தீபாவளி

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் எந்தப் பண்டிகையும் கொண்டாடுவதில்லை.  ஏனோ சிறு வயதிலிருந்தே அதில் நாட்டமில்லை.  ஆனால் பட்சணங்கள் தின்னாமல் இருக்க முடியுமா?  இந்தத் தீபாவளிக்கு சுஸ்வாத் என்ற கடையில் பட்சணங்கள் வாங்கினேன்.   கடையை அறிமுகப்படுத்திய ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனுக்கு நன்றி.  சமையல் கலை வல்லுனர் பட்டப்பா பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அக்கார அடிசில் அற்புதமாகச் செய்வார்.  லாயிட்ஸ் சாலையில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் அவர் தீபாவளி பட்சணங்கள் செய்து விற்கிறார் என்று கேள்விப்பட்டேன்.  நம்பி வாங்கலாம்.

வாசந்தி இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த போது அதில் கலை இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.  பல இலக்கிய மலர்களைக் கொண்டு வந்தார்.  வாராவாரம் பல நல்ல படைப்பாளிகளின் சிறுகதைகள் வந்து கொண்டிருந்தன.  தமிழ்நாட்டில் ஒரு பிரபல பத்திரிகையில் இப்படிப்பட்ட காரியங்கள் நடந்ததற்கு அதற்கு முன்னால் முன்னுதாரணங்கள் இல்லை.  அதுதான் முதல்.  அதுதான் கடைசி.  வாசந்தி செய்த நற்செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கு ஆள் இல்லாமல் இருந்தது.  இப்போது தி இந்து அந்தக் காரியத்தைச் செய்து வருகிறது.  வெகுஜனப் பத்திரிகைகள் செய்யத் தயங்கும் விஷயம் இது.  அதில் வரும் நடுப்பக்கக் கட்டுரைகளை என் மாணவப் பருவத்தில் ஏ.என். சிவராமனின் கட்டுரைகளையும் வெ. சாமிநாத சர்மாவின் கட்டுரைகளையும் மிகவும் சிரத்தையாக நான் படித்ததுண்டு.  அவர்கள் இருவரையும் நான் என் ஆசிரியர்களாகவே வரித்துக் கொண்டதுண்டு.  அதே அளவு சிரத்தையாக இப்போது தி இந்துவைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் பல லட்சம் பேர் படித்தால் தமிழ்நாட்டில் இதன் மூலம் மிகப் பெரிய கலாச்சார மாற்றம் நிகழ வாய்ப்பு உண்டு.  இந்த ஆண்டு தி இந்துவின் தீபாவளி மலரைப் பார்த்தேன்.  அருமையாக இருந்தது.  நண்பர்கள் அனைவரையும் வாங்கிப் படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

Comments are closed.