இடமும் இருப்பும்

சிறப்புப் பதிப்புக்குப் பணம் அனுப்ப இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.  அதற்குப் பின் புத்தகம் அச்சுக்குப் போய் விடும்.  அம்பதாயிரம், லட்சம், மூணு லட்சம் எல்லாம் முடியாவிட்டாலும் பத்தாயிரம் ரூபாய் அனுப்பி சிறப்புப் பதிப்புக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள்.  ராஸ லீலா சிறப்புப் பதிப்புக்கு எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் பணம் அனுப்பியிருந்தார்கள்.  ஆனால் நான்தான் ஔரங்ஸேப்… நாவலுக்கு இதுவரை பதினேழு பேர்தான் பணம் அனுப்பியிருக்கிறார்கள்.  அதிலும் பதினைந்து பேர் மாதாமாதம் எனக்குப் பணமாகவோ பூனை உணவாகவோ மற்ற விதமாகவோ உதவி செய்து கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர்கள்தான்.  புதிய வாசகர்கள் இரண்டே பேர்தான் பத்தாயிரம் அனுப்பியிருக்கிறார்கள். 

நான் பணம் கேட்பது வீடு கட்டுவதற்கோ என் சொந்த செலவுக்கோ அல்ல.  கார்ப்பொரேட் சாமியார்கள் கேட்டால் லட்சம் லட்சமாக, கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.  ஆனால் நான் ஒரு பொதுக்காரியத்துக்காகக் கேட்டால் என் நெருங்கிய நண்பர்களைத் தவிர வேறு யாருமே முன்வரவில்லை.  நீங்கள் கொடுக்கும் பணம் எழுத்தாக உங்களிடமேதான் திரும்ப வருகிறது.  சீலே பற்றி சுமார் ஆயிரம் பக்கம் எழுதியிருப்பேன்.  அதில் ஐநூறு பக்கம் சீலே சென்று வந்த பிறகு எழுதியது.  மாயமான் வேட்டை என்ற சிறுகதை என் சீலே பயணத்தால் விளைந்ததுதான்.  இப்போதைய சீலே பயணம் ஆவணப் படமாக, ஒரு சரித்திரப் பதிவாக நிகழ இருக்கிறது.

என் வாழ்வில் இடங்கள் முக்கியம்.  இடங்கள் இல்லாமல் என் இருப்பு இல்லை.  அதனால்தான் சீலே. 

சிங்கப்பூரிலிருந்து ஒருவர் கூட சிறப்புப் பதிப்புக்கு பதிவு செய்யவில்லை.  அமெரிக்காவிலிருந்து மூவர்.  மூன்று பேருமே மாதாமாதம் சந்தா கட்டும் என் நெருங்கிய நண்பர்கள்.  வேறொரு நண்பர் அமெரிக்காவிலிருந்து பதினைந்து ஆண்டுகள் கழித்து என்னைத் தொடர்பு கொண்டார்.  வெள்ளிக்கிழமை இரவு என்பதால் முழு போதையில் இருந்தார்.  அரை மணி நேரம் என்னைப் பாராட்டினார்.  உங்களால்தான் என் வாழ்க்கையே ரம்மியம் ஆனது; நீங்கள்தான் எனக்கு ஞானகுரு, அப்படி இப்படி…  பிறகு அவருடைய சொந்தக் கதை… அவருக்குப் பச்சை அட்டை கிடைத்தது, வீடு வாங்கியது என்று என்னென்னவோ.  

எனக்குக் கொலைவெறி ஆனது.  எனக்கு அவர் கொடுக்கும் பாராட்டைக் காட்டினால் சீலேவுக்கு டிக்கட் தருவார்களா? விட்டால் அந்தப் பேச்சு இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் கூடப் போயிருக்கும்.  நான் அவசர வேலையிருக்கிறது என்று தப்பி ஓடி விட்டேன்.  தப்பி ஓடும் வேளையில் “ஆமாம், ஔரங்ஸேப் சிறப்புப் பதிப்புக்குப் பதிவு செய்தீர்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன்.  “ஐயோ தல, இதோ இப்பவே பணம் அனுப்பிடுறேன் தல” என்றார்.  நானும் ஓடி விட்டேன்.   

மறுநாள் அவரிடமிருந்து ஒரு ஸ்க்ரீன் ஷாட் வந்தது.  ஸூம் மூலம் நாற்பதாயிரம் ரூபாய் அனுப்ப முயன்று, அதில் தோல்வி என்று கண்டிருந்தது. 

நடந்து ஒரு வாரம் ஆகிறது.  நண்பரிடமிருந்து தகவலே இல்லை.  என்னுடைய ப்ளாக் மூலமும் ரேஸர் பே மூலமும் இன்னும் பல வழிகளிலும் அனுப்பலாம்.  ப்ளாகில் உங்களுடைய கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் நம்பரைப் போட்டு, தொகையைச் சொன்னால் பணம் வரப் போகிறது?  இதையும் அவருக்கு செய்தியாக அனுப்பினேன்.  ஒரு பதிலும் இல்லை.

