கோவா – சாலைவழிப் பயணம் (2)

இந்த சாலைவழிப் பயணத்துக்கு சுமார் இருபது பேர் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தார்கள்.  ஒவ்வொருவருக்கும் பதில் எழுதியிருக்க வேண்டும்.  நாவல் வேலை தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருப்பதால் பதில் எழுத முடியாமல் போனது.  காரில் ஆறு பேருக்குப் பெயர் கொடுத்து விட்டார்கள்.  கணபதி, சீனி, வினித், பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு நண்பர் (இவருக்கும் என்னைப் போலவே வீட்டில் நெருக்கடி), ராஜா வெங்கடேஷ், அடியேன்.   இந்த சாலைவழிப் பயணத்தில் சேர்ந்து கொள்ள விரும்பி கடிதம் எழுதிய நண்பர்கள் இருபது பேரும் எனக்குப் புதியவர்கள்.  அதில் காஞ்சி சிவா தவிர மற்ற யார் பெயரும் எனக்குத் தெரியாது.  ஒருவர் புதுச்சேரி சந்திப்புக்கு வந்திருக்கிறார்.  அவ்வளவுதான். 

வர விரும்புபவர்கள் எனக்கு எழுதுங்கள் என்று மொட்டையாக எழுதியது என்னுடைய தவறுதான்.  நான் என்ன எழுதியிருக்க வேண்டும் என்றால், இதுவரை தேரில் வடம் பிடித்தவர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்படும் என்று எழுதியிருக்க வேண்டும்.  தேருக்கு வடம் பிடிப்பது என்றால் என்ன?

ஏற்கனவே ஆயிரம் முறை எழுதிய விஷயம்தான்.  நான் பன்னிரண்டு லட்சம் செலவு செய்து தென்னமெரிக்கா போய் வருவேன்.  வெகுஜனப் பத்திரிகையில் கட்டுரை கேட்பார்கள்.  கொடுப்பேன்.  900 ரூ. அனுப்புவார்கள்.  அதை வைத்துக் கொண்டு மலம்தான் துடைக்க முடியும் இல்லையா?  அப்படியானால் அந்தப் பன்னிரண்டு லட்சமும் யார் கொடுத்தது?  என் வாசகர்கள்.  அவர்கள்தான் தேருக்கு வடம் பிடித்தவர்கள்.  அப்படியானால் பணம்தான் முக்கியமா என்று கேட்கக் கூடாது.  உங்கள் மூளையைக் கொடுங்கள்.  சீனி இதுவரை எனக்கு ஒரு வைன் போத்தல் கூட வாங்கிக் கொடுத்தது இல்லை.  ஒரு நயாபைசா கொடுத்தது இல்லை.  ஆனால் அவர் கொடுத்த யோசனையால்தான் நான் சீலே போக முடிந்தது.  எனக்கு சீலே போவது ஒரு இருபத்தைந்து ஆண்டு கனவு. அறுபது வயது ஆனதும் என் கனவு நனவாகாமலே செத்து விடுவேன் என்று தோன்ற ஆரம்பித்தது.  கொஞ்சம் மனநிலையும் பாதிக்கப்பட்டது.  சீலே போகாமல் நான் செத்துப் போனால் உன்னையும் கார்த்திக்கையும் பேயாக வந்து டார்ச்சர் கொடுப்பேன் என்றெல்லாம் அவந்திகாவிடம் மிரட்ட ஆரம்பித்தேன்.

காரணம், இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோடீஸ்வரர் எனக்கு மாதம் இருபதாயிரம் அனுப்பி உலகமெல்லாம் சுற்றி வாருங்கள் என்றார்.  அத்தனை பணமும் என் நாய்களுக்கே செலவாயிற்று.  நாய்களைக் கொண்டு வந்து என் பயணங்களை முடக்கியது கார்த்திக்கும் அவந்திகாவும். 

