இசை அதிசயம் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா

தற்சமயம் தினமணி இணைய இதழ், புதிய தலைமுறை ஆகிய இரண்டு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இதில் பழுப்பு நிறப் பக்கங்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.  காரணம் எழுதியிருக்கிறேன்.  இணைய இதழ் என்பதால் தினமணி கட்டுரையை எல்லோரும் படித்து விடுகிறார்கள்.  ஆனால் என் நண்பர் குழாமில் யாரைக் கேட்டாலும் புதிய தலைமுறை கட்டுரைகளைப் படிப்பதில்லை என்கிறார்கள்.  ஆனால் ஊர் பேர் தெரியாதவர்களெல்லாம் பார்க்கில் பார்க்கும் போது புதிய தலைமுறை கட்டுரை பற்றிப் பேசுகிறார்கள்.  ஆக, என் நண்பர்கள் மட்டுமே புதிய தலைமுறை கட்டுரைகளைப் படிப்பதில்லை என்று அறிகிறேன்.  காரணம், சோம்பேறித்தனம் மட்டுமே.  கடையில் போய் பத்திரிகையை வாங்க வேண்டும்.  அதற்கு அலுப்பு.  அந்தக் கட்டுரையை நான் சாருஆன்லைனில் வெளியிட்டால் படிப்பார்கள்.  அதை நான் செய்ய மாட்டேன்.  மற்ற பத்திரிகைகளில் நான் எழுதுவதை சாருஆன்லைனில் வெளியிடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறேன்.  அதே கட்டுரையை சாருஆன்லைனில் வெளியிட வேண்டுமானால் அப்புறம் அந்தப் பத்திரிகையில் ஏன் எழுத வேண்டும்?   ஆனால் டெக்கான் க்ரானிகிளில் எழுதும் ஷோபா டே தன் கட்டுரை வந்த மறுநாளே தன்னுடைய ப்ளாகில் அக்கட்டுரையை வெளியிடுவதை கவனித்திருக்கிறேன்.  நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை.  நீங்களே தான் புதிய தலைமுறை பத்திரிகையைக் கடையில் வாங்கிப் படிக்க வேண்டும்.  இணையத்தில் படிக்க வேண்டுமானாலும் அதற்கு ஏதோ ஒரு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள்.

நான் புதிய தலைமுறையில் சில முக்கியமான விஷயங்களைக் குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒருநாள் இரவு பதினோரு மணிக்குக் கட்டுரையை அனுப்பினேன்.  பதினொன்றரைக்கு ஒரு போன்.  இந்த நேரத்தில் யார் அழைப்பது என ஆச்சரியத்துடன் பார்த்தால் புதிய தலைமுறை நண்பர்.  கட்டுரையைப் படித்து விட்டு கண் கலங்கி விட்டது என்றார்.  இப்போதே அழைத்து விட வேண்டும் என்று தோன்றியது என்றார்.  சன்மானப் பணத்தை விட இது போன்ற வார்த்தைகள் தரும் தெம்பு அதிகம்.  இனிமேல் புதிய தலைமுறையில் வெளிவரும் என் கட்டுரைகளைப் படிக்காதவர்களோடு சிநேகம் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.  இது என் உரிமை.  கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் நீங்களா இப்படிச் சொல்வது என்று கேட்காதீர்கள்.  என் எழுத்தை வாசிப்பவர்களோடு மட்டுமே உறவு என்ற முடிவை எடுத்து வெகுகாலம் ஆகிறது.

இருந்தாலும் சில தினங்களுக்கு முன்னால் புதிய தலைமுறையில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா பற்றிய கட்டுரை அது.  இந்தக் குறிப்பிட்ட கட்டுரை புதிய தலைமுறை இதழில் வெளிவந்த பதினெட்டாவது கட்டுரை.  இந்த வாரத்தோடு அந்த இதழில் 20 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

