அக்டோபர் முதல் தேதி திருவாரூரில்…

நாளை அக்டோபர் முதல் தேதி திருவாரூரில் உள்ள ராபியாம்மாள் அஹ்மது மெய்தீன் கல்லூரியில் காலை பத்து மணி அளவில் இன்றைய வாழ்வில் இலக்கியத்தின் அவசியம் பற்றி உரையாற்ற இருக்கிறேன்.  இன்று இரவு திருவாரூர் கிளம்பிச் சென்று நாளை இரவு அங்கிருந்து சென்னை ரயிலைப் பிடிப்பேன்.  நாளை ஒரு பகல் திருவாரூரில் இருப்பேன்.  திருவாரூர் நண்பர்கள் சந்திக்கலாம்.  ஒரு வாரத்திற்கு முன்பே இந்தக் கூட்டம் திட்டமிடப்பட்டாலும் சாருஆன்லைனில் தெரிவிக்க நேரம் இல்லை.  லத்தீன் அமெரிக்க சினிமா தொடர் நான் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு அத்தியாயம் எழுத ஐந்து முழு நாட்களை எடுத்துக் கொள்கிறது.  ஏகப்பட்ட படங்களைப் பார்த்தும், புத்தகங்களைப் படித்தும் எழுத வேண்டியிருக்கிறது.  ஆனால் யாரும் படிக்கிறார்களா, அதில் நான் குறிப்பிடும் படங்களைப் பார்க்கிறார்களா என்பது பற்றி எனக்கு ஒரு தகவலும் இல்லை.  நேரில் அகப்படும் மனிதர்களிடம் என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா தொடரைப் படிக்கிறீர்களா என்று கேட்டால் ஏதோ பேயறைந்தாற் போல் திருதிருவென்று முழிக்கிறார்கள்.  மனுஷ்ய புத்திரன் தான் ரொம்ப நாட்களுக்கு முன்பு சொன்னார், நீங்கள் ராமாயணம் தொடர் ஆரம்பிக்கலாமே என்று.  (என் மீது எவ்வளவு கொலைவெறி இருந்திருக்க வேண்டும் மனிதருக்கு?) எழுதியிருந்தால் ஒரே பரபரப்பாக இருந்திருக்கும்.  லத்தீன் அமெரிக்க சினிமாவா?  போய்யா பொழப்பத்தவனே என்கிறார்கள்.  பரவாயில்லை.  வாழ்நாள் பூராவும் பேய்க்கும் பூதத்துக்கும் காற்றுக்கும் ஆகாயத்துக்குமாக எழுதிப் பழகி விட்டது.  எனவே ஏமாற்றம் ஏதுமில்லை.

 

Comments are closed.