எனக்கு இந்த சர்க்கஸ் விளையாட்டும், கிம்மிக்ஸும்தான் பிடிக்காது.   வெள்ளிக்கிழமை இரவு தண்ணி அடித்து விட்டு மணிக்கணக்கில் பேச நான் என்ன செக்ஸ் ஒர்க்கரா?  சரி, அப்படிப் பேசினால் நான் சிறப்புப் பதிப்பு பற்றிப் பேசத்தான் செய்வேன்.  அதற்கு பதில் ஸ்க்ரீன் ஷாட்டா?  அந்த ஸ்க்ரீன் ஷாட்டை வைத்துக் கொண்டு நான் என்ன நாக்கு வழிக்கவா?  இவர்களெல்லாம் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?  ஏனய்யா, பணம் அனுப்ப நினைத்து, அதை ஒரு வாரமாகவா அனுப்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்?  சிலருக்கு நேரம் கிடைக்காமல் போகலாம்.  அதை நான் புரிந்து கொள்கிறேன்.  ஆனால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்ப ஐந்து நிமிடம் போதாதா?  குடித்து விட்டு என்னிடம் அரை மணி நேரம் பிளேடு போட மட்டும் நேரம் இருக்கிறதா? 

இதய சிகிச்சை நிபுணரிடம் சென்றால் அவரைப் பார்க்க நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்.  இப்படி அவர் ஒரு நாளில் நூறு பேரைப் பார்க்கிறார்.  ரசீது கிடையாது.  பணமாகத்தான் கொடுக்க வேண்டும்.  இப்படி ரசீது இல்லாத பணத்துக்கு வரி ஏது?  நான் அந்த மருத்துவரை மாற்றி விட்டேன். 

ஆனால் எழுத்தாளன் என்றால் மட்டும் ஓசி ஓல் போடத் தயாராக வந்து விடுகிறார்கள்.

மீண்டும் சொல்கிறேன்.  என்னிடம் தண்ணி அடித்து விட்டுப் பேசாதீர்கள்.  தேரை இழுப்பதற்கு உங்கள் கை தேவை என்று கேட்கிறேன்.  முடிந்தால் கை கொடுங்கள்.  ஆனால் கிம்மிக்ஸ் எதுவும் வேண்டாம்.

என்னுடைய எழுத்து ஒரு இயக்கம்.  கடந்த மூன்று மாதங்களில் மொழிபெயர்ப்புக்காக மட்டும் மூன்று லட்சம் கொடுத்தேன்.  இது யாருக்கும் தெரியாது.  யாரிடமும் சொல்லவில்லை.  முடிந்தால் உதவுங்கள்.  உதவ இயலாவிட்டால் பணத்தைப் பற்றியே யோசிக்காதீர்கள்.  பணம் என் உலகில், என் சிந்தனையில் இல்லை.  சில விஷயங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது.  அதனால் அந்த சில்லறை சமாச்சாரத்தைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.  அவ்வளவுதான். 

தியாகராஜா நாவல் எழுதுவதற்காக நான் அவருடைய உலகினுள் செல்ல வேண்டியிருக்கிறது.  அதனால் சாரதானந்தா எழுதிய 1500 பக்க நூலான ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஏற்கனவே சூர்தாஸின் கூட்டுக்குள் சென்று தங்கி விட்டு வந்தேன்.  எல்லாம் பெரிய விஷயங்கள்.  எனவே இந்த சில்லறை சமாச்சாரத்தைப் பற்றிப் பேச வேண்டிய தேவை அதிகம் இல்லை.  பேச வேண்டிய தேவை இல்லை என்றேன்.  செயலை எதிர்நோக்கிய காரியம் இது.  கிம்மிக்ஸுக்கோ சுயப் பச்சாதாபத்துக்கோ நமக்கு நேரம் இல்லை.  அவசியமும் இல்லை.  உங்களால் இயன்றால் சிறப்புப் பதிப்புத் திட்டத்தில் கலந்து கொண்டு பணம் அனுப்புங்கள்.  இல்லையேல் தொடர்ந்து என்னை வாசியுங்கள்.  ஞானத்தை அடைவீர்கள் என்பது நிச்சயம்.     

பணம் அனுப்புவதற்கான விவரம் ப்ளாகில் கிடைக்கும்.  கேட்வே இருக்கும்.  ரேஸர் பே மூலம் அனுப்பலாம்.  இல்லாவிட்டால் என் ஆக்ஸிஸ் வங்கிக்கு அனுப்பலாம்.

Axis bank account number 911010057338057

Account holder: K. Arivazhagan

Branch: Radhakrishnan road Mylapore Chennai 4

IFSC     UTIB0000006