***

ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.  1947-ஆம் ஆண்டு தோர் ஹயர்டால் மோட்டார் எஞ்சின்  போன்ற எந்த நவீன வசதிகளையும் ஏற்றுக் கொள்ளாமல்  வெறும் மரக் கட்டைகளை வைத்துக் கட்டிய மரக்கலத்தில் பாய்மரத்தை விரித்துக் கொண்டு திசைமானியையும் நட்சத்திரங்களையும் மட்டுமே திசைகாட்டிகளாகக் கொண்டு 8000 கிலோமீட்டர் பயணம் செய்து பாலினேஷியன் தீவுகளில் ஒன்றை அடைய நினைத்தார்.  ஏன் இந்த விபரீதப் பயணம்?  1500 ஆண்டுகளுக்கு முன்னால் பெரூ தேசத்து மாலுமிகள் டிக்கி கடவுளின் துணையால் இப்படித்தான் பாலினேஷியன் தீவுகளை மிதவைகளின் மூலம் கடந்தார்கள்.  கடலைக் கண்டு அவர்கள் பயம் கொள்ளவில்லை.  தரைவழியைப் போல் கடல் ஒரு பாதை; கடல் மாதாவையும் சூரிய பகவானையும் வணங்கி வழிபட்டால் அவர்கள் நம்மை நாம் செல்ல வேண்டிய இடத்துக்குக் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்பதே பெரூவிய மாலுமிகளின் நம்பிக்கை.  அந்த நம்பிக்கையில்தான் நானும் போகிறேன் என்று கிளம்பினார் தோர்.  பாய் மரத்தில் டிக்கியின் படம்.  டிக்கி என்றால் இன்கா மொழியில் சூரியக் கடவுள் என்று பொருள்.  பெரூவிய மாலுமிகள் தென்னமெரிக்காவிலிருந்து பாலினேஷியத் தீவுகளுக்குக் கடல் வழியாகச் சென்றது கொலம்பஸின் கடல் பயணத்துக்கு முன்பே நடந்தது.

தோரும் அவரது குழுவினரும்  – மொத்தம் ஆறு பேர் – பெரூவிலிருந்து கிளம்பிய 101-ஆம் நாள் முதல்முதலாகக் கரையைக் கண்டார்கள்.  ஆறு பேருக்கும் கேன்களிலும், மூங்கில்களிலும் 1041 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டார்கள்.  உணவுக்கு 200 தேங்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் சமைக்காமல் தின்னக் கூடிய பருப்பு வகைகள்.  இவை தவிர தினமும் கடலில் கிடைக்கும் மீன்கள்.

தனது கோன் – டிக்கி பயண அனுபவத்தை 1948-இலேயே புத்தகமாக எழுதினார் தோர்.  உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் அது.  தோர் தன்னுடன் ஒரு மூவி கேமராவைக் கொண்டு சென்றிருந்ததால் அதில் தங்கள் பயணத்தை அவர் படம் எடுத்தார்.  அந்த ஆவணப்படம் 1951-இல் கோன் – டிக்கி பயணம் என்ற பெயரில் வெளிவந்து ஆஸ்கர் பரிசும் பெற்றது.  அதன் பின்னர் 2012-ஆம் ஆண்டு முழுநீளப் படமாக வெளிவந்தது.  அதுவும் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் பரிசை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.   தோர் பயணம் செய்த கட்டுமரம் இன்றும் ஆஸ்லோ நகரில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  தோருடன் பயணம் செய்த ஐந்து பேரில் ஒருவன் இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு ஃப்ரிஜ் விற்பனையாளனாக இருந்தவன்.  கடல் பற்றியோ கடல் பயணம் பற்றியோ எதுவும் அறியாதவன்.  கடல் பயணத்துக்கு வேண்டிய உடல் வலுவும் இல்லாமல் தொப்பையும் தொந்தியுமாக இருந்தவன்.  இதனால் அவனை மற்றவர்களுக்கு அதிகம் பிடிக்கவில்லை.  ஆனால் தோர் அது பற்றிக் கவலைப்படவில்லை.  ஏனென்றால், அவருக்கே நீச்சல் தெரியாது.  சிறுவனாக இருந்த போது குளத்தில் விழுந்து சாகத் தெரிந்த தோரை ஒருவர் காப்பாற்றியதால் தான் உயிர் பிழைத்தார்.  அதற்குப் பிறகு தோர் நீச்சலே கற்றுக் கொள்ளவில்லை.  நீச்சலும் தெரியாமல் ஒரு கட்டுமரத்தில் எப்படி பசிஃபிக் பெருங்கடலில் 8000 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கப் போகிறீர்கள் என்று பலரும் கேட்ட போது தோர் சொன்ன ஒரே பதில்:  இன்கா பழங்குடியினரைப் போலவே நானும் டிக்கியை (சூரியக் கடவுள்)  நம்புகிறேன்.

