மை டியர் திருவள்ளுவர்…

மை டியர் திருவள்ளுவர்,

நான் உங்கள் மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.  நீங்கள் உங்களுடைய ஆவி உலகத்தில் ஷேக்ஸ்பியர், இளங்கோ, கம்பர் போன்றவர்களோடு நண்பராகி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறீர்கள் என்றே நம்புகிறேன்.  ஷேக்ஸ்பியர் தான் கொஞ்சம் கெட்டவர்.  அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.  உங்களுக்கே தெரிந்திருக்கும்.  உலகளந்த ஞானி.  என்னைப் போன்ற ஒரு பொடியன் சொல்ல வேண்டியதில்லை.

ஆரம்பத்தில் நான் சின்ன பையனாக இருந்த போது நீங்கள் திமுக கட்சிக்காரர் என்று எண்ணி ரொம்ப வெறுப்புடன் இருந்தேன்.  இருந்தாலும் படிக்காமல் இருக்கவில்லை.  என் தமிழாசிரியர் சீனி சண்முகம் எனக்கு எல்லா குறள்களையும் கற்பித்து விட்டார்.  பிறகு தான் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் என்ற மனிதரோடு பழக ஆரம்பித்த பிறகு நீங்கள் திமுக இல்லை என்ற விஷயம் தெரிந்தது.  ஒருநாள் என் கனவில் கூட நீங்கள் வந்து திமுக தலைவர் கருணாநிதி பற்றி உங்கள் மனவருத்தத்தைத் தெரிவித்தீர்கள்.  ஞாபகம் இருக்கிறதா?  அல்லது, அது என்னுடைய மனப் பிராந்தியின் கனவு வெளிப்பாடா? தெரியவில்லை.  ஆனால் நீங்கள் மிகவும் மனக் கலக்கத்துடன் சொன்னீர்கள்… உங்கள் உருவத்தை ஒரு பரத நாட்டியப் பெண்ணின் உருவத்தைப் போல் செதுக்கி குமரிக் கடலில் வைத்திருப்பதாக.  அதற்காக நீங்கள் வருந்தத் தேவையில்லை வள்ளுவர்.  ஏனென்றால், திமுக தலைவர் உங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.  அதன் பொருட்டு அவருடைய அந்தச் செயலை நீங்கள் மன்னித்துத்தான் ஆக வேண்டும். மன்னிப்பீர்கள்.  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று எழுதியவர் ஆயிற்றே?

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  எனக்கு சென்ற வாரம் கொஞ்சம் உடல்நலம் சரியில்லாமல் ஆகி மருத்துவமனை சென்று இரண்டு தினங்கள் முந்திதான் வீடு வந்து சேர்ந்தேன்.  கொஞ்சம் பிரச்சினையான விஷயம்தன்.  அலோபதி மருந்துகளின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அதை உட்கொள்ள மறுத்ததன் விளைவு.  இப்போது சரண்டராகி விட்டேன்.  வீட்டுக்கு வந்தும் பழைய சுறுசுறுப்பு வர இரண்டொரு நாள் ஆகும் என்பதால் தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருந்தேனா, அப்போதுதான் அந்த அதிர்ச்சி தரும் செய்தியைப் படித்தேன்.  உடனே உங்களைத்தான் நினைத்தேன்.  கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி பற்றியெல்லாம் எவ்வளவு எழுதியிருக்கிறீர்கள்?  ஆனால் இந்தப் பாழாய்ப் போன விஞ்ஞானிகள் இப்போது ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்துத் தொலைத்திருக்கிறார்கள்.  அதாவது, ம்… அதைப் பற்றி என் ஆசானான உங்களிடம் பேசவே நா கூசுகிறது.  இல்லை… பேசித்தான் ஆக வேண்டும்.  அதாவது… அதாவது… பல பேரோடு உடல் உறவு வைத்துக் கொண்டால் புற்றுநோய் வராதாம்.  சே… எழுதவே கை கூசுகிறது வள்ளுவர்.  தமிழ்க் கலாச்சாரத்துக்கும், ஏன், இந்தியக் கலாச்சாரத்துக்குமே எவ்வளவு பெரிய சவால் பாருங்கள்.

சரி, வள்ளுவர், விடை பெறுகிறேன்.  மருந்து சாப்பிட வேண்டும்.  இது பற்றி நீங்களோ நானோ செய்யக் கூடியது எதுவும் இல்லை.  இந்த விஞ்ஞானிகள் தான் இன்று உலகையே ஆள்கிறார்கள்.  ஆதி பகவன் இல்லை, விஞ்ஞானி முதற்றே உலகு.

கலி முற்றி விட்டது வள்ளுவர்.

குட் பை… have an awesome day…

அந்த விஷயம் பற்றிய பத்திரிகை இணைப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.  உங்களுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்று தெரியும்.  ஆங்கிலம் உங்கள் காலத்தில் இருந்ததா, இல்லையா?  ஜெயமோகனைத்தான் கேட்க வேண்டும்.  அவர் தான் இந்த விஷயத்தில் எல்லாம் புலி.  எதற்கும் அந்த ஆள் ஷேக்ஸ்பியரிடம் இதன் அர்த்தத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜாக்கிரதை, அந்த ஆளிடம் ரொம்ப வைத்துக் கொள்ள வேண்டாம்.  ஏனென்றால், ரோமியோ ஜூலியட் நாடகத்தில் ரோமியோ ஜூலியைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு ஒரு பெண்ணைத்தான் காதலித்தான்.  ஆனால் ஜூலியைப் பார்த்ததும் இவள் தான் காதலி என்று ஓடி விட்டான்.  இது நம் தமிழ்க் கற்புக்குத் தகாததுதானே?  மட்டும் இல்லாமல் பெண் குறி பற்றியெல்லாம் ரொம்ப அசிங்கமாக வேறு எழுதியிருக்கிறார் அந்த ஆள்.  அதனால்தான் சொன்னேன்.

அன்புடன்,

சாரு நிவேதிதா

இணைப்பு: http://www.dailymail.co.uk/health/article-2810910/Men-sleep-multiple-women-REDUCE-risk-prostate-cancer.html

பின்குறிப்பு: வள்ளுவர், இன்னொரு விஷயம்.  உங்களை ஆசான், ஐயன் என்றெல்லாம் மரியாதையாக சொல்லாமல் பெயர் சொல்லியே விளித்திருப்பது பற்றித் தவறு நினைக்க வேண்டாம்.  இங்கே தமிழ் இலக்கியத்தில் தற்காலத்தில் மூத்த எழுத்தாளர்களை இளையவர்கள் அனைவரும் டேய், நாயே, பேயே, புறம்போக்கு, உன்னை அடித்துப் பல்லை உடைத்தது சரிதாண்டா என்றே அன்புடன் எழுதிக் கொள்வது வழக்கம்.  மற்றபடி சினிமாக்காரர்களுக்குத்தான் இங்கே மரியாதை எல்லாம்.  நான் தான் அதெல்லாம் சரியில்லை என்று உங்கள் விஷயத்தில் உண்மையான மரியாதையோடு பெயர் சொல்லி அழைத்திருக்கிறேன்.  நன்றி, வணக்கம்.

 

Comments are closed.