உத்தம வில்லன் (மீண்டும்)

சாரு,

உத்தம வில்லன் மதிப்புரை அட்டகாசம். அஞ்சு முறையாவது ரசித்து படித்தேன். ரசித்தது உத்தம வில்லனைப் பற்றிய மதிப்புரையை அல்ல, உங்கள் எழுத்தின் அழகியலை.

இதைச் சொல்லியே ஆகணும்.

உங்களுக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், அலெஹாந்த்ரோ கொன்சாலஸ் (அமெரோஸ் பெரோஸ்) போன வருஷம் எடுத்த படம் Birdman.  உலகின் முதல் ஆட்டோஃபிக்ஸன் படம் மட்டுமல்லாமல் க்ளாசிக். போன வருஷம் ஆஸ்கர் வாங்குச்சு. பத்து முறை பார்த்துட்டேன், இன்னும் அதோட கலைநுணுக்கத்தை முழுசாக உள்வாங்கி அனுபவிக்கல. படம் பார்க்கும் போது எக்ஸைலைத்தான் அடிக்கடி நெனைச்சேன். தயவுசெய்து எப்படியாவது ஒருமுறை அந்த படத்தைப் பார்க்கவும்.

நன்றி,

ஜெகா.

அன்புள்ள ஜெகா,

உத்தம வில்லன் பற்றி இன்னும் நிறைய சொல்ல இருந்தது.  ஆனால் பயமாகவும் இருக்கிறது.  என் வாழ்வில் கண்ணுக்குத் தெரியாத கேமரா வைத்து எடுத்த மாதிரி இருப்பதால் எனக்கு பயம்தான் ஏற்பட்டது.  தெய்யம் பகுதி நன்றாக அமைந்திருந்தால் இது ஒரு குரஸவா படம் போல் உலக மகா க்ளாஸிக்காக அமைந்திருக்கும்.  ஒரு நல்ல musical ஆகவே ஆக்கியிருக்கலாம்.  இசையும் நடிப்பும் அரங்க அமைப்பும் ஒப்பனையும், ஏன், கதையும் கூட எல்லாமே உலகத் தரம்.  ஆனால் சுத்தத் தமிழ் என்றும் இன்னும் ஏதோ பண்ணியும் அந்தப் பகுதியில் ரமேஷ் அரவிந்த் சொதப்பி விட்டார்.  அதில் என்ன குறை என்பதை என்னால் விளக்க முடியவில்லை.  இதை விட இம்சை அரசன் அட்டகாசமாக இருந்ததே என்றுதான் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டே இருந்தது.  மிக முக்கியமாக உருவாக்கத்தில் ஒரு முக்கிய தவறு இருந்தது.  அதனால்தான் ஆட்டோ ஓட்டுநரிலிருந்து சாரு நிவேதிதா வரைக்கும் அந்தப் பகுதி அலுப்பாக இருந்தது.  என்ன தவறு என்றால், அந்தப் பகுதி அலுப்பாக இருந்ததுதான்.  கதை சுவாரசியமாகச் சொல்லப்படவில்லை.  ஒரு எம்ஜியார் படக் கதை.  ஏழை ஹீரோ பணக்கார ஹீரோயினைக் காதலித்து மணப்பது.  இந்தக் கதையை ஒரு க்ளாஸிக்காக எடுத்திருப்பார்கள் மொலோ(ங்) ரூஜ்ஷ் என்ற படத்தில். இந்தப் படத்தைப் பற்றி ஜன்னல் பத்திரிகையில் எழுதியிருந்தேன்.  படம் பூராவும் இசைதான்.  அது ஒரு இசை நாடகம்.  அந்தத் தரத்தில் வந்திருக்க வேண்டும், உத்தம வில்லனின் தெய்யம் பகுதி.   இருந்தாலும் படத்தின் மற்ற பகுதி காவியம்.  அதனாலேயே என் வாழ்வின் கடைசித் தருணம் வரை மறக்க முடியாத படமாகி விட்டது.

அலெஹாந்த்ரோ கொன்ஸாலஸ் இனாரித்துவின் birdman வெளிவந்த முதல் வாரத்திலேயே பார்த்து விட்டேன்.  இனாரித்துவின் பரம ரசிகன் நான்.  ஆனாலும் birdman-ஐ என்னால் ரசிக்க முடியவில்லை.  ஏன் என்று எனக்கே தெரியவில்லை.  அதனால்தான் அது பற்றி எழுதவில்லை.  அவருடைய babel எல்லாம் ஒரு மனிதனால் எடுக்கக் கூடியதா?  என்ன ஒரு படம்!

சாரு

 

Comments are closed.