ஆதி பகவன்

அமீரின் யோகி பற்றி உயிர்மையில் கட்டுரை எழுதி அமீரின் நட்பை இழந்தேன்.  அதிலிருந்து தமிழ் சினிமா பார்ப்பதில்லை; பார்த்தாலும் எழுதுவதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன்.  இடையில் பார்த்த கும்கியைப் பற்றியும் தமிழ்நாடே புகழ்ந்து கொண்டிருந்த போதும் அந்தப் படத்தைப் பற்றி நான் எதுவும் எழுதவில்லை.  ஹீரோவைக் காப்பாற்ற ஹீரோ வளர்த்த யானை தன் காலில் கட்டப்பட்டிருக்கும் இரும்புச் சங்கிலியைப் பிய்த்துக் கொண்டு கிளம்பும்போது கேமரா அந்த இரும்புச் சங்கிலியை க்ளோஸ்-அப்பில் காட்டும்.  அதைப் பார்த்த பிறகும்  பூமா தேவியைப் போல் நான் பொறுமை காத்தேன்.    இதற்கிடையில் இப்போது சினிமா துறைக்குள் ஒரே ஒரு எட்டு வைத்திருக்கிறேன்.  அந்த ஒரு எட்டிலேயே கருத்துச் சுதந்திரம் போய் விட்டது.  விஸ்வரூபம் பற்றி பத்து பக்கம் எழுதத் தோன்றியது.  ம்ஹும்.  பூமா தேவி.  பூமாதேவி.  அதிலும் என் ‘நீண்ட நாள் நண்பர்’ கமலைப் பகைத்துக் கொள்ள மனம் வரவில்லை.

அது என்ன சினிமாத் துறைக்குள் நுழைந்திருப்பதாகச் சொல்கிறீர்கள்?  என்ன விஷயம்?  உங்கள் ஸீரோ டிகிரியை யாரும் படம் எடுக்கிறார்களா? என்று கேட்டு வாசகர்கள் எழுதியிருக்கிறார்கள்.  அப்படியெல்லாம் ஒன்றும் நடந்து விடவில்லை.  வேறு என்ன என்பதை விரைவில் வெள்ளித் திரையில் காண்க.

இந்த நிலையில்தான் ஆதி பகவனைப் பார்த்து விடலாம்; மற்ற படங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஒரே ஆர்வத்தில் நேற்று சென்றேன்.  அதோடு நிறுத்திக் கொள்கிறேன்.  எழுதினால் அமீருக்குக் கோபம் வரும்.  போதும்; எழுதி, மற்றவர்களைக் கோபப்படுத்தி எதுவுமே ஆகப் போவதில்லை.  தமிழ் சினிமா என் ஒருத்தனின் விமர்சனங்களால் ஒரு இஞ்ச் கூட முன்னே நகரப் போவதில்லை.   அப்புறம் எதற்கு அநாவசியமாக?

இதனால் எழுத்தாளன் என்ற முறையில் என்னுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்டதாக நான் கருதவில்லை.  எழுத ஆரம்பித்ததிலிருந்தே ரொம்ப சுதந்திரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் சொன்னால் அது அப்பட்டமான பொய்.  ஒரு எல்லைக்குள் நின்று கொண்டு தான் எழுதுகிறேன்.  அதை எப்போதும் தாண்டுவதில்லை.  உதாரணமாக, சில சாதிகளைப் பற்றி நான் எழுதுவதில்லை.  கொன்று விடுவார்கள்.  சில மத விஷயங்களைப் பற்றியும் எழுதுவதில்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை.  அரசியல்வாதிகள் மட்டும்தான் ஓரளவு பரவாயில்லை.  (எழுத்தாளர்களை) மிரட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.  செயலில் இறங்குவதில்லை.  சென்ற ஆட்சியில் எனக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்தன.   செத்தாலும் பரவாயில்லை என்றே எழுதினேன்.  ஆனால் ஜாதி, மத விஷயங்களில் அது முடியாது.  அது சயனைடை முழுங்குவதைப் போன்றது.  உடனடி மரணம்.   அதாவது, தற்கொலையைப் போன்றது அது.  எனவே முழுமையான கருத்துச் சுதந்திரத்தோடு எழுதுகிறேன் என்றெல்லாம் சொல்லவே முடியாது.

இந்தப் பின்னணியில்தான் ஆதி பகவனுக்கு விமர்சனம் எழுத முடியவில்லை என்கிறேன்.  மும்பை சினிமா உலகம் இப்படி இல்லை.  அங்கே எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும் அதை யாரும் அங்கே விரோதமாக எடுத்துக் கொள்வதில்லை.  படத்தைத் தாக்கி எழுதிய விமர்சகரை அழைத்து அந்தப் படத்தின் இயக்குனர் விருந்து கொடுக்கிறார்.  ஏனென்றால், எந்த விமர்சகரும் தனிப்பட்ட விரோதத்தால் ஒரு படத்தை விமர்சிப்பதில்லையே?  ஆதி பகவனுக்கு ஏன் நான் போக வேண்டும்?  பருத்தி வீரன் எடுத்த அமீர் ஆயிற்றே என்ற ஒரே காரணத்துக்காகத்தானே போனேன்?  போய் பத்தே நிமிடத்தில் எழுந்து வந்து விடலாம் என்று தோன்றியது.  பார்வையாளர்கள் பலரும் கூட எழுந்து போய்க் கொண்டிருந்தார்கள்.  இருந்தாலும் என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த போது இடைவேளைக்குப் பிறகு ஏதோ ஒரு மாற்றம் கொஞ்சூண்டு நடந்தது.

