ட்சைக்காவ்ஸ்கி

லத்தீன் அமெரிக்க சினிமாவின் நான்காம் அத்தியாயத்தை எழுதி முடித்த போது தலை பூராவும் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.  ஒயின் அருந்தலாமா என்று யோசித்தேன்.  இரவு பயணம் செய்ய வேண்டும் என்பதால் அதை விட்டு விட்டு கரப்பான் பூச்சிகளை விரட்ட என்ன வழி என்று பார்த்தேன்.  கிடைத்தார் ட்சைக்காவ்ஸ்கி.  மனம் பின்னோக்கிச் சென்றது.  ஊட்டியில் (குன்னூர்) ஒரு மலை முகட்டில் கட்டப்பட்ட மர வீட்டில் பிரம்மராஜனோடு விஸ்கி அருந்திய படி நடுநடுங்கும் ஜனவரி மாதக் குளிரில்  இரவு பூராவும் ட்சைக்காவ்ஸ்கி கேட்டுக் கொண்டிருந்த காலம் ஞாபகம் வந்தது.  பிரம்மராஜனின் மனைவி மீனா ஒரு பிராமணப் பெண்ணாக இருந்தும் எங்களுக்காக சுடச் சுட கோழிக் கறியும் இட்லியும் செய்து கொடுப்பார்.  அப்போது அவர்களிடம் மண்ணெண்ணெய் ஸ்டவ் தான் இருந்தது.  மீட்சி வந்து கொண்டிருந்த சமயம்.  பொற்காலம்.

இப்போது சமூக வாழ்வில் அறமும் மதிப்பீடுகளும் எப்படி வீழ்ச்சி அடைந்து விட்டனவோ அதேபோல் ரசனையும் வீழ்ந்து விட்டது.   எல்லாவற்றையும் காலி பண்ணியது தமிழ் சினிமாவும் தொலைக்காட்சியும் தான்.  எழுத்தாளர்களும் தப்பவில்லை.  திட்டிக் கொண்டே பார்க்கிறார்கள்.  நான் இந்த விஷயத்தில் இன்னும் பழைய மனிதனாகவே இருக்கிறேன்.  தமிழ் சினிமாவும், முக்கியமாக தொலைக்காட்சியும் என்னை அண்ட விடவில்லை.

முடிந்தால் இந்த இணைப்பில் உள்ள மகா அற்புதமான ட்சைக்காவ்ஸ்கியின் இசைப் படைப்புகளைக் கேட்டுப் பாருங்கள்.  இடையே வரும் ஒன்றிரண்டு விளம்பர அசிங்கங்களைக் கண்டு மிரள வேண்டாம்.  ஸ்கிப் செய்து விட்டுக் கேளுங்கள்.  கடவுள் உங்களிடம் பேசுவார்.

http://www.youtube.com/watch?v=HdMvhevKlKc&hd=1

Comments are closed.