கோன் – டிக்கி பயணத்தில் பல இடங்களில் அவர்கள் மாபெரும் சுறாக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  அப்போது தோர் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டார்.  சுறாக்களை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் அவைகளும் தன் பாட்டுக்குப் போய் விடுகின்றன.  பல சுறாக்கள் அவர்களின் மிதவைக்கு அடியிலேயே நீச்சலடித்துச் சென்று விடுவதைப் பார்த்தார் தோர்.  ஒருநாள் ஒரு சுறா தோர் குழுவினரின் பஞ்சவர்ணக் கிளியைத் தின்று விடுகிறது.  உடனே கேப்டன் தோர் சொல்லியும் கேட்காமல் ஃப்ரிஜ் விற்பனையாளன்  ஒரு அம்பை எடுத்து வீசி விடுகிறான்.  அந்த சுறா காயமடைந்ததும் ஏகப்பட்ட  சுறாக்கள் மிதவையைச் சூழ்ந்து விடுகின்றன.  தோர் தான் அவைகளிடம் மன்னிப்புக் கேட்டு அவைகளை விலகச் செய்கிறார்.  விலங்குகளுக்கு நம்மைப் போல் பேசத் தெரியாது என்றாலும்  நாம் சொல்வதும் செய்வதும் அவைகளுக்குப் புரியும் என்பதற்கு இந்தக் காட்சி ஒரு சான்று.

***

சில தினங்களுக்கு முன்பு காலமான இசை முரசு ஈ.எம். ஹனீஃபா பற்றி எத்தனை பேர் நினைவு கூர்ந்தார்கள் என்று தெரியவில்லை.  பத்திரிகைகளிலும் அவருடைய பெருமைக்கேற்றபடி செய்திகள் வரவில்லை.  எனக்கு இலக்கியத்தை விட அதிக விருப்பமானது இசை.  என் இசை ரசனைக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் நாகூர் ஹனீஃபா.  நினைவு தெரிந்த நாள் முதலாய் ஹனீஃபாவின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் நான்.  ஹனீஃபாவின் குரல் வேறு யாராலும் பின்பற்ற முடியாத தனித்துவம் கொண்டது.  அந்த வகையில் unique-ஆன பாடகர் அவர்.  இந்தி கிஷோர் குமாரின் குரலும் தனித்துவமானதுதான் என்றாலும் அவருடைய பாணியில் அவருக்கு முன்னதாக கே.எல். செய்கல் இருந்திருக்கிறார்.  இதை கிஷோர் குமாரே குறிப்பிட்டும் இருக்கிறார்.  கிஷோரைப் போல் யாரேனும் பாடி விடவும் கூடும்.  ஆனால் ஹனீஃபாவைப் போல் பாட அவரை விட்டால் வேறு யாருமே இல்லை.  உலகிலேயே அவர் மட்டும்தான்.  இது பற்றி ஹனீஃபா, “இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?  கோடிக் கணக்கான மனிதர்கள் பிறந்து கொண்டு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி முகம் இருக்கிறதுதானே?  ஒருவரைப் போல் இன்னொருவர் இல்லையே?” என்கிறார்.  தொடர்ந்து சொல்லும் போது, “என்னைப் போல் என் குரலில் பல இளைஞர்கள் பாடுவதைக் கேட்கிறேன்.  ஆனால் இரண்டு பாட்டுகளுக்கு மேல் அவர்களின் குரல் வேறு மாதிரி ஆகி விடுகிறது” என்கிறார்.  உண்மைதான்.  ஒலிபெருக்கி இல்லாமலேயே பல காத தூரம் கேட்கும் அளவுக்கு கனத்த குரல் ஹனீஃபாவினுடையது.  அதே சமயம் தேனினும் இனிமையானது.  இதையெல்லாம் விடப் பெரிய விஷயம், நான்கு ஐந்து மணி நேரத்துக்கு இடைவிடாமல் மழை போல் பொழியும் இசைக் கலைஞன் ஹனீஃபா.  வேறு யாராலும் இவ்வளவு high pitch குரலில் நான்கு ஐந்து மணி நேரம் பாடுவதை யோசித்தும் பார்க்க முடியாது.  அதிலும் பல பாடல்களில் சுவாசத்தில் இடைவெளியே கொடுக்காமல் பாடிக் கொண்டே போவார்.  உதாரணமாக, ”திக்குத் திகந்தமும் கொண்டாடியே” என்ற பனிரண்டு நிமிடப் பாடலில் முதல் ஆறு நிமிடம் ஹனீஃபாவின் குரல் இசையும் இறைமையும் கலந்து நிற்கும் உன்னத வெளிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.  ஆறு நிமிடம் கழிந்த பிறகே ”உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்ற அற்புதப் பாடல் நிகழும்.  இந்தப் பாடலைக் கேட்டு கண்ணீர் விடாத மனிதரை நான் கண்டதில்லை.   ஹனீஃபாவின் இசைமழையில் நனைந்து வளர்ந்த பயிர் நான்.  கந்தூரியின் போதும் மற்ற விசேஷங்களிலும் ஹனீஃபாவின் கச்சேரி இரவு முழுவதும் நடைபெறும்.  அவரது பாடல்கள் மதம், இனம் போன்ற பாகுபாடுகளைக் கடந்தவை என்றாலும் பல பாடல்கள் இஸ்லாமிய அறக் கோட்பாடுகளையும் வாழ்வியல் நெறிகளையும் விளக்குபவையாக இருக்கும்.  உ-ம்.  ”அதிகாலை நேரம் சுபுஹூக்குப் பின்னே அண்ணல் நபி வரும் போது இன்னல் செய்தாள் ஒரு மாது” என்ற பாடல் நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை விளக்குகிறது.  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளை நினைவூட்டும் சம்பவம் அது.  இது போல் எண்ணற்ற ஹதீஸ்களைப் பாடலாகப் பாடியிருக்கிறார் ஹனீஃபா.  நெஞ்சம் உருகுதம்மா என்ற பாடலில் தீனோர்களின் தியாக வரலாற்றைச் சொல்லுவார்.  ”ஐந்தாயிரம் ஆண்டுகள் முன்பே நடந்தது அரபு நாட்டிலே ஓர் தியாகம்” என்ற ஒரு பாடல்.  இடது காதை இடது கையால் பிடித்தபடி ஹனீஃபாவின் தனி முத்திரையான “ஓ…” என்று இழையும் குரலை இந்தப் பாடலில் கேட்கலாம்.  “கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்; கண்மணியாம் ஃபாத்திமாவின் சரிதம் கேளுங்கள்”, “ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?”, “தீன்குலக் கண்ணு…”  போன்ற பாடல்கள் ஒரு இஸ்லாமியப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்பவை.  அது தவிர இந்தப் பாடல்களின் இனிமை கேட்பவரை இசைப் பேரின்பத்தில் ஆழ்த்துபவை.  ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபாவின் மிக முக்கியமான பாடல்கள்: “கருணைக் கடலாம் காதர்வலியின் காரண சரிதம் கேளுங்கள்”, கரீப் நவாஸ் (ஏழைகளின் பங்காளன்) என்று அழைக்கப்படும் அஜ்மீர் ஔலியாவைப் பற்றிய பாடலான ”அஜ்மீர் ராஜாவே கருணை க்வாஜாவே”, “சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ, என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைகளை…”