ஆதி பகவனுக்கு அராத்து எழுதியிருந்த விமர்சனம் எனக்குப் பிடித்திருந்தது.  அதை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  சில காரணங்களால், அந்த விமர்சனத்தில் இருந்த சில வாக்கியங்களை தணிக்கை செய்து விட்டேன். இனி வருவது அராத்து:

”தமிழ் சினிமாவில் , தமிழ் நாட்டில் பொழைக்க முடியவில்லை எனில் , பாம்பே போவது போல காட்டுவார்கள்.இல்லையெனில் அரபு நாடுகள்,சிங்கப்பூர் முதலியவை. இதில் முதன் முறையாக தமிழ் பட தாய் தன் மகன் மற்றும் மகளுடன் பொழைக்க (!) தாய்லாந்து பட்டாயா செல்கின்றனர்.

2) திருநங்கை என்றால் பெண் தன்மை அதிகம் கொண்டவர், அவரால் ஆண் போல புணர்ச்சியில் ஈடுபட முடியாது என்றுதானே இது…வரை தமிழ் சினிமா காட்டி வந்துள்ளது ? அதி பகவனில் இயக்குனர் இதை உடைத்து எறிந்திருக்கிறார் . திருநங்கை போல காட்டபப்டும் பகவன் (ஜெயம் ரவி) பார்க்கும் பெண்கள் மீது எல்லாம் மோகம் கொள்கிறார். மேட்டரும் செய்கிறார்.ஆண்களை ஒன்றும் செய்வதில்லை :-)

3)தன் பிள்ளையிடமே வந்து , என் பிள்ளையை பற்றி பேச உனக்கு உரிமை இல்லை என , தாய் கொடுத்த காசுக்கு மேல் உணர்ச்சி காட்டி நடித்தது இதுவரை தமிழ் சினிமா காணாத செண்டிமெண்ட் காட்சி .

4)தாய்லாந்து நாட்டில் காவல்துறையே இல்லை என முதன் முதலில் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய படம் இதுதான்.

அடுத்து …..

கோவா ,பாங்காக், பட்டாயா டூர் போய்விட்டு வந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் ஹேண்ட் கேமில் எடுத்த விடியோவை போட்டு பாருங்கள். அதையேதான் அமீரும் வாங்கி படத்தில் இணைத்திருக்கிறார்.பட்டாயா காட்ட வேண்டும் என்றால் வாக்கிங்க் ஸ்ட்ரீட்டை கட கட வென பல கட் அடித்து காட்டுகிறார்.

அம்மா ,தங்கை , ஜெயம் ரவி என முதல் பகுதி அமீர் சிறையில் இருந்த போது எடுக்கப்பட்ட பகுதிகள் போல மிகவும் டிரையாக உள்ளன. தியேட்டரில் பலர் எழுந்து வெளியே செல்கின்றனர்.

இடைவேளையின் போது ஒரு டிவிஸ்ட் கொடுக்க வேண்டுமே என கொடுக்கிறார். திருநங்கை பகவன் அறிமுகம். கொஞ்சம் தெம்பாக அனைவரும் பாப்கார்ன் வாங்க செல்கின்றனர்.

இடைவேளைக்கு முன்பு படம் எடுத்துக்கொண்டிருக்கையில் , நீத்து ————————————————————————————— காரணத்தால் படம் நீத்துவை சுற்றி சுழல்கிறது(————————————————————— இடைவேளைக்கு முன்பு மிஸ் ஆகிவிட்ட முக்கியத்துவத்தையும் , திரைக்கதை என்ற போர்வையில் திரும்பவும் நீத்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சில காட்சிகள். பில்லா அஜீத் போல …..இல்லை இல்லை , அவரை விட பெரிய கோட் போட்டுக்கொண்டு நடக்கிறார் , ஓடுகிறார் , சண்டை போடுகிறார். உயிருக்கே ஆபத்தான வேளையில் ஒரு அல்ப சூட்கேஸை மற்ற தானே வருகிறார்.செத்துத்தொலைகிறார்.ஜெயம் ரவியால் கூட நீத்துவை அடித்து ஜெயிக்க முடியவில்லை. கத்தியால் குத்தியே கொல்ல முடிகிறது.அந்த அளவுக்கு ஈக்வல் இம்ப்பார்டன்ஸ் ஃபைட்.

தாய்லாந்து போர்ஷனை ஒரு இயக்குனரும் , பாம்பே போர்ஷனை ஒரு இயக்குனரும் , கோவா போர்ஷனை வேறு இயக்குனரும் இயக்கியது போல உள்ளது. இதில் ஹைதராபாத் போர்ஷனை மட்டும் அமீர் காப்பி அடித்து இயக்கியது போல உள்ளது.

திருமறையின் வசனத்தை ஏனோ படத்தின் துணைக்கு இழுத்துக்கொண்டுள்ளார்.

ஜெயம் ரவியின் முந்தைய படங்களிலேயே அவரின் நடிப்பையும் குரலையும் பல காட்சிகளில் திருநங்கை போலவே பார்த்து விட்டதால் , இந்த படத்தில் அவர் வேஷமிட்டு நடிப்பது எந்த புத்துணர்வையும் தரவில்லை.

கடைசில எல்லாரும் செத்துட்டாங்க . படம் பாத்தவங்களும் குத்துயிரும் கொலையுயிருமா வெளியே போறாங்க .

அமீருக்கு அடுத்து எந்த இயக்குனருப்பா? ஒழுங்கா லைன்ல வரணும் புரியுதா ?

 

 

 

 

 

Comments are closed.