சீனியிடம் புலம்பினேன்.  ராஸ லீலா புது எடிஷனை ஒரு காப்பி பத்தாயிரம் என்று விற்பனை செய்யுங்கள் என்றார்.  இதைக் கேட்டால் உங்களுக்கு சீனி ஒரு பைத்தியக்காரன் என்று தோன்றும்.  யாரும் எதற்காகவும் சீனி பேச்சைக் கேட்பதில்லை என்பதையும் கவனித்து வருகிறேன்.  நான் ஒருவன்தான் அவர் பேச்சைக் கேட்டு உருப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான்கு பேர் ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்து ராஸ லீலாவை வாங்கினார்கள்.  மீதி எண்பது பேர் பத்தாயிரம் கொடுத்து வாங்கினார்கள்.  சௌக்கியமாக சீலே சென்று வந்தேன்.  (சீனிதான் உன்னைக் கெடுக்கிறார், சீனியோடு சேராதே, சீனியோடு பேசாதே என்கிறாள் அவந்திகா.  அதனால் சீனியோடு நான் ரகசியமாகத்தான் பேச வேண்டியிருக்கிறது.  இல்லாவிட்டால்  வாட்ஸப் சாட் மூலம்.)

இப்போது கூட என்ன நடந்தது?  இந்த சாலைவழிப் பயணத்துக்கான யோசனையே சீனிதான் வழங்கினார்.  வாஸ்தவத்தில் என்ன நடந்திருக்க வேண்டும்?  இளைஞர்களே சேர்ந்து இதற்கான திட்டத்தையெல்லாம் போட்டு விட்டு, என்னிடம் வந்து, வாருங்கள் சாரு, கோவா வரை காரில் போய் வரலாம் என்று சொல்லியிருக்க வேண்டும்.  காரணம் என் வயது எழுபது.  நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்.  அப்போதும் கூட நான் “இல்லை, என்னால் வர இயலாது, நாவலை முடிக்க வேண்டும்” என்றுதான் சொல்ல வேண்டும். வயது எழுபது.  அப்போதும் நீங்கள்தான் “இல்லை சாரு, நீங்கள் சாலைவழிப் பயணமே செய்திருக்க மாட்டீர்கள், வாருங்கள்” என்று சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு போயிருக்க வேண்டும். 

ஆனால் இங்கே என்ன நடக்கிறது?  நான்தான் எல்லாவற்றையும் நொட்ட வேண்டியிருக்கிறது.  சீனியிடம் என்னால் பேச முடியாது.  அவந்திகா பூனைக்கு உணவு கொடுக்கப் போயிருக்கும் போது அவசர அவசரமாக சீனியை அழைப்பேன்.  காலை பதினொன்று.  அவர் காலை ஐந்து மணிக்குப் படுத்திருப்பார்.  நான் அழைக்கும்போது அவருக்கு நள்ளிரவு.  மாலையில் குறுஞ்செய்தி அனுப்புவேன்.  இன்று டிக்கட் போட முடியவில்லை, நேரம் இல்லை, நாளை செய்கிறேன் என்பார். 

கோவாவில் நல்ல இடமாகப் பதிவு செய்ய சுமார் ஐந்து ஆறு மணி நேரம் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.  படிக்க வேண்டும்.  எந்த வழியில் செல்வது என்று முடிவு செய்ய வேண்டும்.  திரும்பி வருவதற்கு விமான டிக்கட் போட வேண்டும்.  நீங்கள் வருகிறீர்களா என்று வினித்தைக் கேட்டேன்.  லீவு கிடைக்காது, நான் நேரடியாக கோவா வந்து விடுகிறேன் என்று பதில் வந்தது.  இப்படி நானே ஒவ்வொருவருக்காக ஃபோன் செய்து முறைவாசல் செய்து கொண்டிருந்தேன்.  என் வயது எழுபது.  ஹம்ப்பியில் இரண்டு நாள் தங்கலாம் என்று முடிவு செய்தேன்.  அப்போதும் சீனிதான் முன்வந்து “சாரு, அங்கே நீங்கள் மது அருந்த முடியாது, தடை இருக்கிறது” என்று எச்சரிக்கை தருகிறார்.  வேறு எந்த இளவட்டமும் இல்லை. 

