சபரிமலைக்குச் செல்வதற்கு முந்தின தினம்…

குடிப்பவர்களை விட குடிக்காதவர்களே அதிக வில்லங்கம் கொண்டவர்களாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.  ஆனால் வாசகர் வட்ட நண்பர்கள் அப்படி அல்ல என்பதற்குப் பின்வரும் எழுத்தே சாட்சி.  வாசகர் வட்டத்தின் நிர்வாகியான செல்வகுமார் கணேஷ் சபரிமலைக்குச் செல்வதற்கு முந்தின தினம் கோவிலுக்குச் சென்றதை இப்படி எழுதியிருக்கிறார்.  ரசித்தேன்.  இவர் குறிப்பிடும் அடையார் கோவிலுக்குச் சென்று பெருமாளை தரிசனம் பண்ணினால் பணம் வரும் என்றார் என் நண்பர்.  அவரோடு பலமுறை சென்றேன்.  அவர் அப்பா மத்திய மந்திரி ஆனார்.  ஆனால் எனக்கு ஒரு காசும் வரவில்லை.  வறுமை கூடியதுதான் மிச்சம்.  அப்ப நான் வர மாட்டேன் போ என்று கோவித்துக் கொண்டு அந்தப் பெருமாள் கோவிலுக்குச் செல்வதை நிறுத்தி விட்டேன்.   ஆனால் செல்வாவுக்கு நல்ல அனுபவம் கிட்டியிருக்கிறது.  படித்துப் பாருங்கள்.  எனக்கு என்ன பெருமை என்றால், வாசகர் வட்டத்திலிருந்து – அதாவது என் பள்ளியிலிருந்து – சுமார் ஒரு டஜன் பேர் தயாராகி விட்டார்கள்.  செல்வாவும், பூர்ண சந்திரனும், நிர்மலும் அதிகம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  ராஜேஷ் ஒரு பிரபலமான சினிமா எழுத்தாளராகி விட்டார்.  கணேஷ் அன்பு பயண எழுத்தாளராகி விட்டார்.  அராத்து, சொல்லவே வேண்டியதில்லை.  எனக்கு திருஷ்டி சுற்றிப் போடச் சொல்ல வேண்டும்.  செல்வாவின் “சிறு”கதையில் ஒரு இலக்கணப் பிழை இருக்கிறதே என்று முதலில் நினைத்தேன்.  பிறகுதான் தெரிந்து கொண்டேன், மனைவிக்கு “ர்”, தேவதைக்கு “ள்” என்பது புது இலக்கணம் என்று.  இனி வருவது  செல்வா:

என் மனைவிக்கு சென்னையில் பிடித்த இடங்கள் மிகச் சில. அதில் ஒன்று அடையார் அனந்த பத்மநாபர் கோயில். நீண்டநாள் ஆயிற்று என்று அங்கே போகவேண்டும் என்று கேட்டதால் கிளம்பினோம்.

அளவுகடந்த சுத்தத்துடன் இருக்கும் கோயில்களில் எனக்கு ஈர்ப்பு இல்லை. மேலும் அங்கே வரும் அல்ட்ரா மாடர்ன் யுவதிகள் ‘அங்கிள்’ என்று என்னைக் குறிப்பிடுவதை கேட்கச் சகியாது. ஆனாலும் மனைவி ஆசைபட்டால் நரகத்துக்கே கூட செல்வேன் என்பதால் கிளம்பினேன். கோயில் அருகில் வண்டியை பார்க் செய்யும்போதுதான் நினைவுக்கு வந்தது, நான் அவசரத்தில் குளிக்காமலேயே போயிருந்தேன். மனைவியிடம் அதைச் சொன்னதும் நளினமற்ற கோபத்துடன் விடுவிடுவென்று கோயிலுக்குள் சென்று விட்டார்.

கைக்குழந்தையுடன் கோயிலுக்கு வெளியில் காத்திருந்த போது, கோயிலை ஒட்டிய சபாவில் பாட்டு சப்தம் கேட்டது. அங்கே சற்று உட்காரலாம் என்று போனேன். மங்கிய வெளிச்சத்தில் மொத்த சபாவும் நிரம்பியிருந்தது சில நொடிகள் கழித்துதான் புரிந்தது. அங்கே கச்சேரியில் பாட்டு அல்ல, நாட்டியம். கேரள பாரம்பரிய உடையில் ஒரு தேவதை நடனமாடிக் கொண்டிருந்தாள். வெறுமனே தேவதை என்று குறிப்பிடுவது போதாது. பேரழகு. அதுவும் அவள் வெண்ணிறப் பட்டுடையின் மீது பேரொளி விளக்குகள் கவிந்து மிகுந்த பொலிவுடன் ஆடிக் கொண்டிருந்தாள். விரல் நுனிகளில் மருதாணி, கண்களில் மின்னும் ஈரம், கருத்த மை, வெண்பட்டு உடைக்கும், வெண்ணிற உடலுக்கும் இருந்த மிகச் சிறிய நிறவேறுபாடு என்று நான் ஓரிரு நிமிடங்கள் சுரணையற்று நின்றுவிட்டேன்.

ஒரு பாடல் முடிந்ததும் மேடையில் விளக்குகள் மங்கி பிறகு அணைந்தன. அந்த பெண் மேடைக்குப் பின்னால் திரைச் சீலைகளில் மறைந்தார். கச்சேரி முடிந்துவிட்டதோ என்று நான் ஏமாற்றம் அடைந்த சில நிமிடங்களில் மைக் ஒன்றை வைத்து நாட்டியத்தின் அர்த்தம் என்ன என்பதையும், திருவனந்தபுரம் பத்மநாபர் கோயில் சரிதத்தையும் ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கினாள். பேசும்போது கூட அவள் உடல் அர்த்தங்களை அபிநயித்தது. அங்கே நாத்திகர்கள் இருந்தால் கூட அந்த நிமிடத்தில் பத்மநாபர் சரிதம் உண்மைதான் என்று நம்புவார்கள். அப்படி ஒரு சாட்சியாக அந்த பெண் இருந்தாள்.

இத்தனை என் வாழ்நாளில் எந்த பாரம்பரிய நடனத்தையும் நான் கண்டதில்லை என்ற சோகம் நெஞ்சை தாக்கியது. கொஞ்ச நேரத்தில் மனைவி வந்ததும், கிளம்பினோம். பத்மநாப சரிதம் முடிந்து அடுத்த பாடலுக்கு நடனம் துவங்கியது. நான் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். உயர்த்திய கைகளில், அவர் விரல்கள் தீபிடித்ததைப் போல் இருந்தது. நாங்கள் வழியில் ஹோட்டலில் சாப்பிட்டோம், இருபது கிலோமீட்டர் தாண்டி வீட்டுக்கு வந்துவிட்டோம். இதை டைப் செய்கிறேன். ஆனாலும் ஜதியும், பாடலும் ஒலிக்கிறது, மேகங்கள் மிதக்கும் மேடையில் ரம்பை நளினம் பிடிக்கிறாள். யாரவாது இப்போது என்னை அங்கே கண்டுகொண்டு பேய், பிசாசு என்று பயந்துகொள்ள கூடாதே என்று கவலையாக உள்ளது.

 

 

Comments are closed.