ஹனீஃபாவின் பல நூறு பாடல்கள் குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் தரக் கூடியவை.  உதாரணங்கள்: ”அருள் மேவும் ஆண்டவனே அன்புடைய காவலனே”; ”மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே யார சூலல்லாஹ்”; ”மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?” (மௌத் = மரணம்); “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு…”; “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா”; “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்.”

இந்தியாவின் சூஃபி பரம்பரையில் வந்த மாபெரும் இசைக் கலைஞனான இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா நவீன இசைக் கருவிகள் பழக்கத்துக்கு வரும் முன்பே நான்கே நான்கு கருவிகளோடு – தப்லா, ஹார்மோனியம், ஷெனாய், டேப் (ஃபக்கீர்கள் பயன்படுத்தும் இசைக்கருவி) – நான்கைந்து மணி நேரம் கச்சேரி செய்தவர்.   என்னுடைய வருத்தம் என்னவென்றால் தமிழ்நாடே  கொண்டாட வேண்டிய இந்த இசைக் கலைஞனின் மீது சினிமாவின் நிழல் படாத காரணத்தால் அவரது மரணம் கவனிக்கப்படாமல் போயிற்றே என்பதுதான்.  ஹனீஃபா தன் வாழ்நாள் முழுவதும் சினிமாவை ஒதுக்கித் தள்ளினார்.  குலேபகாவலி, பாவ மன்னிப்பு போன்ற இரண்டு மூன்று படங்களில் தான் பாடினார்.   ஹனீஃபாவின் இன்னொரு சாதனை, திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் மக்கள் இயக்கமாகத் திரண்ட ஆரம்ப காலத்திலும் சரி, அதற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும் சரி, அந்தக் கட்சியை மக்களிடம் கொண்டு சென்றதில் ஹனீஃபாவின் பங்கு மகத்தானது.  கருத்து உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட ”கல்லக்குடி கொண்ட கருணாநிதியே” என்ற பாடலைக் கேட்கும் போது நம் மனம் உருகி விடும்.

