எதிர்வினையும் பதிலும்…

Dear Charu,
I can only say that he is not worth your while. Kamal is after all a
commercial filmmaker who is willing to make all manner of compromise with the Devil. He did not for instance have the balls to stand up for his own creative output and had to resort to emotional blackmail first, and then cravenly surrendered to powers that be. In comparison, your efforts to lead the life of an uncompromising public intellectual, who doesn’t care a shit about being seen as a beggar (rattling the tin in a public forum etc) is way, way more honourable.
———
அன்புள்ள நண்பருக்கு,
நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நானும் மனுஷ்ய புத்திரனும் ஒன்றாக வந்து கொண்டிருந்த போது கமல் பிரச்சினை பற்றிப் பேச்சு வந்தது.  அப்போது அவர் ஒரு கருத்தைச் சொன்னார்.  அதன் சுருக்கம் இதுதான்:  அந்தக் காலத்தில் தீண்டாமை இருந்தது.  ஒரு மனிதனைத் தீண்டத் தகாதவன் என்று ஒருவன் நினைத்தால் அவனுக்கு என்று ஒரு கொள்கை இருந்தது.  என்ன கொள்கை என்றால், நாம் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன், இவன் தீண்டத் தகாதவன், இவன் இழிகுலத்தவன் என்பது அவன் கொள்கை.  அது மனித விரோதமானது என்பது வேறு விஷயம்.  ஆனால் அது ஒரு கொள்கை.  ஒரு conviction.  அதேபோல் இப்போது உங்களைப் போன்றவர்களைத் தீண்டக் கூடாது என்று நினைப்பவர்களுக்கும் ஒரு கொள்கை இருக்கிறது.  இவன் ஒரு outcaste, இவன் ஒரு transgressive எழுத்தாளன், இவன் நம்முடைய நட்புக்கு லாயக்கு இல்லாதவன்,  இவன் இழிந்தவன்.  இவனே வந்து கை குலுக்கினாலும் நாம் இவனிடம் புன்சிரிப்பைத் தந்து விடக் கூடாது.  ஆக, பழங்காலத்தில் தீண்டாமையை பாவித்தவனிடம் எந்த விதமான மனோபாவம் இருந்ததோ அதே மனோபாவம்தான் இந்த நவீன சனாதனிகளிடமும் இருக்கிறது.  அவர்களும் இவர்களும் வேறு வேறு அல்லர்.  இதை கடைந்தெடுத்த ஜாதீயம் என்று மட்டுமே சொல்லலாம்.  சொல்ல வேண்டும்.  ஜாதி ஒழிக என்று கோஷம் போடுபவர்களெல்லாம் உள்ளுக்குள், ரத்தத்துக்குள் ஜாதி வெறியர்களாகவே இருக்கிறார்கள்.
இங்கே மனுஷ்ய புத்திரன் ஜாதி என்று குறிப்பிட்டது பிராமணர், முதலியார் போன்ற ஜாதி அல்ல.  நவீன ஜாதி வெறியர்கள் வேறு விதமான ஜாதிப் பிரிவினையை வைத்திருக்கிறார்கள்.  கமல் மீது எனக்குக் கோபமே இல்லை.  அவருடைய இரண்டு படங்களை நான் கடுமையாக விமர்சித்திருப்பதால் அவர் காயமடைந்திருக்கிறார் என்பதையே அவருடைய செயல் எனக்குச் சுட்டியது.  ஒரே ஒரு வருத்தம் என்னவெனில், நான் பாராடியதையெல்லாம் குப்பையில் போட்டு விட்டு விமர்சித்ததை மட்டும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருக்கிறாரே; இவ்வளவு படித்த ஒருவருக்குத் தன் சொந்த கோப தாபத்தை இப்படி ஒரு பொது வெளியில் எல்லோரும் பார்க்க வெளிப்படுத்தி ஒருவரை அவமானப்படுத்த முடிகிறதே என்பதுதான்.
ஆனால் அந்த முன்னாள் அதிகாரி என்னிடம் நடந்து கொண்டது தண்டனைக்குரிய குற்றம்.  மிகக் கேவலமாக நடந்து கொண்டார் அவர்.  அவரைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூட தப்பிதமாக எழுதியதில்லை.  சொல்லப் போனால் அவருடைய சமூக நீதிக் கட்டுரைகளை நான் விடாமல் படித்தவன்.  அந்தக் கருத்துக்கள்தாம் என்னுடைய கருத்தும் என்று நினைப்பவன்.  இதை அவரிடம் சொல்வதற்காகவே அவருக்குக் கை கொடுத்தேன்.  அதையும் சொன்னேன்.  அந்தக் காலத்தில் ஒரு பிராமணனை ஒரு தலித் தொட்டு விட்டால் அந்த பிராமணன் எப்படி ஒரு எதிர்வினை காட்டுவானோ அதே போன்ற உடல் அசைவுகளைக் காண்பித்து விலகினார்.  எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  என்ன ஆயிற்று இந்த மனிதருக்கு?  நடந்தது நிஜமா, என் பிரமையா?  மீண்டும் அவரிடம் அதே வார்த்தைகளைச் சொல்லி கை கொடுத்தேன்.  உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன் சார்.  எனக்கு ரொம்பப் பிடித்த எழுத்து.  கை கொடுக்கிறேன்.  மீண்டும் தேள் கொட்டி விட்டது போல் கையை உதறி நகர்ந்தார்.  என் நண்பர் பார்த்துக் கொண்டிருக்க நடந்தது இந்தச் சம்பவம்.
