Literature Studio : Te Aroha : Writer’s Retreat

Vibha Malhotra என்ற பெண்ணால் நடத்தப்பட்டு வரும் இலக்கிய நிறுவனம் லிட்ரேச்சர் ஸ்டுடியோ.  இவர் ஒரு பிரபல தொழிலதிபரின் மகள். இந்த நிறுவனமும் உத்தர்காண்டில் உள்ள தானா ச்சூலி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள  Te Aroha என்ற மலைவாசஸ்தலத்தின் உரிமையாளரான சுமந்த் பத்ராவும்  இணைந்து இந்தியாவிலும் பிற நாடுகளிலும் இருந்து எழுத்தாளர்களை வரவழைத்து ஐந்து நாட்கள் தங்க வைத்து, பேசி, உண்டு, வைன் அருந்தி, மலையேறி, இலக்கியம் பேசித் திரிவதற்கான  ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.  இந்த ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து அடியேன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன்.  நேற்று காலை ஆறு மணிக்கு தில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திலிருந்து நானும் விபாவும் தானா ச்சூலி புறப்பட்டிருக்க வேண்டும்.  எனக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது.  ஆனாலும் வனங்களுக்கு நடுவே உள்ள தானா ச்சூலிக்குப் போக வேண்டாம் என்று சொன்னார் மருத்துவர்.  தில்லியாக இருந்திருந்தால் கிளம்பியிருப்பேன்.   உடம்புக்கு வந்த பிரச்சினை ஒரே ஒரு வாரம் முன்னாலேயோ பின்னாலேயோ வந்திருந்தால் இந்த Writer’s Retreat-க்குப் போயிருக்கலாம்.  புகைப்படங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.  மொத்தம் 19 பேர்.  பத்து பெண்கள்.  9 ஆண்கள்.  அதில் சிலர் என்னுடைய இரண்டு நூல்களையும் (ஸீரோ டிகிரி, Morgue Keeper) ஆங்கிலத்தில் படித்திருக்கிறார்கள்.   யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நிபுணர்கள் பல மாதங்கள் கலந்து பேசி இந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  முன்பே எழுதினால் என்னைக் கரித்துக் கொட்டுவார்கள் என்பதால்தான் போய் விட்டு வந்து எழுதலாம் என்று இது பற்றி வாய் திறக்காமல் இருந்தேன்.

தமிழ்நாட்டிலும் பல கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.  விபாவும் சுமந்த்தும் செய்யும் காரியங்களை நம்மவர்கள் செய்கிறார்களா என்று யோசியுங்கள்.

மூன்று வெவ்வேறு ஜோதிடர்கள் சொன்னார்கள், கைக்கு வரும், வாய்க்கு வராது என்று.  சரியாகத்தான் இருக்கிறது.  Jan Michalski விருதும் இப்படியே கடைசி நேரத்தில் தட்டிப் போயிற்று.  இப்போது Te Aroha Writer’s Retreat.  கிளம்பும் நேரத்தில் தடை.  பரிகாரம் என்ன என்று கேட்டேன்.  மூன்று பேருமே சொன்னது, அன்ன தானம்.  காகம், நாய், அணில் போன்ற பிராணிகளின் பசியைத்தான் ஏற்கனவே போக்கிக் கொண்டிருக்கிறேனே, இன்னும் என்ன வேண்டும்?  புரியவில்லை.

லிட்ரேச்சர் ஸ்டுடியோவின் பக்கம் இது:

http://literaturestudio.in/somewhere-in-the-yellow-and-green-splendor-the-te-aroha-literature-studio-writers-retreat/

முதல் தினக் கொண்டாட்டம்: https://www.facebook.com/LiteratureStudio

மருத்துவமனையில் என்னை வந்து பார்த்த, உதவி செய்த, இரவு பகலாகக் கூடவே இருந்த, ஃபோனில் விசாரித்த, வீட்டுக்கு நேரில் வந்த எல்லா நண்பர்களுக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி.  இது பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று இருக்கிறேன்.  ராஸ லீலா பிழை திருத்த வேலையை முடித்து விட்டுச் செய்வேன்.

Comments are closed.