பரதேசி (4) : கலைஞர் நம்பர் டூ, கலைஞர் நம்பர் த்ரீ…

முடித்து விட்டேன் என்றே நினைத்தேன்.  பிறகுதான் என் நண்பர் எம்.டி. முத்துக்குமாரசாமி எழுதிய பரதேசி விமர்சனத்தைப் படித்த பிறகு ஒரு முக்கியமான விஷயத்தை விட்டு விட்டேன் என்று தோன்றியது.  கீழே வருவது முத்துக்குமாரசாமியின் மேற்கோள்:

”பரதேசி படக் கதையில் இன்னொரு பெரிய ஓட்டை 48 நாட்களுக்கும் மேலாக கூலித்தொழிலாளிகளாக கங்காணியால் பிடிக்கப்பட்டவர்கள் தேயிலைத் தோட்டத்திற்கு நடந்து செல்வதாக காண்பிப்பது. தென் தமிழகத்திலிருக்கும் சாலூரிலிருந்து  நடந்து தமிழகத்திற்குள்ளாக இருக்கிற எந்த மலையகத் தேயிலைத் தோட்டத்திற்கும் நடந்து செல்ல 48 நாட்களுக்கு மேலா பிடிக்கும்? என்ன கதை இது? 1939 என்பது என்ன கற்காலமா? வழியில் கோவில் குளங்கள். கிராமங்கள் எதுவுமே இல்லையா என்ன? இந்தியா முழுவதும் நடைபயணமாய் தீர்த்த யாத்திரை காலங்காலமாய் யாருமே சென்றதில்லையா? பரதேசி படத்தின் நம்பகத்தன்மையினை வெகுவாக பாதிப்பது இது. போதாக்குறைக்கு 48 நாட்களுக்கு மேலாக நடந்து சோர்ந்து தாடியெல்லாம் அடர்ந்துவிடுகிறவர்களுக்கு அதற்கேற்றாற் போல அப்ளாக்கட்டை கிராப்பில் தலையில் முடி வளர்வதில்லை. என்ன மாயமோ?”

பரதேசியின் நம்பகத்தன்மைக்கு எதிராக இப்படி ஏராளமான விஷயங்கள் படத்தில் உள்ளன.  அந்தக் கிறிஸ்தவ டாக்டரே பெரிய உதாரணம்.  உண்மைக் கதையில் அந்த டாக்டர்தான் இந்தத் தொழிலாளிகளின் பிரச்சினையை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்.  அவர்தான் அந்தத் தொழிலாளிகளுக்காகத் தொழிற்சங்கம் அமைத்தவர்.  அவர்தான் அந்தத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையைப் பற்றி நாவலும் எழுதியவர்.  அந்த நாவலையே அடிப்படையாக வைத்துப் படம் எடுத்திருக்கும் பாலா அந்த டாக்டரை இன்னொரு வில்லனாகவும், காமெடியனாகவும் காட்டியிருக்கிறாரே, இது எந்த விதத்தில் நியாயம்? மாபெரும் குருத் துரோகம் அல்லவா? டாக்டர் டானியல் இதை எழுதியிருக்காவிட்டால் பாலாவினால் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியுமா?  இது பற்றியும் எம்.டி. முத்துக்குமாரசாமி என்னை விடக் காட்டமாக எழுதியிருக்கிறார்.  பாருங்கள்.

“டேனியலின் நாவலினால் ‘இன்ஸ்பையர்’ ஆகி எடுக்கப்பட்ட பாலாவின் பரதேசியிலோ விஷக்காய்ச்சலினால் கொத்து கொத்தாக மக்கள்  மடியும்போது பார்வையிட வருகின்ற டாக்டரோ கொள்ளை நோயினை தொழிலாளிகளை கிறித்துவத்திற்கு மதமாற்ற சந்தர்ப்பமாக பார்ப்பதாகக் காட்டப்படுகிறார். அவரும் அவருடைய வெள்ளைக்கார மனைவியும் ஜீஸஸ் குத்துப்பாட்டு ஆடி ரொட்டிகளை வீசியெறிய தொழிலாளிகள் அவற்றைப் பொறுக்கி எடுத்துக்கொள்கிறார்கள். மூலக்கதையை நாவலாக எழுதிய கிறித்தவ டாக்டரான டேனியலோ மருத்துவப்பணி செய்தது மட்டுமல்லாமல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் உருவாகி அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார். டேனியலின் நாவலால் உந்தப்பட்டு எடுக்கப்பட்டதாகக் கூறும் படம் இப்படியொரு துரோகத்தினை அந்த நாவலாசிரியருக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இழைத்திருக்க வேண்டாம்.”

