ஒரு காதல் கடிதம்…

புலி வேஷம் போட்டுக் கொண்டிருப்பவரைக் கண்டு புலி என நம்பி ஆஹா புலி ஆஹா புலி என்று கத்திக் கொண்டிருப்பேன்.  நான் பார்த்த புலியின் மகிமை பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுவேன்.  நண்பர்களிடம் பரவசமாகச் சொல்லுவேன்.  பிறகு கொஞ்சம் நேரம் கழித்துப் பார்த்தால் புலி தன் மேக்கப்பைக் கலைத்து விட்டு ஓல்ட் மாங்க்கைக் குடித்து விட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும்.  எப்படி இருக்கும் எனக்கு?  பேசாமல் பதுங்கியபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்.

இப்படிப்பட்ட சறுக்கல்களுக்காக தேடலை நிறுத்தி விட முடியுமா?  பல சமயங்களில் புலியைப் பார்த்திருக்கிறேன்.  அதனால்தான் சோர்வதில்லை.  புலி பார்த்த கதையைச் சொல்லவும் தயங்குவதில்லை.

சமீபத்தில் அப்படிப் பார்த்த புலி கணேச குமாரன்.  Subway-வுக்கு அழைத்துப் போனேன்.  ”சாருவை சந்தித்தால் வித்தியாசமாக இருக்கும் என்று முன்பே நினைத்தேன்.  ஆனால் இந்த அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்றார்.  மற்ற விபரங்களை அவரிடமே கேட்டுக் கொள்ளவும்.  கணேச குமாரனின் கதைகள் பற்றிப் பிறகு விரிவாக எழுதுகிறேன்.

அதற்கு அடுத்து பார்த்த புலி சுந்தர் ஸ்ரீனிவாஸ்.  காதலிக்காத மனிதன் எவன் இருக்கிறான்?  சுந்தரும் காதலிக்கிறார்.  என்ன விசேஷம் என்றால், காதலிக்கு அவர் எழுதிய அந்தரங்கமான கடிதத்தை முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  அந்தக் காதல் கடிதத்தை இங்கே உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.  கடிதத்தில் உள்ள ஒற்றெழுத்துப் பிழைகளைப் பார்க்கும் போது இன்றைய இளைஞர்களின் தலையாய பிரச்சினை ஒற்றெழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது.   இனி வருவது சுந்தர் ஸ்ரீனிவாஸ்.

யாதுமான என் கோதே,

என் கண்கள் இப்போதுக் குளமாக இருக்கின்றன. செத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இந்த சந்தோஷத்தை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை கோதே. இந்த நாள் இத்தனை அழகாய் இருந்திருக்க வேண்டாம். நமது எல்லா நாட்களும் அநேகமாக இப்படியே இருக்கின்றன. இந்த சந்தோஷம் என்னைத் திணறடிக்கிறது. நான் கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பரவசத்தை எப்படி எழுதுவேன்? சந்தோஷம் என்ற வார்த்தையின் அர்த்தம் இப்போது தான் புரிகிறது. எது சந்தோஷம்? நம்மை நான்குப் பேர் காதலிக்கிறார்கள் என்பதா சந்தோஷம்? இல்லை. நம்மால் ஒருத்தர் மீதுப் பைத்தியமாய் இருக்க முடிகிறது என்பது தானே சந்தோஷம்? என்னால் உன் மீதுப் பைத்தியமாய் இருக்க முடிகிறது. உன் உடம்பின் மீது என்னால் காமமில்லாமல் பைத்தியமாய் இருக்க முடிகிறது. உன் விரல்கள், அதன் நுனிகள், உன் மணிக்கட்டு, அந்த மருதாணி, அதன் வாசம் என உன் அனைத்தின் மீதும் என்னால் பைத்தியாமாக இருக்க முடிகிறது கோதே.

