நேரம்

மேற்கு ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு நீண்ட கால நண்பர் இங்கே ஜூன் மாதம் வருகிறார். என்னை ஒரு லஞ்சிலோ டின்னரிலோ சந்திக்க வேண்டும் என்கிறார். ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்றால், உடனடியாக ஓடி விடுவேன். அதில் எனக்கு ஒரு நான்கு ஐந்து மணி நேரம் – அதாவது, அரை நாள் – செலவாகி விடும்.

ஆனால் இப்போதும் நான் அப்படி இருக்க முடியாது. என் வயது 70. என்னுடைய ஒவ்வொரு மணித்துளியையும் மிகக் கச்சிதமாக செலவு செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய எல்லா நேரமும் எழுத்துக்குத்தான். ஆனாலும் இலங்கைப் பயணத்தில் 23 தினங்கள் செலவாகி விட்டன. இருந்தாலும் ஒரு நாவல் லாபம்.

நண்பர்களைச் சந்திக்கவும் நான் மிகவும் விருப்பப்படுகிறேன். ஆனால் என் இயக்கத்துக்கு உங்கள் உதவி தேவை. இயக்கம் என்றால் உங்களுக்குத் தெரியும். ஒரு குழுவாகச் செய்ய வேண்டிய வேலையை நான் ஒருவனாகச் செய்து கொண்டிருக்கிறேன். மேற்கத்திய எழுத்தாளர்களுக்கு writer in residence என்று பெரிய பல்கலைக்கழகங்களில் இடம் கொடுத்துப் பணமும் கொடுக்கிறார்கள். இங்கே எழுத்தாளர்கள் சினிமாவுக்கு எழுதித்தான் பொருள் ஈட்ட வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் என்னை மாதிரி உஞ்சவிருத்தி. அதற்கும்தான் சமூகத்திலிருந்து கடுமையான கல்லடியும் சொல்லடியும் விழுகிறது.

இப்போது இலங்கைப் பயணத்துக்கு மூணு லட்சம் ஆனது. இரண்டு லட்சம் நண்பர்களுடையது. என் பணம் ஒரு லட்சம். இதையெல்லாம் நான் எங்கே போய் சம்பாதிப்பது? சீலே செல்ல பத்து லட்சம் வேண்டும்.

எனவே ஒரு முடிவெடுத்திருக்கிறேன். என்னைச் சந்திக்க விரும்புபவர்கள் அதற்கான கட்டணமாக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும். அதற்காக நான் விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டும் வாசகரிடம் கேட்க மாட்டேன். அவருக்குத்தான் நான் கொடுப்பேன். நான் கேட்பது, இதுவரை என் தளத்துக்கு சந்தாவோ நன்கொடையோ செலுத்தாதவர்களிடமிருந்து. அவர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமானால் ஒரு லட்சம் தர வேண்டும். நிர்மல், வளன் போன்ற நண்பர்கள் போகிற போக்கில் என்னைச் சந்திக்கலாம். வளன் தன் முதல் மாத ஊதியத்தில் 75 சதவிகிதத்தை எனக்கு அனுப்பினான். முதல் மாத ஊதியம் ஒரு லட்சம் ரூபாய். அவனைப் போன்றவர்கள், நிர்மலைப் போன்றவர்கள், வித்யா சுபாஷைப் போன்றவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.

இதையும் ஒரு பெரிய பிரச்சினையாக ஊதிப் பெருக்காமல் எளிமையாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் நண்பர்களில் இதுவரை என் இயக்கத்துக்குப் பொருள் உதவி செய்திராதவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால் இந்தக் கட்டணம். இது கட்டணம் கூட அல்ல. ஒரு பகிர்தல். ஒரு அன்பளிப்பு. அவ்வளவுதான்.

இனிமேலும் என் நேரத்தை இலவசமாக வழங்குவதில்லை என்று என் எழுபதாவது வயதில் முடிவெடுத்திருக்கிறேன்.