ஒரு உதவி

எனக்குப் பிச்சை எடுப்பதில் எந்த வெட்கமும் அவமானமும் தெரியவில்லை.  எனக்குத் தொழில் எழுத்து.  எழுத்து இங்கே விற்பனை ஆகாததால் பிச்சை எடுக்கிறேன்.  அவ்வளவுதான்.  முரகாமியின் புத்தகம் ஒரு மில்லியன் பிரதி விற்கிறது.  வெளியான இரண்டே வாரங்களில்.  எவ்வளவு ராயல்டி கிடைக்கும் என்று கணக்கிட்டுப் பார்த்தேன்.  குறைந்த பட்சம் ஐந்து கோடி ரூபாய்.  இரண்டே வாரங்களில் ஐந்து கோடி சம்பாதிக்கிறார்.  இவ்வளவுக்கும் நான் ஒரு outcast  என்று வேறு சொல்கிறார்.  எனக்கு வரும் ராயல்டி சோப்பு வாங்கக் கூட போதாது.  ரெண்டாயிரம் பிரதி.  அவ்வளவுதான்.  பல நூற்றாண்டுகளாக இதே நிலைமைதான் என்று தெரிகிறது.  அவ்வை ஒரு அரசனிடம் யாசகம் கேட்கப் போகிறாள்.  அவனோ ஒரு கஞ்சப் பிசுநாறி.  விரட்டி விட்டான்.  அவள் வெளியே வந்து வாயில் காப்போனிடம் அரசனைக் கன்னபின்னாவென்று திட்டி விட்டுப் போகிறாள்.  அந்த அரசன் யார் தெரியுமா?  பாரி வள்ளலின் தந்தை.  பாரியைப் பார்த்து ஒருமுறை கபிலர் கை கொடுக்கவில்லை.   எல்லோருக்கும் கை கொடுக்கும் நீங்கள் என்னை மட்டும் உதாசீனப்படுத்துவது ஏன் என்று கேட்கிறான் சிறுவன் பாரி.  உன் தந்தை ஒரு உலோபி.  உனக்கெல்லாம் என்னால் கைகொடுக்க முடியாது என்கிறார் கபிலர்.  இப்படி வாங்கிய பிறகுதான் பாரி வள்ளல் ஆகிறான்.

என் வங்கிக் கையிருப்பு 2000 ரூ.  இங்கே எழுதினால் பிச்சைக்காரன் என்று திட்டுகிறான்களே என்று வாசகர் வட்டத்தில் எழுதினேன்.  No response.  எனவே இங்கே எழுத வேண்டியிருக்கிறது.  முடிந்தால் பணம் அனுப்புங்கள்.  இல்லாவிட்டால் பிச்சைக்காரன் என்று திட்டுங்கள்.  ஆனால் ஒன்று.  கண் பார்வையில்லாதவன் தன்னைக் குருடன் என்று சொல்லிக் கொள்ளலாம்.  ஆனால் டேய் குருட்டுப் பயலே என்று நீங்கள் சொன்னால் அது அயோக்கியத்தனம்.  என்னுடைய பப்புவும் ஸோரோவும் நாய்கள்தான்.  ஆனால் நாய் என்றால் கடுப்பாகி விடும்.  பெயரைச் சொன்னால் தான் அன்பாகப் பார்க்கும்.  அப்படித்தான் என்னைப் பிச்சைக்காரன் என்று விளிப்பதும்.  சமரசம் செய்து கொண்டால் சீவி சிங்காரித்துக் கொள்ளலாம்.  ஆனால் நான் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை.    இதற்கெல்லாம் காரணம் என் தாத்தா திருவள்ளுவன் தான்.  அவன் தான் ஒரு குறளில்

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

என்று எழுதித் தொலைத்து வைத்திருக்கிறான்.  நான் கெட்டு சீரழிய வேண்டும் என்று எண்ணினால் நடுவுநிலைமையிலிருந்து தவற வேண்டும்.  இன்னும் விளக்கமாகச் சொன்னால், பாலாவின் பரதேசி ஒரு குப்பை என்று தெரிந்தாலும் அதை க்ளாசிக் என்று பாராட்ட வேண்டும்.  (அதை உண்மையிலேயே நல்ல படம் என்று நம்பும் நல்லவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.)  ஷங்கரின் எந்திரன் வந்ததும் சூப்பர் படம் சார் என்று ஃபோன் போட்டுச் சொல்ல வேண்டும்.  அப்படிச் சொன்னால் அவருக்கு சாரு நிவேதிதா நாம் அணுகக் கூடியவர் என்ற நல்லெண்ணம் பிறக்கும்.  எந்திரன் 2-க்கு வசன வாய்ப்பு கிடைத்து அம்பது லகரம் கைக்கு வரும்.   தொழிலை மாற்ற வேண்டியிருக்கும் சாமி.  அப்படி நான் செய்தால் ஒரு நாள் கூட நிம்மதியாகத் தூங்க முடியாது.  வள்ளுவன் சொன்னபடி கெட்டுச் சீரழிவேன்.  ஆனால் பணம் கிடைக்கும்.  மனம் சீரழிந்து அதன் விளைவாக உடல் சீரழியும்.

கடவுள் எனக்குக் கொடுத்திருக்கும் இரண்டு கொடைகள், ஆரோக்கியமும் ஆயுளும்.  அதை நானே கெடுத்துக் கொள்ளக் கூடாது.  காலந்தோறும் ஞானிகளும் ஞானத்தை எழுத்தில் கொடுத்த எழுத்தாளர்களும் பிச்சை எடுத்துத்தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.  ஆனால் தமிழ்நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் அந்த நிலை மாறி விட்டது.  எழுத்தாளர்களும் கோடீஸ்வரர்களாகி விட்டார்கள்.  குறைந்த பட்சம் என்னைப் போல் சோற்றுக்கு சிங்கியடிக்கவில்லை.