ஹனீஃபா தன்னுடைய பெரும்பான்மையான பாடல்களுக்குத் தானே இசை அமைத்தார்.  அவருடைய ஒரு பாடல் கூட கேட்பதற்கு அசுவாரசியமாக இருந்ததில்லை.  இங்கே நான் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், அவருடைய பாடல்களை இயற்றிய புலவர் ஆபிதீன் மற்றும் நாகூர்.    இரண்டாமவர் ஆயிரக் கணக்கான பாடல்களை இயற்றியவர் சலீம்.  கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோருடன் இணையாகப் பேசப்பட வேண்டிய நாகூர் சலீமும் சினிமாவின் நிழல் படியாத இடத்தில் இருந்ததால் பிரபலமாக அறியப்படவில்லை.  இந்த மகத்தான கலைஞர்களை இந்தத் தருணத்திலாவது நாம் நினைவு கூருவோம்.  அதன் பொருள், காலத்தால் அழியாத அவர்களின் பாடல்களைக் கேட்டு இன்புறுவோம்.

பின்குறிப்பு: ஏ.ஆர். ரஹ்மான் ஒருமுறை ஈ.எம். ஹனீஃபாவின் பாடல்களை ஒன்று திரட்டி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொகுக்க வேண்டும் என்று சொன்னார்.  எப்போது அதைச் செயல்படுத்துவார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா பாடல்கள் இணைப்பு.  இன்னொரு முக்கிய விஷயம்.  ஹனீஃபா தான் பாடிய ஒவ்வொரு பாடலையும் ஆயிரக் கணக்கான மேடைகளில் பாடினார்.  அதாவது, ஒவ்வொரு பாடலையும் பத்தாயிரம் இருபதாயிரம் தடவை பாடியிருப்பார்.  ஹனீஃபாவுக்கு பாடல் என்பது நமக்கு சுவாசத்தைப் போல.  அதனால் எந்த இணைப்பில் மிகச் சரியான பதிவு இருக்கிறது என்று தெரியவில்லை.  அதை நீங்கள்தான் யாரேனும் செய்ய வேண்டும்.

அருள்மழை பொழிவாய் ரஹ்மானே…

https://www.youtube.com/watch?v=JKoAeN7a0Jk

பின்வரும் இணைப்பில் ஈ.எம். ஹனீஃபாவின் சிறிய பேச்சையும் கேட்கலாம்.  நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு அற்புத சம்பவத்தை விவரிக்கிறார் ஹனீஃபா.  ஒருநாள் மதீனா நகர்தனிலே…

https://www.youtube.com/watch?v=hvyhpqnOmf4

ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது அரபு நாட்டில் ஒரு தியாகம் என்ற மகா அற்புதமான பாடல்.  இந்தப் பாடலில் ஈ.எம். ஹனீஃபாவுக்கு மட்டுமே உரிய தனித்துவமான விசேஷங்களைக் கேட்கலாம்.  இஸ்லாமிய நாடோடி இசையின் உச்சம் இந்தப் பாடல்.

https://www.youtube.com/watch?v=diILtc5kHdI

மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா?  ஈ.எம். ஹனீஃபாவின் இளைமையான குரல்..

https://www.youtube.com/watch?v=ylCDyYL_F9g

எவ்வளவு தேடினாலும் அவருடைய சில பாடல்கள் எனக்குக் கிடைக்கவில்லை.

பின்குறிப்பு:  மேடையில் தனக்குப் பக்க வாத்தியம் வாசிப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஹனீஃபா ஒலிபெருக்கியைக் கையால் மறைத்தபடி ஒரு காரியம் செய்வார்.  அந்த அட்டகாசத்தை நாகூர்வாசிகள் மட்டுமே அறிவோம்.  ஒரு மாபெரும் கலைஞனின் விளையாட்டு மனோபாவம் அது என்று சிரித்துக் கொள்வோம்.

 

 

 

 

 

 

 

 

Comments are closed.