என்ன சொல்ல?  அவருக்கு இப்படி நான் ஒரு கடிதம் எழுதவில்லை.  எழுதும் அளவுக்கு அவருக்குத் தகுதி இல்லை என்பதை அந்தச் சம்பவத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.  நீதித் துறையில் சீர்திருத்தம், போலீஸ் துறையில் சீர்திருத்தம், குழாயில் தண்ணீர் வரவில்லை, தொலைக்காட்சிகளில் சீரழிவு என்று ஆயிரம் சமூக நீதிக் கட்டுரைகள் யார் வேண்டுமானாலும் எழுதலாம்.   ஆனால் உள்ளுக்குள் இத்தனை ஜாதி வெறியை வைத்துக் கொண்டு, தீண்டாமையை இந்தக் காலத்திலும் கடைப் பிடித்துக் கொண்டு வாழ்பவரை என்னவென்று சொல்வது?
எனவே, மீண்டும் ஆங்கிலத்துக்குப் போய் விட வேண்டும் என்று கமல் சம்பவத்துக்குப் பிறகு முடிவு செய்தேன்.  சொல்லப் போனால், ராஸ லீலாவின் இரண்டாம் பதிப்புக்குப் பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறேன்.  ராஸ லீலாவைப் படிக்கும் போதெல்லாம், இப்படி ஒரு க்ளாசிக்கை எழுதி விட்டு மொழிபெயர்ப்பாளரைத் தேடி நக்கிக் கொண்டிருக்கிறோமே என்பதுதான் என் மன உளைச்சலுக்குக் காரணம்.   ராஸ லீலாவின் பெருமை பற்றிய எண்ணம் உயர உயர மன உளைச்சலின் கடுமை தீவிரமாகிறது.  இதில் பல்வேறு உள்பிரச்சினகளும் உள்ளன.  குறைந்த பட்சம் பத்தாயிரம் பிரதிகளாவது விற்றிருக்க வேண்டிய இந்த நாவல் வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆகியும் மறுபதிப்பு காணாமல், யாருக்கும் கிடைக்காமல்…  ம்…  எதைச் சொல்ல? காரணம், இந்த நாவலின் அருமை பெருமை எனக்கும் என்னைச் சார்ந்த ஒரு பத்து இருபது பேருக்கும் தான் தெரிந்திருக்கிறது.
ராஸ லீலா ஆங்கிலத்தில் வந்தால் நிச்சயம் ஒரு சர்வதேசப் பரிசு உண்டு.  அது ஒரு தங்கச் சுரங்கம்.  உலகின் ஐம்பது முக்கியமான நாவல்களில் இதை ஒன்றாக வைப்பேன்.  ஆனால் இதுவரை இந்த எட்டு ஆண்டுகளில் ராஸ லீலா பற்றி ஒரே ஒரு மதிப்புரை தான் வந்துள்ளது.  அதிலும் இது ஒரு சாதாரண நாவல் என்பதாக.  ஆனால் அந்த விமர்சனத்தை நான் மதிக்கிறேன்.  மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டு எழுதியிருந்தார் கட்டுரையாளர்.  Erudite ஆக இருந்தது.  அதனால் அதை நான் மதிக்கிறேன்.  மற்றபடி ராஸ லீலாவுக்கு எதிர்மறையாகவோ ஆதரித்தோ ஒரு வார்த்தை வந்ததில்லை.  எஸ். ராமகிருஷ்ணன் எப்போதுமே என் எழுத்தின் மீது மரியாதை கொண்டவர்.  அதனால் ராஸ லீலா பற்றியும் என்னுடைய மற்ற நாவல்கள் பற்றியும் அவர் எப்போதும் மேடைகளில் பேசி வந்திருக்கிறார்.  அவரைத் தவிர வேறு எவருமே இந்த நாவல் பற்றி வாய் திறக்கவில்லை.  இன்றைக்கு ஸ்வராஜ்யாவில் என் கட்டுரை intellectual-ஆக இல்லை என்று சொல்லும் புடுங்கி என் நாவல்கள் பற்றி இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை.  ஏன்?  700 பக்கம் படிக்க வேண்டுமே?  கட்டுரை என்றால் ரெண்டு பக்கத்தைப் படித்து விட்டுக் கல்லால் அடிக்கலாமே என்ற லும்பன் மனோபாவம்தான் காரணம்.  இவர்களெல்லாம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் வேறு.  கொடுமை.