எனவே முடிந்தவர்கள் பணம் அனுப்புங்கள்.  கோடி ரூபாய் பெறும் ராஸ லீலாவை என் கண்ணெதிரே வைத்துக் கொண்டு காசு கேட்டு எழுதுவது எனக்கு அபத்தமாகவே தோன்றுகிறது.  ஆனால் வாசிக்கவே மறுக்கும் சமூகத்தில் நான் வேறு என்னதான் செய்வது?

விகடனில் வெளிவந்த மனம் கொத்திப் பறவை தொடர் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.  3000 பிரதிதான் போனது.  மனுஷ்ய புத்திரன் தான் ஒருமுறை சொன்னார்.  உங்களுக்கென்று 3000 வாசகர்கள் இருக்கிறார்கள்.  எனவே நீங்கள் எந்தப் பதிப்பகத்தில் போட்டாலும் 3000 தான் விற்கும்.  அதற்காக விகடன் மூலம் கூடவா?

என் ஆயுளில் கொஞ்சத்தை என் ஆசான் சாருவுக்குக் கொடு என்று பெருமாளிடம் வேண்டிக் கொண்ட சம்பந்தர் இன்று என் வீட்டுக்கு வந்தார்.  திருப்பதி பிரஸாதம் கொடுத்தார்.  கூடவே ஒரு மூட்டை நிறைய பழங்கள்.  ஒரு வாரம் இரவுச் சாப்பாட்டுக்குக் கவலை இல்லை.  சம்பந்தர் ஒரு வேலையில்லாப் பட்டதாரி.  அவர் எனக்குக் கொடுத்த பரிசைப் போல் உலகில் வேறு யார் தருவார்?  யயாதிக்குத் தன் இளமை கொடுத்த புரு ஞாபகம் வருகிறது.  ஆனால் என் அருமை சம்பந்தர், எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆயுள் எனக்குப் போதும்.  திருஷ்டி, கை ரேகை, ஜாதகம் என்ற மூன்று வகையிலும் பார்த்து மூன்று வெவ்வேறு சோதிடர்களும் ஒரே வயதைச் சொல்லியிருப்பதால் மட்டுமல்ல; என் வாழ்க்கை முறையையும் அவ்வாறே வைத்திருக்கிறேன்.  அதற்குக் காசு தேவையில்லை.  ரொம்ப மெனக்கட வேண்டும்.  அதைச் செய்ய மனசில்லாமல்தான் பலரும் உடம்போடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  போகட்டும்.  சம்பந்தர்… நல்ல வேலைக்குப் போய் சீலே போக ஒரு டிக்கட் எடுத்துக் கொடுங்கள்.  அது போதும்.  என்னுடைய தேவை என்று பார்த்தால் ஒன்றே ஒன்றுதான்.  பணம்.  அதுவும் வீடு கட்டவோ, கார் வாங்கவோ அல்ல.  பயணம் செய்யப் பணம் வேண்டும்.

சமீபத்தில் ஒரு நண்பர் கனடாவுக்கு அழைத்திருந்தார்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு சக்ரவர்த்தி அழைத்திருந்தார்.  நான் தங்குவதற்கு அவர் வீட்டின் மாடியில் ஒரு அறையே கட்டியிருந்தார்.  வீஸா கிடைக்கவில்லை.  என் வங்கிக் கணக்கில் உள்ள பணம் போதுமானது இல்லை என்று மறுத்து விட்டார்கள்.  இப்போது விண்ணப்பித்தாலும் அதே பதில்தான் கிடைக்கும்.  இது ஒன்றுதான் பிரச்சினையாக இருக்கிறது.   ஆனால் இப்போதைய பிரச்சினை, அன்றாட தேவை.  அதற்காக முடிந்தால் பணம் அனுப்புங்கள்.

அதற்கான வங்கிக் கணக்கு விபரம்:

Name: K. ARIVAZHAGAN

AXIS  Branch Radhakrishnan Salai

IFS Code number UTIB0000006

MICR Code 600211002

Account no. 911010057338057

***

இன்னொரு உதவி: சட்டீஸ்கட்டில் உள்ள ஒரு வனப் பகுதியில் ஐந்து நாள் தங்குவதற்கு ஒருவர் ஏற்பாடு செய்திருக்கிறார்.  அதற்காக தில்லி சென்று அங்கிருந்து வனப்பகுதிக்கு ரயிலில் போக வேண்டும்.  சென்னையிலிருந்து தில்லிக்கும், தில்லியிலிருந்து சென்னைக்கும் ஒரு நண்பர் டிக்கட் எடுத்துக் கொடுத்தார்.  இப்போது அடுத்த பிரச்சினை, 3-ஆம் தேதி நவம்பர் அதிகாலையில் ரயில்.  நான் 2-ஆம் தேதி மாலை தில்லி போய்ச் சேருவேன்.  ஆக, அந்த ஒரு இரவு எங்கே தங்குவது?  அதே போல் திரும்பி வரும் போது 7-ஆம் தேதி இரவும் தங்க வேண்டும்.  யாரும் நண்பர்கள் இந்த இரண்டு இரவுகள் (2nd and 7th Nov) என்னை எங்கேனும் (தில்லியில்) தங்க வைக்க முடியுமா?

charu.nivedita.india@gmail.com

 

 

Comments are closed.