தேன்.  Addicted to it.  Reading it again.  Engrossing.  Breathtaking. You are a sorcerer Charu. 

அனுஷா கே.

இந்த இரண்டு கடிதங்களையும் இங்கே இப்போது பதிவிட காரணம், ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும்.  இன்று கூட ”உங்கள் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்?” என்று கேட்டு ஒரு கல்லூரி மாணவரிடமிருந்து கடிதம் வந்தது.  ஆயுசு பூராவும் இந்தப் பிரச்சினை தீராது போலிருக்கிறது.  எந்த அளவுக்கு இளைஞர்கள் விவரம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.  இந்த விஷயத்தில் பெண்கள் சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள். 

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என்னுடைய மற்றும் சக எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் அனைத்தும் 30 சதவிகிதத் தள்ளுபடியில் கிடைக்கின்றன.  இன்று இரவு பன்னிரண்டு மணி வரைதான் இந்தச் சலுகை.  நாளையிலிருந்து இந்தத் தள்ளுபடிச் சலுகை கிடையாது.  பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

Zero Degree Publishing

I Floor, JMB motorcycles

55(7) , R Block,6th Avenue, Annanagar West,

Chennai 600040.

Contact: +91 8925061999, eMail: zerodegreepublishing@gmail.com