உலகத்திலேயே அதி அற்புதமான விஷயம் என்ன தெரியுமா? madnessஉடன் இருக்க முடிவதும், அந்த madnessஐ எப்போதுமே தொலைக்காமல் வைத்துக் கொள்வதும் தான். அதே மாதிரி இன்னொரு அற்புதமான விஷயம் ‘பிரஞ்சை’யோடு இருத்தல். இது இரண்டும் ஒரே சமயத்தில் நிகழும் மஹோன்னத அற்புதத்துக்குப் பேர் தான் காதல். காதலின் இந்த conscious madnessஐ உன்னிடம் தான் உணர்கிறேன் கோதே, இப்போது.

ஒரு இசையைப் போல, ஒருப் புகழைப் போல, ஒரு நல்ல wineஐப் போல உன்னை நினைப்பது என்பது போதையாய் இருக்கிறது. சமயங்களில் உன்னுடன் இருத்தலை விட உன்னை நினைத்துக் கொண்டிருப்பதே இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. இதைப் படிக்கும் போது நீ சிரிக்கிறாயா, இல்லை முறைக்கிறாயா?

உன்னைப் பார்க்கக் கிளம்புதல் என்பது இருக்கிறதே, அது விளக்க முடியாத ஒரு ecstasy. உன்னைப் பார்த்தல், உன்னுடன் இருத்தல் என்பது ஒரு மஹாஅற்புதம். பிறகு உன்னை நினைத்துக் கொண்டே வீடு அடைதல் என்பது கொண்டாட்டமான ஒருப் பேரவஸ்தை. அவஸ்தை எப்படிக் கொண்டாட்டமாக இருக்கும்? Maybe, அடுத்த ஜென்மத்தில் நீ ஒருப் பையனாகப் பிறந்து, உன்னைப் போன்ற ஒரு காதலியைச் சந்தித்துவிட்டு வீடுத் திரும்பினால் உனக்குப் புரியக் கூடும். அந்தக் கொண்டாட்டமான அவஸ்தையை எப்படியாவது எழுதிவிடத் துடிப்பது இருக்கிறதே, அது ஒரு exuberance. அந்த exuberanceஓடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் இல்லையா, இப்போது நான் உணர்வதற்கு என்ன பேர் என்றுத் தெரியவில்லை.

சொல்ல முடியாத சந்தோஷத்துக்கும், அதை சொல்லத் துடிக்கும் சிருஷ்டிகரமான மனநிலைக்கும், அதைச் சொல்ல்லித் தீர்க்க முடியாத மொழிப்போதாமைக்கும் நடுவில் சிக்கிச் சாகும் இந்த நிமிஷ என் உணர்வுக்கு என்ன பேர் என்றுத் தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் உன்னால் தான் கோதே! உன் காதல் உந்துகிற சிருஷ்டியால் தான் இப்படி பைத்தியாமாக இருக்கிறேன். இப்படிப் பைத்தியமாய் இருப்பதால் தான் உன்னைக் காதலித்துக் கொண்டே இருக்கிறேன். இந்த உலகத்தின் மிக ஆசிர்வதிக்கப் பட்ட ஆண்மகன் நான்தான் கோதே.

ஆனால், ”உன் மீது நான் என்ன மாதிரிப் பைத்தியமாய் இருக்கிறேன், இது எனக்கு எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது” உள்ளிட்ட நுண்ணிய விவரணைகளை என்னால் பதிவு செய்யவே முடியவில்லை. ஆனால் அதே சமயம், உன்னையும், ‘இந்தக்’ காதலையும், ‘இந்த’ சந்தோஷத்தையும் ‘மொழிக் கொண்டு எல்லாம் எழுதிட’ முடியும் என்றும் எனக்குத் தோன்றவில்லை.

