மலேஷியப் பயணம்

மலேஷியப் பயணம் இனிதே முடிந்து நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன்.  முதலில் இந்தப் பயணத்துக்குக் காரணமாக அமைந்த திருமாறனுக்கு நன்றி.  மேலும், பாலமுருகன், வல்லினம் நவீன், சிவா, சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, தயாஜி, பாண்டியன், டாக்டர் முல்லை ராமையா மற்றும் நண்பர்களுக்கும் என் நன்றி. சுவாமிஜியின் ஆசிரமத்தில்தான் இரண்டு தினங்கள் தங்கியிருந்தேன்.  சுவாமிஜியின் அன்பு மறக்கவே முடியாதது.  அவரே எனக்கு தோசையும் காப்பியும் போட்டுக் கொடுத்தார். தோசைக்கும் காப்பிக்கும் பிறகு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.  ஆசிரமத்தில் அடியேன் சிறியதொரு ஆன்மீகச் சொற்பொழிவும் ஆற்றினேன்.  இலக்கியம் அறிந்த சந்நியாசி.

மேற்கூறிய நண்பர்களின் உதவி இருந்திராவிட்டால் இந்த அளவுக்கு மலேஷியாவைச் சுற்றி அறிந்திருக்க முடியாது.  பட்டர்வொர்த் ஆல்பர்ட் மற்றும் அவரது போலீஸ் நண்பர் கணேசன் ஆகியோரின் அன்பையும் மறக்க இயலாது.  கணேசன் சொன்ன மலேஷிய போலீஸ் கதைகள் இன்னொரு ராஸ லீலா அளவுக்கு வரும்.

பொதுவாக நான் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கே உள்ள இசைக் கலைஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிப்பேன்.  ஆனால் மலேஷியத் தமிழ் நண்பர்களோடு பழகிச் சுற்றியதில் இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசைஞானிகளை மட்டுமே அறிந்து கொள்ள முடிந்தது.  இதுதான் நமக்குத் தமிழ்நாட்டிலேயே தெரியுமே, இவர்களெல்லாம் மலாய் மற்றும் சீன மக்களோடு கலந்து வாழ்கிறார்களே, இவர்கள் மூலம் சீன, மலாய் இசைக் கலைஞர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு என்று நினைத்தால் அது நடக்கவில்லை.  மலேஷியத் தமிழர்களிடம் சீன, மலாய் கலாச்சார காற்றே படவில்லை என்று தெரிந்து விசனப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் திருமாறன் Reshmonu-வை அறிமுகப்படுத்தினார்.  திருமாறன் எழுத்தாளர் அல்ல; மற்றும் இளைஞர் என்பதே இதற்குக் காரணம்.  ரேஷ்மோனுவின் இந்தப் பாடலை நூற்றுக் கணக்கான முறை கேட்டு விட்டேன்; அலுக்கவே இல்லை.

இன்னும் பல நூறு முறை கேட்பேன் என்று நினைக்கிறேன்.  மலேஷியப் பாடகரான ரேஷ்மோனுவைக் கேட்டுக் கொண்டிருந்த போது சில மலேஷியத் தமிழ்ப் பாடகர்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.  அவர்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடகர் திவ்யா.  (திவ்யாவை உங்களுக்குத் தெரியுமா திருமாறன்?)  திவ்யாவின் குரலில் ஏதோ ஒரு இனம் புரியாத வசீகரம் இருக்கிறது.  இனி வேண்டாம் என்ற இந்தப் பாடலில் வரும் வயலின் இசை Tory Lanez-இன் Violins என்ற பாடலிலிருந்து அப்படியே உருவப்பட்டது.  இருந்தாலும் இப்படிப்பட்ட உருவல்களை நாம் ரஹ்மான், இளையராஜா என்று எல்லோரிடமுமே பார்க்க முடியும்.  ரஹ்மானின் ஸ்லம்டாக் மில்லியனர் பாடல்கள் அனைத்தும் பழைய இந்திப் பாடல், ஒரு லத்தீன் அமெரிக்கப் பாடல் ஆகியவற்றின் காப்பி.  காப்பி என்ன காப்பி?  அப்பட்டமான திருட்டு.  ஆனாலும் இசைத் துறையில் இதெல்லாம் சகஜமாக நடந்து கொண்டிருப்பதால் இது பற்றிக் கவலைப்பட முடியாது.  மேலும், இப்படிப்பட்ட copycat விஷயத்தினால் இவர்களின் மற்ற சாதனைகளை நாம் மறுத்து விட முடியாது.  திவ்யாவின் குரல் அருமை.  ரேஷ்மோனு அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்தப் பாடலை பலமுறை கேட்கலாம்.

Comments are closed.