நான் எப்படி ஆள் தெரியுமா?  இம்மாதிரி விஷயங்களில் நான் எம்மார் ராதா மாதிரி.  வருகிறவர்கள் வருகிறபடி வந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த நாளே விமானத்தைப் பிடித்து கோவா போய் ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி விடுவேன்.  அப்படித்தான் காஷ்மீர் லேயில் ஒருநாள் இரவு ஏதோ ஒரு உருப்படாத விஷயத்தைப் பிடித்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.  நான் மறுநாளே லேயிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பி விட்டேன்.  நண்பர்கள் மட்டுமே கார்கில் சென்றார்கள். 

ஏனென்றால், நானே விதித்துக் கொண்ட தனிமைச் சிறையிலிருந்துதான் வெளியே வருகிறேன்.  அங்கே வந்தும் தாலிபான் ஆட்சியில் வாழ வேண்டும் என்றால் என்னால் முடியாது. 

ஆக, இந்த முன்னெச்சரிக்கையைக் கொடுக்க சீனியைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?  ஹம்ப்பி போன பிறகு அங்கே மது அருந்த முடியாது என்று தெரிந்திருந்தால் அந்தக் கணமே நான் சாலைவழிப் பயணத்திலிருந்து பிய்த்துக் கொண்டு கோவா கிளம்பியிருப்பேன்.  எவ்வளவு செலவு, எவ்வளவு குளறுபடி!  

ஆக, அந்த முன்னெச்சரிக்கையைக் கொடுக்க என் வாழ்வில் யாருமே இல்லை.  இனிமேலும் யாரும் இருக்கப் போவதும் இல்லை.  இத்தனைக்கும் சீனி ஹம்ப்பியெல்லாம் போனது இல்லை. ஆனால் அது பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டார்.  என்னையும் அவருக்குத் தெரியும்.  ஆனால் இந்த விஷயத்தை அவர் ஃபேஸ்புக்கில் எழுதியபோது ஒரு நண்பர் வந்து ஹம்ப்பியில் உள்ள நதியைக் கடந்தால் ரெண்டு மைல் தூரத்தில் உள்ள ஊரில் மது அருந்தலாம் என்று பின்னூட்டம் இட்டார்.  இது போன்ற நண்பர்கள்தான் என் வாழ்வில் துயரம் கொண்டு வருபவர்கள்.  சீனி அதற்கு பதில் பின்னூட்டம் போட்டார்.  “அந்த ஊரில் இருந்த மதுபானக் கூடங்களைத் தரை மட்டமாக ஆக்கி விட்டார்கள்.  இரண்டு வருஷம் ஆகிறது.” 

இதையெல்லாம் எதற்குச் சொல்ல ஆரம்பித்தேன்?  தேருக்கு வடம் பிடிப்பது என்றால் பணம் தருவது மட்டுமே அல்ல.  சரி, சீனி செய்யும் உதவியை மற்றவர்களால் செய்ய இயலாது.  அப்படியானால் பணம்தான் அடுத்தது.  ஏற்கனவே எழுதினேன்.  மனநிலை சரியில்லாத, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆனந்தி எனக்கு மாதந்தோறும் மருந்து அனுப்பி வைக்கிறார் என்று.  அவர் சொல்லாமலே எனக்குத் தெரியும், அவர் ஊதியம் 20000 தான் என்று.  அந்த வேலைக்கு அவ்வளவுதான் தருவார்கள்.  என் மருந்துகள் 4000 ரூ. இருக்கும்.  எப்படி சமாளிக்கிறாய், வேண்டாமே என்றேன்.  மாலையிலும் பாடம் சொல்லிக் கொடுத்து இன்னொரு 20000 ரூ. சம்பாதிக்கிறேன் என்றார்.  உண்மையோ பொய்யோ?  தன் ஆசிரியனுக்கான ஆனந்தியின் காணிக்கை.  இதுதான் தேருக்கு வடம் பிடிப்பதன் பொருள்.