ஸீரோ டிகிரியைப் பற்றி தருண் தேஜ்பால், “க்யா நாவல் ஹே யார், wonder, wonder” என்று சொன்னார்.  நான் அவரிடம், “ராஸ லீலா என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்.  அது வந்ததும் பார்” என்றேன்.  அதை மொழிபெயர்க்கத்தான் ஒரு ஆள் கிடைக்கவில்லை.  ஒருவரை அணுகினேன்.  அவரும் சம்மதித்தார்.  அடுத்த வாரமே வேலை கிடைத்து வெளியூர் போய் விட்டார்.  இப்போது ஆள் ரொம்ப பிஸி.  இன்னொருவரை அணுகினேன்.  அவருக்கு பாரிஸில் வேலை கிடைத்து ஓடி விட்டார்.   இன்னொருவர் மிகக் கடுமையான மேல்படிப்பு ஒன்றில் சேர்ந்து விட்டார்.  ஒரு மாதமாகத் தொடர்பே இல்லை.  ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் நடந்து வருகிறது.  ஒரு பெண் நல்ல முறையில் ராஸ லீலாவை மொழிபெயர்த்து வந்தார்.  70 பக்கம் ஆயிற்று.  ஒரு ஆங்கில தினசரியில் பெரிய பதவி கிடைத்துப் போய் விட்டார்.  என்னால் அந்த அளவுக்கு சம்பளம் எல்லாம் கொடுக்க முடியுமா?  சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  நானும் வேதாளம் சுமந்த விக்ரமாதியன் போல் இன்னொருவரை அணுகினேன்.  அவருக்கு ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்து இப்போது மாணவிகளுக்கு ஃப்ரெஞ்ச் ஏபீஸீடி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  இலக்கியத்தின் வெறித்தனமான ஆர்வம் கொண்ட ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லை.  இவ்வளவுக்கும் இவர்கள் அனைவரும் என் மீது அளப்பரிய மரியாதை கொண்டவர்கள்.  இன்று காலை ஒருவரை அணுகியிருக்கிறேன்.  ஏற்கனவே வேலையில் இருப்பவர்.  ஆனால் திருமணம் ஆகாதவர்.  பார்க்கலாம்.  அடுத்த மாதமே திருமணம் ஆகி விடும் என்று நினைக்கிறேன்.  அப்படித்தான் இதுவரை நடந்து வந்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் பஸ்ஸில் ஏறினால் ஓட்டுநரிடம்தான் டிக்கட் வாங்க வேண்டும்.  அப்போது அவருக்கு வணக்கம் கூறி முகமன் கூறித்தான் டிக்கட் வாங்குவார்கள்.  குளிர்காலமாக இருந்தால் குளிர் பற்றிக் கூட ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்து கொள்வார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் கை குலுக்கினால் கூட உதறி விட்டுச் செல்கிறார்கள்.
ஒரு காலகட்டத்தில் கருணாநிதியை தினமலர் கடுமையாக விமர்சித்தது.  பின்னர் ஓரிரு ஆண்டுகள் சென்று கருணாநிதி தினமலர் பத்திரிகையின் ஆண்டு விழா ஒன்றுக்கு பிரமத விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.  என் நண்பர் ஒருவர் தினமலரில் பெரிய பொறுப்பில் இருப்பவர்.  சற்றே பதற்றத்தில் இருந்தார்.  ஏதாவது ஏடாகூடமாகப் பேசி விடப் போகிறாரோ என்ற பயம் லேசாக.  ஆனால் கருணாநிதி படு ரகளையாக அந்தப் பதற்றத்தைக் குறைத்தார்.  பேச்சின் ஆரம்பமே, தினமலர் என்னை விமர்சித்து எழுதும் பத்திரிகை என்று ஆரம்பித்தார்.  சிரித்துக் கொண்டே.  எல்லோருக்கும் சிரிப்பு வந்து விட்டது.  அந்த விஷயத்தையே அவர் பகடியாக மாற்றி விட்டார்.  இப்படி ஒரு அரசியல் தலைவருக்கு இருக்கும் பண்பு கூடவா படித்த ஆசாமிகளுக்கு இங்கே இல்லை என்பதுதான் என் ஆச்சரியத்துக்குக் காரணம்.
அன்புடன்,
சாரு

Comments are closed.