கறுப்புக் காமெடி நாடகம்

கோணல் பக்கங்கள் என்ற தலைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இணைய தளத்தில் நான் எழுதி வந்த பத்தி பெரும் வரவேற்பைப் பெற்றது.  அதன் பிறகு சாருஆன்லைனில் கோணல் பக்கங்களைத் தொடர்ந்தேன்.  அதன் மூன்று தொகுதிகளின் மறுபதிப்பு இப்போது கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளிவருகிறது. அதோடு, ஸீரோ டிகிரி கிடைப்பதில்லை என்ற புகார் அவ்வப்போது இருந்து வந்தது.  அந்த நூலும் இப்போது மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளது. இப்போதைய சென்னை புத்தகச் சந்தையில் இந்த நான்கு நூல்களும், கடந்த ஆண்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த எக்ஸைல் நாவலும் கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும்.  (கோணல் பக்கங்களும் ஸீரோ டிகிரியும் நாளை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.  எதற்கும் விசாரித்துக் கொள்ளுங்கள்).

Chennai book fair 2013

Date: Jan 11th to 23rd

Kizhakku Stall Number: 246

For more details, pl contact: 95000 45608

என்னுடைய ஏனைய நூல்கள் உயிர்மை பதிப்பகத்தில் கிடைக்கும்.  என்னுடைய (சுமார்) 20 புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  புத்தகச் சந்தையில் உயிர்மை பதிப்பகத்தின் ஸ்டால் எண் உயிர்மை இணையதளத்தில் எனக்குக் கிடைக்கவில்லை.  கிடைத்ததும் இங்கே பதிவேற்றுகிறேன். 

புத்தகச் சந்தை எங்கே நடக்கிறது என்று கேட்டு எனக்கு தயவுசெய்து மெயில் அனுப்பாதீர்கள்.  புத்தகச் சந்தை என்பதை ஒரு black humour என்றே நான் கருதுகிறேன்.  லட்சக் கணக்கான மக்கள் வந்து போகும் இடத்தில் கற்பனையே செய்ய முடியாத அளவுக்குக் கொடூரமான கக்கூஸை வைத்திருக்கும் வரை புத்தகச் சந்தை மீது எனக்கு மரியாதை வராது.  அந்த அவலத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. 

கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலும் புத்தகச் சந்தையை கறுப்புக் காமெடி என்றே அழைப்பேன்.  ஏனென்றால், அங்கே கோடிக் கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை ஆகின்றன என்று சொல்லப்பட்டாலும் அந்தப் புத்தகங்களுக்கும் இலக்கியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  12 தினங்கள் நடக்கும் புத்தகச் சந்தையில், லட்சக் கணக்கான மக்கள் வந்து போகும் புத்தகச் சந்தையில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களின் விற்பனை ஒரு ஆயிரத்தைக் கூடத் தாண்டுவதில்லை.  எட்டு கோடி பேர் வசிக்கும் தமிழ்நாட்டில் எக்ஸைல் 3000 பிரதிகள் விற்கிறது.  ஒரு லட்சம் பிரதிகள் விற்க வேண்டாமா?  புத்தகச் சந்தையிலேயே 5000 பிரதிகள் விற்க வேண்டுமே?  என்னுடைய புத்தகங்கள் மட்டும் அல்ல.  மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் சேர்த்தே சொல்கிறேன்.  இங்கே புத்தகம் வாங்குபவர்கள் எல்லாம் என்ன புத்தகங்களை வாங்குகிறார்கள்?

ஆங்கிலம் தமிழ் டிக்‌ஷனரி.

சமையல் புத்தகங்கள்.

ஆன்மீகப் புத்தகங்கள்.

Pulp நாவல்கள்.

பணம் சம்பாதிப்பது எப்படி என்ற “எப்படி” புத்தகங்கள். (சரியாகப் புணர்வது எப்படி என்ற புத்தகம் இன்னும் வர்லியோ?)

குழந்தைகள் பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தரும் புத்தகங்கள்.

கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகங்கள்.

95 ஸ்டால்கள் இப்படி இருந்தால் ஐந்தே ஐந்து ஸ்டால்கள்தான் இலக்கியத்துக்காக இருக்கின்றன.  புத்தக வியாபாரம் என்பதே “கதெ” புஸ்தக வியாபாரிகளிடம் – PULP நாவல் விற்பவர்களின் கைகளில் இருந்தால் அந்தப் புத்தகச் சந்தையை ஒரு இலக்கியவாதியான நான் எப்படி மதிக்க முடியும்?

சென்னை புத்தகச் சந்தையில் நான் பார்க்கும் இன்னொரு அவலம், சந்தை நடக்கும் இடத்துக்கு வெளியே அரசியல்வாதிகள், pulp புத்தகம் எழுதுபவர்கள், இலக்கியத்துக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத மேடைப் பேச்சாளர்கள் போன்றவர்களை வைத்து நடக்கும் சொற்பொழிவு.  பல சமயங்களில் சந்தைக்கு உள்ளே இருக்கும் கூட்டத்தை விட இந்த மேடைப் பேச்சைக் கேட்கும் கும்பல்தான் அதிகமாக இருக்கிறது.  இது போன்ற மேடைப் பேச்சுக்களால்தானே தமிழ்நாடு ஐம்பது ஆண்டுகளாக உருப்படாமல் கிடக்கிறது?  இதே மேடைப் பேச்சு புத்தகச் சந்தையில் எதற்கு?  இங்கே என்ன மாநாடா நடக்கிறது?  இதையெல்லாம் கேட்பார் யாரும் இல்லை.  நான் மட்டும்தான் தனியாளாகக் கத்திக் கொண்டிருக்கிறேன்.  புத்தகச் சந்தை என்பது எப்போது கமர்ஷியல்/pulp புத்தக வியாபாரிகளிடமிருந்து இலக்கிய நூல்களைப் பிரசுரிக்கும் பதிப்பாளர்களின் பொறுப்பில் வருகிறதோ அன்றைய தினம்தான் புத்தகச் சந்தை என்ற வார்த்தைக்கே அர்த்தம் கிடைக்கும்.  மற்றபடி இங்கே நடப்பது தீவுத் திடல் பொருட்காட்சி தான்.  குடை ராட்டினம் மட்டும்தான் மிஸ்ஸிங்…

 

Comments are closed.