ஒன்றுமில்லை.  எனக்கு ஒரு பெண் எட்டு ஆண்டுகள் காலை உணவு கொடுத்தார்.  அவரோடு சமீபத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது “மனிதர் பலருக்கும் அடக்கம் என்பதே இல்லை” என்று சொன்னேன்.  ஏதாவது உதவி செய்தால் அதை மகத்தான உபகாரம் என்றும், சாருவுக்கு வாழ்க்கையையே கொடுத்தேன் என்றும் நினைக்கிறார்கள் என்றும், அதனால் யாரிடமும் உதவி கேட்பதற்கே பயமாக இருக்கிறது என்றும் சொன்னேன்.  அப்போது பேச்சினிடையே அந்தப் பெண் “நானெல்லாம் உங்களுக்கு என்ன செய்திருக்கிறேன்?  எதுவுமே இல்லையே?” என்றார்.  அதற்குப் பெயர்தான் அடக்கம்.  அவர் செய்தது அவருக்கு ஞாபகமே இல்லை.  காரணம், அவர் செய்ததை அவர் செய்ததாகவே அவர் மனதில் பதிந்து கொள்ளவில்லை.  நாம் பிரக்ஞையின்றி சுவாசிப்பது போல் அவர் எனக்கு எட்டு ஆண்டுகள் உணவிட்டார்.  உணவிட்டது அவர் பிரக்ஞையிலேயே இல்லை. 

அவருமே எனக்கு ஒரு காசு கொடுத்தது இல்லை.  ஆனால் இதுவும் தேருக்கு வடம் பிடிப்பதுதான்.

ஆனால் எனக்குக் கடிதம் எழுதிய இருபது நண்பர்களும் எனக்கு சந்தா கூட கட்டியிராதவர்கள்.  என் எழுத்தை இலவசமாக வாசிப்பவர்கள்.  இலவசமாக வாசிப்பதில் எந்தத் தப்புமே இல்லை.  நான் எழுதுவதே உங்களுக்காகத்தான்.  ஆனால் ஒருநாள் கூட உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டும் என்று தோன்றாதவர்களுக்கு சாலைவழிப் பயணம் என்றதும் ”கூட வருகிறேன்” என்று சொல்லத் தோன்றுகிறது. 

இப்படி எழுதுவதற்கு மன்னியுங்கள்.  உங்களைக் குற்றம் சொல்வது என் நோக்கம் அல்ல.  தெளிவாக எழுதாதது என் தவறுதான்.  சீனி கேட்டார், நாம் என்ன ட்ராவல்ஸா நடத்துகிறோம் என்று.  ”இல்லை சீனி, நான்தான் தெளிவாக எழுதவில்லை” என்றேன்.  ஆனாலும் அவர் கேட்டதில் தவறு இல்லைதானே?  தொடர்ந்து நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன், எழுத்தாளனின் நிலை பற்றி.  நாற்பது ஆண்டுகள் நான் இலக்கியப் பத்திரிகைகளில் இலவசமாக எழுதி வந்தவன் என்று.  வேசியிடம் கூட காசு கொடுக்காமல் போக முடியாது.  ஆனால் இலக்கியப் பத்திரிகைகளில் நீங்கள் எல்லாவற்றையும் இலவசமாகப் படித்துக் கொள்ளலாம்.   இது குறித்து எந்தக் குற்ற உணர்வும் கொள்ளத் தேவையில்லை.  ஆனால் வடம் பிடிக்காதவர்கள் என்னைச் சந்திக்க நினைக்காதீர்கள். 

