அகம் புறம் (1)

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

 

கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்

நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது

ஆனிலை உலகத் தானும் ஆனாது

உருவும் புகழும் ஆகி விரிசீர்த்

தெரிகோல் ஞமன்ன் போல ஒரு திறம்

பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க

 

செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்த்துக்

கடற்படை குளிப்ப மண்டி அடர்ப்புகர்ச்

சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்

பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து

 

அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்

பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்

பணியியர் அத்தைநின் குடையே முனிவர்

முக்கண் செல்வர் நகர்வலம் செய்ற்கே

இறைஞ்சுக, பெரும, நின் சென்னி சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே…

 

பனி படர்ந்த, நெடிய இமயத்தை வட எல்லையாகவும், குமரிக் கரையைத் தெற்கு எல்லையாகவும், கீழ்க் கடலை கிழக்கு எல்லையாகவும், மேற்குக் கடலை மேற்கு எல்லையாகவும் கொண்ட பெருநாட்டின் பேரரசன் நீ! நிலம் வான் சுவர்க்கமும் என மூன்றும் கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட மூவுலகத்திலும் நிலத்தின் கீழே இருக்கின்ற பாதாளத்திலும் மேலே இருக்கின்ற சொர்க்கலோகத்திலும் பரவிக் கிடக்கும் நின் புகழ் பெரிது!  பொருள்களை ஆராயும் துலாக்கோலைப் போல் சரிசமமாய் விளங்கும் உன் முடிவுகள்! நினது படை குடிகளும் சிறக்குமாக!

எதிர்த்த பகைவரின் வலிமையைத் தொலைத்து நினது கடல் போலும் படை மேல் விழுந்து அவர்தம் அரண்களை அழித்துச் சூறை கொண்டு அவற்றைப் பரிசிலர் மகிழ வழங்கும் அருளாளன் நீ! நினது வெண்கொற்றக் குடை முக்கண்ணன் கோவிலை வலம் வருங்கால் மட்டுமே தாழ்க! நான்கு வேதத்தினை உடைய அந்தணர் நின்னை நீடு வாழ்க என்று வாழ்த்துப் போது மட்டுமே வணங்குக!

புறநானூறு தொகுப்பில் வரும் ஆறாம் பாடல் இது.  எழுதியவர் காரி கிழார். பாடலை கவனமாகப் படித்தீர்களானால் அர்த்தம் புரியும்.  இதை நீங்கள் தற்காலத் தமிழில் மொழிபெயர்த்தால் இன்றைய அரசியல் தலைவரை அவரது கட்சித் தொண்டர் ஒருவர் பாராட்டி எழுதியது போல் தோன்றும்.  தலைவர்களின் பிறந்த நாளின் போது ஒட்டப்படும் சுவரொட்டி, கட் அவுட்டுகளில் தென்படும் வாசகங்களுக்கும் மேற்கண்ட பாடலுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதே என் கருத்து.

பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தான் கவிஞர் காரி கிழாரின் இப்பேர்ப்பட்ட புகழ்மாலைகளுக்கு உரித்தான மன்னன்.  இந்த வகையில் நம் வைரமுத்து ஒன்றும் திடீரென்று முளைத்து விடவில்லை என்றே தோன்றுகிறது.  2000 ஆண்டுகளின் வாரிசு அவர்.

பாடலையும் அதன் பொருளையும் மீண்டும் மீண்டும் வாசியுங்கள்.  எப்பேர்ப்பட்ட எதேச்சதிகாரப் பெருமையின் வெளிப்பாடு! வடக்கே இமயம்… கிழக்கே குமரி… எல்லாவற்றுக்கும் நீயே ராஜா!  நான்கு வேதங்களை ஓதும் அந்தணர்களுக்கு மட்டுமே நீ தலை வணங்க வேண்டும்! மற்றவர் தலையையெல்லாம் கொய்து விட வேண்டும்!  மற்றவர் தேசங்களின் மீது போர் தொடுத்து அழித்து அவர்களின் பொருள்களைச் சூறையாடி உன் ஜால்ராக்களுக்கு எல்லாம் வாரி வழங்கு!

புறநானூற்றின் பெரும்பாலான பாடல்கள் இப்படித்தான் உள்ளன.  இந்தப் பாடல்களையெல்லாம் நான் மிகச் சிறிய வயதிலேயே மனனம் செய்திருக்கிறேன்.  மிகவும் காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றியதால் அந்தப் பருவத்திலேயே இவ்வகைப் பாடல்கள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை.  ஆனால் புறநானூற்றில் இது போன்ற பாடல்கள் மட்டுமே இல்லை.   யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா போன்ற பாடல்களும் இருந்தன என்பதால் நான் இப்பாடல்களை முற்றாக ஒதுக்கி விடாமல் தொடர்ந்து படித்து மனனம் செய்து வைத்துக் கொண்டேன்.  ஏன் மனனம் செய்தேன் என்றெல்லாம் தெரியாது.  எங்கள் தமிழாசிரியர் சீனி. சண்முகம் சொன்னார்; செய்தேன்.  சொன்னதோடு மட்டுமல்லாமல் அவரும் மனப்பாடமாகப் பாடுவார்.  அதுவே எனக்கு அப்போது மிகப் பெரும் ஊக்கமாக இருந்தது.  அதுவும் தவிர, எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுத் திண்ணையில் நூறு வயதுப் பாட்டி ஒருத்தி தினம் தோறும் நாலடியாரையும் இன்னும் பல பாடல்களையும் வாய் விட்டுப் பாடிக் கொண்டிருப்பார்.  அந்தப் பாட்டிக்குக் கண் தெரியாது.

இந்தப் பாடல்களையெல்லாம் பார்க்கும் தமிழர்களிடம் பல நூற்றாண்டுகளாகவே பல பொதுக் குணங்கள் இருந்து வருகின்றன என்று தெரிகிறது.  முக்கியமாக, உலகின் ஆரம்பக் கால imperialists ஆக இருந்திருக்கின்றனர் தமிழர்கள்.  பிரிட்டிஷ்காரர்கள் எல்லாம் ரொம்ப லேட்.  கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் கடல் கடந்து சென்று கபளீகரம் செய்திருக்கிறார்கள்.  இன்னொரு குணாம்சம், அரசனைப் புகழ்வது.  ஆனாலும் இதே புறநானூற்றில்தான் மருதன் இளநாகனார் “வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்” என்று பாடியிருக்கிறார்.  என்னுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் இதுதான்.  பிச்சையாகிலும் எடுப்பேனே தவிர வாழ்வதற்காகப் பொய் கூறித் திரிய மாட்டேன்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தேரே என்ற ஒரு வாசகத்தை நாம் அடிக்கடிக் கேட்டிருக்கிறோம் அல்லவா?  அதுவும் ஒரு புறநானூற்றுப் பாடலில்தான் வருகிறது…

தொடரும்

 

 

 

Comments are closed.