ஆனால் இப்போது சில விஷயங்கள் புரிந்துக் கொள்ள முடிகிறது. ‘பூ இடைபடினும் யாண்டுக் கழிந்தது அன்ன நீருறை மகன்றில் புணர்ச்சி’ என்றத் தமிழை இப்போதுப் புரிந்துக் கொள்ள முடிகிறது. ‘ஜோடியாக நீந்திக் கொண்டிருக்கும் மகன்றில் பறவைகளின் பாதையில் ஒருப் பூ இடைப் பட்டதால், அவைப் சில நொடிகள் பிரிய நேர்கிறது. அப்படிப் பிரியும் போது அந்தப் பறவைகளுக்கு எப்படி இருந்திருக்கும்’ என இப்போதுப் புரிகிறது கோதே. அந்த சில நொடிகள் எப்படி ஒரு வருஷம் போல் அவற்றுக்குத் தோன்றின? என்பதும், அந்தப் பறவைகளைப் போலத் தானும் தலைவனைப் பிரிந்து வாடி இருப்பதாக சொல்லும் தலைவி எப்படி உணர்ந்திருப்பாள் என்பதும் புறிகிறது. தலைவனைக் காணுற்றால் அவள் அவனை எப்படி அணைத்துக் கொள்வாள் என்பதையும், இந்தச் செய்யுளினை யாத்தபோது சிறைக்குடி ஆந்தையாரின் மனநிலையையும் என்னால் உணர்ந்தறிய முடிகிறது. அப்புறம் நான் வேறு எதற்கு எதைத் தனியாக எழுத வேண்டும்?

உன்னை எவ்வளவு எழுதினாலும் தீரவில்லை என்பதுபோல, உன்னை எவ்வளவுச் சுகித்தாலும் போதுவதில்லை, கோதே. உன் ஒவ்வொரு விரலையும் முத்தமிட நான் முறையே பத்துப் பிறவிகள் எடுக்க வேண்டும். அதாவது, ஒருப் பிறவி முழுக்க வேறு எதுமே செய்யாமல், literally உன் ஒரு விரலை மட்டுமே முத்தமிட்டுச் செத்துவிடவேண்டும். இப்படி பத்துப் பிறவிகள். அப்புறம் உன் கண்கள். அதை நீத் திணறத் திணறப் பார்த்துத் தீர்க்கவேண்டும் நான். என்னை பொருத்தமட்டில், இந்தப் பிறவி என்பது எனக்கு உன்னைக் கூடிக் கிடக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பு. உண்ணுதல், உறங்கல் மற்றும் பொருளீட்டல் முதலியன எல்லாம் உன்னுடனான ஒரு முத்தத்துக்கும் இன்னொரு முத்தத்துக்குமான இடைவெளியில் செய்துக் கொள்பவை. இந்த வாழ்க்கை முழுவதுமே உன்னைக் கட்டிக்கொண்டு நிற்கவேண்டும் கோதே.அப்படியே நின்றுக் கொண்டிருக்க வேண்டும். நின்றுக் கொண்டே இருக்க வேண்டும்.. மாதங்களாய், வருஷங்களாய், யுகங்களாய் நிற்க வேண்டும்.

ஏனென்றால், இவ்வளவுக் காதலை வைத்துக் கொண்டு என்னதான் செய்ய முடியும்? காமம் தான் கொள்ள முடியும். உன் மீதான என் சாகரக் காதலை எழுத வழியில்லாமல் இதோ திணறிக் கொண்டிருக்கிறேனே, இந்த மொழிப் போல அல்லாமல், எப்போதும் எனக்கு கைகொடுக்கும் மொழியாக இருப்பதுக் காமம் தான். நான் ஒரு மோசமான gynotikolobomassophile என்பதை உன்னைத் தீண்டும் முன்னர் நான் அறிந்திலன்.”காதல் என்று தனியாக ஒன்றே இல்லை; காதலும் காமமும் ஒன்று” என்கிறது விஞ்ஞானம். சத்தியமான உண்மை. ஆனால் அந்தக் காமத்தைப் புரிய ஒரு பெரிய சவுகரியம் தேவைப் படுகிறது. அந்த சவுகரியத்துக்குப் பேர் தான் காதல். இதற்கு மேல் இதை ஆய்ந்தால், காதலில் இருத்தலின் பரவசத்தை அனுபவிக்க முடியாது. காதல் என்பது காமத்தின் corollary என்று வேண்டுமானால் வைத்துக் கொள்வோம். எனக்கு மட்டும் நல்ல எழுத்துப் பயிற்சி இருந்தால், சிவன் பார்வதியைப் புணர்ந்தக் கதையைக் கேட்டு நந்தி எழுதிய காமசூத்திரத்தைப் போல, நமது ஒவ்வொரு காதற் சமைத்த கணத்தையும் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் எழுதி வைப்பேன். ஆனால் அந்தக் கொடுப்பினை எனக்கும் இல்லை உனக்கும் இல்லை. பொன்னையும் பூவையும் போல, முறையே novel வைக்கிற இடத்தில் இந்த facebook postஐ வைக்கிறேன்.

இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் கோதே. இப்போதைக்கு இந்த சந்தோஷமான நாளுக்கு நன்றி. இந்த சந்தோஷமான வாழ்க்கைக்கு நன்றி. இவ்வளவுக் காதலைப் புரிகிற முனையில் நான் இருப்பதுப் பெரிதன்று, அதை வாங்கிக் கொள்ள முடிகிற இடத்தில் நீ இருப்பதற்கு நன்றி. ஏனென்றால், உலகத்திலேயேக் costlyயான விஷயம் என்னுடையக் காதல் தான். ஆனால் அதை afford பண்ணுகிற luxury உன்னிடம் மட்டுமே இருக்கிறது கோதே. நாம் அழகாக இருப்பதில் ஆச்சரியமே இல்லை. இன்னொருத்தரால் அங்கீகரிக்கப்படும் போது தான், நமது அழகு acknowledge ஆகிறது. எனது அழகையும், காதலையும், romanceஐயும் acknowledge பண்ணிக்கொண்டு இருப்பதற்கு நன்றி. என்னைத் தொடர்ந்து உன் மேல் பைத்தியமாய் இருக்க உந்திக் கொண்டிருப்பதற்கு நன்றி.

இந்த நாளின் ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் ஒரு ஆயிரம் முறையாவது மறுபடியும் என் மனசுக்குள் வாழ்ந்து பார்த்துக் கொள்வேன். எப்போதும் போலவே.

இதை எழுதிக் கொண்டிருக்கும்போது எனக்கும், வாசித்துக் கொண்டிருக்கும் போது உனக்கும் இருக்கிற சந்தோஷமும், அன்பும், காதலும், நீயும் நானும் வாழ்ந்துக் கொண்டிருக்கிற அதே பூமியில் வாழ ஆசீர்வதிக்கப் பட்டிருக்கும் எல்லா உயிருக்கும் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்வோம், கோதே.

இப்போது எனக்கு இருப்பதெல்லாம், ஒரே ஒருக் கவலை தான். இப்படி ஒருக் காதலை வாழ்ந்துக் கொண்டிருக்கும் நீயும் நானும் கூட கடைசியில் எல்லா Tom Dick Harryக்களைப் போல ஒரு நாள் செத்துத் தான் போக வேண்டும் இல்லையா?

ஆனால் சாவதற்கள்-

என் வாழ்க்கையை நானே ஒரு ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்து எழுதியது போல ஒரு novel எழுதி உனக்குப் பரிசளிக்க வேண்டும். வலது பக்கம் ஒருக்கலித்து, கால்கள் நீட்டி, வலது கையைத் தலைக்குக் கொடுத்து, இமைகள் பாதி மூடி, விழிகள் மேலே சொருகி, பாம்புக் குடை விரிக்க, அனந்த சயனத்தில் நீ ஆழ்ந்திருக்க, உன் பாதங்களை நான் பற்றிக் கொண்டிருப்பதை, அந்த ஜன்னலில் இருந்து நான் பார்த்து அதை எழுத வேண்டும்.

இந்த ஒரு யுகத்த்திலாவது நான் உன் கால்களைப் பற்றிக் கொள்கிறேனே, கோதே.

கிச்சா.

 

Comments are closed.