இங்கே தமிழில் எழுதுகின்ற அத்தனை பேருமே போராளிகள்தான்.  அது தவிரவும், தமிழ்க் கலாச்சாரத்தைப் பொருத்தவரை சர்வதேச சினிமா, சர்வதேச இலக்கியம், வரலாறு, சமூகவியல், ஓவியம், இசை என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் எங்கள் மூவரிடம்தான் வந்தாக வேண்டும்.  நட்சத்திரம் நகர்கிறது என்ற மாற்று சினிமாவுக்குக் கூட நாற்பது ஆண்டுகளாக நான் எழுதி வந்த சினிமா கட்டுரைகளும் ஒரு முக்கியக் காரணம்.  என் சினிமா கட்டுரைகளால்தான் நான் இன்று பரதேசியைப் போல் வாழ வேண்டி வந்தது.  இல்லாவிட்டால் நானும் வசனம் எழுதி காசு சம்பாதித்திருக்கலாம்.  (என் இயல்புக்கு சினிமா உலகம் ஒத்து வராது என்பது வேறு விஷயம்.  என்னால் யாரையும் சார் போட்டுப் பேச முடியாது!)

ஆக, என்னுடைய நாற்பத்தைந்து ஆண்டு கால எழுத்து என்பது இந்த சமூகத்துக்கு நான் வழங்கியிருக்கும் கொடை.  அதற்குப் பிரதியாக சமூகத்திடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம்.  எதையும் எதிர்பார்த்து எழுதுவது அல்ல எழுத்து.  என்னை என் நண்பர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.  அதுவே எனக்குப் போதும்.  சர்வதேச இலக்கியத்தில் யார் தயவும் இல்லாமல், எந்த பி.ஆர். வேலையும் செய்யாமல் (செய்வது நல்லதுதான், அதில் எந்தத் தப்பும் இல்லை; எனக்கு பி.ஆர். வேலை செய்ய ஆள் இல்லை, அவ்வளவுதான்.) எனக்கென்று ஓர் இடம் இருக்கிறது.  அது எனக்குப் போதும். 

ஆனால் ஒரு விஷயம்.  நான் நாற்பத்தைந்து ஆண்டுகளாக செய்து வந்த பணிகள் என் ஒருத்தனால் மட்டும் சாத்தியமாகியிருக்கக் கூடியது அல்ல.  ஒரு குழுவே எனக்குப் பின்னால் இருக்கிறது.  சீனி, ஸ்ரீராம், புவனேஸ்வரி, வித்யா சுபாஷ், செல்வகுமார், குமரேசன், மதுரை அருணாசலம், சிங்கப்பூர் சிவா, திருப்பூர் செந்தில் குமார், செந்தில் (திருப்பூர்), சிவபால கணேசன் (பொள்ளாச்சி), சுரேஷ் ராஜமாணிக்கம், வினித், கணேஷ் அன்பு, காயத்ரி, ராம்ஜி, வேளச்சேரி ராஜேஷ், கருந்தேள் ராஜேஷ், ராஜா வெங்கடேஷ், கார்த்திக் (இப்போது அவர் கொஞ்ச நாளாக ஆளைக் காணோம்!), ஒளி முருகவேள், ஆனந்தி, திருவல்லிக்கேணி கண்ணன், திருவல்லிக்கேணி முரளி என்று ஏராளமான பேர்.  இன்னும் பலர் உண்டு.  இந்தப் பட்டியலில் மாதாமாதம் நூறு ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை அனுப்பும் வாசகர்கள் பெயரைச் சேர்க்கவில்லை.  இவர்களில் மேல்மருவத்தூர் ரமேஷ், தினமலர் ரமேஷ், தினமலர் வெங்கடேஷ், நல்லி குப்புசாமி செட்டியார் போன்றவர்களின் உதவி தனி.  இவர்கள் பிரபலமாகவும் இருப்பதால் அவர்களின் நலன் கருதி அடிக்கடி இவர்கள் பெயரை நான் சொல்வதில்லை.  இப்போது இந்தக் குழுவில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் கணபதி.

ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் தேருக்கு வடம் பிடிக்காமல் இருக்கலாம்.  அது உங்கள் விருப்பம்.  ஆனால் என் அருகே நெருங்க முடியாது.  இதன் பொருள், என்னுடைய நேரத்தை உங்களுக்கு என்னால் தர முடியாது.  அதற்கு நீங்கள் ஒரு விலை தர வேண்டும்.  அதைத்தான் தேருக்கு வடம் பிடித்தல் என்கிறேன்.  விலை என்பது பணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஸ்ரீராம் எனக்குப் பணம் கொடுத்தது இல்லை.  ஆனால் அவர் இல்லாமல் என்னால் ஔரங்ஸேபை எழுதியிருக்க முடியாது.  எனக்கு வேண்டிய நூற்றுக்கணக்கான புத்தகங்களைத் தருவித்துக் கொடுப்பவர் அவர்தான்.  இப்படி ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொருவர் என் இயக்கத்துக்கு உதவியாக இருக்கிறார்கள்.  அப்படி இருப்பவர்களுக்கு மட்டுமே என் அண்மையையும் நேரத்தையும் என்னால் தர முடியும்.

இன்னொரு முக்கிய விஷயம்.  இனிமேல் வருவதை பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் படிக்க வேண்டாம்.  ஒருவர் சுயமைதுனம் செய்வதை வேறு யாராவது பார்க்க அவர் அனுமதிப்பாரா?  அனுமதிப்பார் என்றால், அனுமதிக்கப்படும் மனிதர் அவருக்கு யாராக இருக்க முடியும்?  இந்தக் கேள்வியை நான் என் தோழியிடம் கேட்டேன்.  ஒருக்கணம் கூட யோசிக்காமல் அனுமதிக்கப்படும் நபர் சுயமைதுனம் செய்பவருக்குத் தோழியாகவோ, தோழனாகவோ மட்டுமே இருக்க முடியும் என்றார். 

நூற்றுக்கு நூறு சரியான பதில்.  நான் குடிப்பதும் அப்படியான ஒரு அந்தரங்கமான காரியம்தான்.  அதைப் பார்க்க உங்களை நான் அனுமதிக்கிறேன் என்றால், நீங்கள் என் ஆத்ம நண்பர் என்று பொருள்.  உங்களை நான் பரிபூரணமாக நம்புகிறேன் என்று பொருள்.  ஆயுள் பரியந்தம் உங்களை நான் பிரிய மாட்டேன் என்று பொருள்.  மேலே நான் குறிப்பிட்ட அத்தனை பேரும் அப்படிப்பட்டவர்கள்தான். 

