அடியேனின் கட்டுரைகள்

அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகள் வேறு பத்திரிகைகளில் வெளிவரும் போது அதற்கு சாரு ஆன்லைனில் இணைப்பு தருகிறேன் அல்லவா? அப்போது அந்தக் கட்டுரைகள் பற்றி ஒன்றிரண்டு வரிகள் எழுதினால் 2000 பேர் அந்த லிங்கில் போய்த் தேடிப் படிக்கிறார்கள்.  ஆனால் நான் அந்தக் கட்டுரை பற்றி எதுவுமே எழுதாமல் வெறுமனே லிங்கை மட்டும் கொடுத்தால் 200 பேர் தான் படிக்கிறார்கள்.  என்ன கொடுமை இது!  இதுவரை நான் விகடனில் எழுதிய மனம் கொத்திப் பறவை தொடருக்குத்தான் மிக அதிக உழைப்பைக் கொடுத்திருக்கிறேன்.  பலதரப்பட்ட மனிதர்கள் பல லட்சம் பேர் படிக்கும் பத்திரிகை என்பதால்.  அதற்கு அடுத்தபடியாக அதை விட அதிக உழைப்பை எடுத்துக் கொள்ளும் கட்டுரைத் தொடர் லத்தீன் அமெரிக்க சினிமா.  எனவே எந்த முன்னுரையும் இல்லாமல் லிங்க் கொடுத்தாலும் தயவுசெய்து படியுங்கள்.  என் எழுத்தின் மீது ஆர்வம் இருந்தால்.  கீழே வருவது அருணின் குறிப்பு:

இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_24.html
நண்பர்களே மாற்று சினிமா முயற்சிகளை முன்னெடுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 24வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், பல முக்கியமான கட்டுரைகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, டொராண்ட்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கும் காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டனின் நேர்காணல் வெளியாகியுள்ளது. தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி இயக்கமான “படிமை” யின் 3வது அணியை சேர்ந்த மாணவரின் முதல் கட்டுரை இது. இது தவிர, லத்தீன் அமெரிக்க சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமான கறுப்பு ஓர்ஃபியூ திரைப்படம் பற்றிய சாரு நிவேதிதாவின் கட்டுரையும், பெர்லின் சுவர் தகர்ப்பு பின்னணியில் வெளியாகியிருக்கும் நோ பிளேஸ் டு கோ படம் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும், தவறாமல் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.
நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பிலிம் நியூஸ் ஆனந்தன் சில முக்கியமான சம்பவங்களை நினைவு கூர்கிறார். நண்பர்கள் தவறவே விடக் கூடாத கட்டுரை. கட்டுரையில் இருக்கும் சில முக்கியமான விடயங்களை இங்கே தவிர்த்திருக்கிறேன். கட்டுரையைப் படித்துப் பாருங்கள். சிவாஜியை அறிந்து கொள்ள உதவும்.
மொழியாக்க முயற்சிகளான, யுகேந்திரனின் காணும் முறைகள், ராஜேஷின் ஷாட் பை ஷாட் கட்டுரைகளும் இந்த இதழுக்கு சிறப்பு சேர்ப்பவை. இவைகள் தவிர, இலங்கை தமிழ் சினிமாவின் கதை, சத்யஜித் ராய் பற்றிய அறந்தை மணியன் தொடர், வருணனின் சொர்க்கத்தின் நாட்கள், பி.கே. நாயரின் தொடர் ஆகிய கட்டுரைகளும் இந்த இதழில் வெளியாகியிருக்கின்றன. நண்பர்கள் எல்லாக் கட்டுரைகளையும் அவசியம் வாசித்துவிட்டு, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ”
லத்தீன் அமெரிக்க சினிமா தொடர் மட்டும் படிப்பேன்; மற்றதைப் படிப்பதெல்லாம் பாவம் என்று கருதுபவர்களுக்கு பின்வரும் லிங்க்:

http://pesaamoli.com/Mag_24_LAC_Charu_5.php

 

Comments are closed.