எனவே அப்படி ஒரு அந்தரங்கமான காரியத்தில் உங்களையும் சேர்த்துக் கொள்கிறேன் என்கிறபோது நீங்கள் வெளியே போய் வேறு ஒருவரிடம் என்னைக் குடிகாரன் என்று சொல்வது என் சோற்றில் விஷம் வைப்பதற்கு ஒப்பானது.  அந்தக் காரியத்தைத்தான் செய்தார் முப்பத்தைந்து ஆண்டுகளாக என்னோடு பழகிய உலகளந்தான்.  குடிகாரன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.  அவந்திகா இவரை (சாருவை) எப்படி எப்படியெல்லாமோ பாதுகாக்கிறார், இவர் இங்கே வந்து இப்படிக் குடித்துத் தன் உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்.  இது உலகளந்தான்.  இதை நான் அவரிடமே கேட்ட போது பேச்சை மாற்றி விட்டார்.  “உங்களை உங்கள் மனைவி எவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தினால் இப்படிக் குடிப்பீர்கள் என்றே சொன்னேன்”.  இது முன்னதை விட டேமேஜ்.  அவந்திகா என்னைக் கொடுமைப்படுத்துகிறாள் என்று யார் சொன்னாலும் அவரோடு எனக்குப் பேச்சு வார்த்தை இல்லை.  சீனியோடு என்னால் ஃபோனில் பேச முடியாது.  வீடு சிறை.  ஆனால் அதே வீட்டில்தான் கொரோனா காலத்தில் எனக்காக நண்டு வரவழைத்து, அந்த நண்டிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கொலை செய்து எனக்காக சமைத்துக் கொடுத்தாள் அவந்திகா.  இதுவும் அவந்திகாதான்.  (என்னால் அந்த உயிர் நண்டுகளைக் கொலை செய்ய முடியவில்லை என்று பின்வாங்கி விட்டேன்!)  இதுவும் அவந்திகாதான். 

நான் படுபயங்கரமான eccentric ஆள்.  கோபம் வந்தால் பாத்திரத்தை உடைத்து விடுவேன். என்னைப் போன்ற ஒரு எக்ஸெண்ட்ரிக்கை சகித்துக் கொண்டு வாழ்வது எந்த ஒரு பெண்ணுக்குமே சாத்தியம் இல்லை.   ஆனால் வீடு சிறையாக மாறியதும் இப்போது ஐந்து ஆண்டுகளாகத்தான்.  அதற்கு முன்னால் நான் ஒரு  பறவையாக வாழ்ந்தேன்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  ஒரு நண்பரோடு பார்க் ஷெரட்டன் போய் மதியம் பன்னிரண்டிலிருந்து மாலை ஆறு வரை குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தூங்கி விட்டேன்.  ஏழு மணிக்கு சீனியின் ஃபோன் வந்தது.  வடபழனி க்ரீன் பார்க்கிலிருந்து.  நண்பர்களுடன் இருக்கிறேன்.  மது விருந்து.  வர முடியுமா.  எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்டு கிளம்பி விட்டேன்.  அதிகாலை நான்கு மணிக்குத்தான் வீடு வந்தேன்.  இதை எந்தப் பெண்ணாவது அனுமதிப்பாளா? 

இப்போது ஐந்து ஆண்டுகளாக என்ன மாற்றம் என்றால், குடித்தால் செத்து விடுவேன் என்று அவந்திகாவுக்குத் தோன்றி விட்டது.  அதனால்தான் மிரள்கிறாள்.  அதனால்தான் நான் இங்கே சென்னையில் teetotaller வேஷம் போட வேண்டியிருக்கிறது.  ஆனால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.  மாதம் நான்கு நாளோடு மேட்டர் முடிந்து விடுகிறது. 

என்னோடு இத்தனைக் காலம் பழகி விட்டு நான் குடிப்பதை ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த உலகளந்தான் என்ன சொல்கிறார் பார்த்தீர்களா?  அவர் சொன்னதற்கு என்ன அர்த்தம்?  சாரு குடிகாரன். 

அப்படிப்பட்டவர்களை நான் செருப்பால் அடிப்பேன் என்கிறேன்.

ஏனென்றால், முன்பும் கூட நான் வாரத்தில் ஒருநாள் மட்டுமே குடிப்பேன்.  மற்ற ஆறு நாளும் ஒரு மணி நேரம் பிராணாயாமம், தியானம்.  அது தவிர, ஒன்றரை மணி நேரம் நடைப் பயிற்சி.  பத்து மணி நேரம் எழுத்து படிப்பு.  தொலைக்காட்சி பார்ப்பதில்லை.  யாருடைய சுக துக்க நிகழ்ச்சிக்கும் போவதில்லை.  யாரோடும் பேசுவதில்லை.  இப்படி வாழ்பவனைப் பற்றி ஒருத்தர் குடிகாரன் என்று சொன்னால் அவரை உதைக்க வேண்டாமா? 

இப்போது காலையில் ஒன்றரை மணி நேரம் நடைப்பயிற்சி, மாலையில் ஒரு மணி நேரம் யோகா என்று செய்கிறேன்.  இதையெல்லாம் யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.  வைன் அருந்துகிறேன் என்பதை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்.  நான் என்ன செய்யட்டும்?

எனவே என்னுடைய அந்தரங்கமான நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் எனக்கு ஆரோக்கியம் சம்பந்தமாக, குடி சம்பந்தமாக எந்த அறிவுரையும் தராதீர்கள்.  தினமும் குடித்தால் கெடுதல் என்று சொன்னால் பல்லின் மேலேயே போடுவேன்.  குஷ்வந்த் சிங் தினமும் குடித்துத்தான் நூறு வயது வாழ்ந்தார்.  நான் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் குடிக்கிறேன்.  அழிவதற்காக அல்ல.  மேலும், எனக்கு இதுவரை ஜுரம், ஜலதோஷம், வயிற்று வலி, இடுப்பு வலி, முதுகு வலி, மூத்திரக் கடுப்பு, சிஃபிலிஸ், டைஃபாய்ட், கோவிட் என்று எந்த வியாதியும் வந்ததில்லை.  பொதுவாக மனிதர்கள் கஷ்டப்படும் தலைவலி என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது.  நான் யாருக்கு எப்போது ஃபோன் பண்ணினாலும் ஜுரம் என்கிறார்கள்.  அப்படிப்பட்டவர்கள்தான் என் ஆரோக்கியம் பற்றிய கவலையிலேயே இருக்கிறார்கள்.  தினமும் எனக்கு நூறு அறிவுரைகள் தரும் அவந்திகாவினால் வெளி சாப்பாடே சாப்பிட முடியாது.  குடல் வெந்து விடும்.  ஏசி காரில் போனால் ஜுரம் வந்து விடும்.  அவள்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என்னைப் பார்த்து ஊரெல்லாம் ஃப்ளூவாக  இருக்கிறது, ஃப்ரிஜ்ஜிலிருந்து எதுவும் எடுத்துச் சாப்பிடாதே என்றாள்.  நான் கண்டு கொள்ளவே இல்லை.  சில்லென்று சோடாவை எடுத்து எலுமிச்சையைப் பிழிந்து உப்பு போட்டுக் குடித்தேன். 

எனவே, சாலைவழிப் பயணத்துக்கு வர விருப்பம் தெரிவித்தவர்களுக்கு நான் பதில் எழுதவில்லையே என வருந்த வேண்டாம்.  நீங்கள் வாசகர் வட்டக் குழுவோடு இணையுங்கள்.  ஒன்று தெரியுமா, ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்.  ஆனால் அதுதான் ரொம்பவும் சுலபம்.  பணம் கொடுப்பது.  பணம் இல்லை என்று சொல்லாதீர்கள்.  20000 ரூ. ஊதியம் பெறும் ஆனந்தியால் மாதம் 4000 ரூ. என் மருந்துக்காக செலவு செய்ய முடிகிறது என்கிறபோது பணம் இல்லை என்ற வாதம் தவறாகி விடுகிறது. மேற்படி செலவை சரிக்கட்டுவதற்காகவே அவர் கூடுதல் ட்யூஷன் எடுத்து இன்னும் 20000 சம்பாதிக்கிறார்.  எனவே, தேருக்கு வடம் பிடிக்கும் விஷயத்தில் பணம்தான் சுலபம்.  சீனி செய்யும் உதவியையோ, ஸ்ரீராம் செய்யும் உதவியையோ, புவனேஸ்வரி செய்யும் உதவியையோ செய்ய வேண்டுமானால் அது மிகவும் சிரமம்.