மற்றபடி படத்தின் இசை பற்றியும் நான் எழுதியிருப்பதையே முத்துவும் எழுதியிருக்கிறார்.  இப்படி எல்லாவற்றிலும் முத்துவுக்கும் எனக்கும் கருத்து ஒத்திருந்தாலும் பரதேசியை முத்து ஏன் ஆகச் சிறந்த தமிழ்ப் படம் என்று கூறுகிறார் என்று யோசித்தேன்.  நான் கண்டு பிடித்த காரணம், தமிழில் வந்து கொண்டிருக்கும் குப்பைப் படங்கள்தான்.  ஏற்கனவே எழுதி விட்டேன்.  ஆங்கிலமே தெரியாத ஊரில் ஒருவர் ஆங்கிலத்தில் பேசியதும் உடனே அவரை அறிஞர் என்றும் தென்னாட்டு ஷேக்ஸ்பியர் என்றும் சொல்லி விடவில்லையா?  அல் பச்சீனோவை அப்பட்டமாகக் காப்பி அடித்து அல் பச்சீனோவின் நிழலாகவே உலவி வரும் ஒரு நடிகரை உலக நாயகன் என்று சொல்லவில்லையா?  அதே மன்னிப்பைத்தான் பரதேசிக்கும் கொடுத்திருக்கிறார் எம்.டி.எம்.

இன்னொரு காரணம், பரதேசிக்கு முன்னால் திரையிடப் படும் சேட்டை ட்ரைலர்.  அதில் சந்தானம் பேசும் வசனம் ஒன்று இது.  கடல்ல இருக்கிறது தண்ணி.  உன் வாயில இருக்கிறது என் ___________

ங்கொய்யால… இப்படியெல்லாம் படம் எடுப்பதை விட பேசாமல்… சரி, வேண்டாம்.  சந்தானம் அளவுக்கு நாம் கீழே இறங்கக் கூடாது.  அதே படத்தில் ஆர்யா பேசும் ஒரு வசனம் வருகிறது.

“இந்த ந்யூஸ் நாளைக்கு இந்த உலகத்தையே ஒலுக்கப் போவுது.”

என்னடா இது கெட்ட காலம் என்று மிரண்டு போனேன்.  கலி முத்திடுச்சா?  இப்படியெல்லாமா வசனம் எழுதுவார்கள்?  பிறகுதான் வேறொரு படம் பார்க்கும் போதும் இதே ட்ரைலர் வந்ததில் கேட்டுப் புரிந்து கொண்டேன்.  ”உலகத்தையே உலுக்கப் போவுது.”  ஆர்யா இங்க்லீஷ் கான்வெண்டில் படித்தவர் போலும்.  ”உ” வை ”ஒ” ஆக்கி விட்டார்.  ஜெயமோகனுக்கு ஆர்யா ரொம்ப தோஸ்த் ஆச்சே?  ஒரு எஸ்ஸெம்மெஸ் தட்டி அண்ணனுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்துங்கள்..

பரதேசி படத்தில் இன்னொரு அசிங்கம்.  பாலாவின் டெம்ப்ளேட் கடவுள் எதிர்ப்பு.  அது வர வரத் தேய்ந்து போய் ராமநாராயணன், டி. ராஜேந்தர் படங்களின் தரத்துக்குப் போய் விட்டது. படத்தில் வரும் ஏராளமான வில்லன்களில் மூன்று ஸைலண்ட் வில்லன்கள் முக்கியமானவர்கள்.  கிறிஸ்தவ டாக்டர் பரிசுத்தம், குல்லா வைத்து மீசை இல்லாமல் தாடி வைத்திருக்கும் சாயபு, இந்துப் பூசாரி.  இந்த மூவரும்தான் கங்காணி மற்றும் ஆங்கிலேயர்களோடு சேர்ந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சுரண்டுகிறார்களாம்!  எப்படி இருக்கிறது பாருங்கள்!  அடித்தட்டு மக்களை மதம் எப்படிச் சுரண்டுகிறது என்பதைக் காட்ட எஸ்.வி. சேகர், கிரேஸி மோகன் நாடக பாணியையா பின்பற்றுவது?  பாலாவுக்கும் எஸ்.வி. சேகர் கிரேஸி மோகன் வகையறாக்களுக்கும் பிறகு என்ன வித்தியாசம்?   இப்படி எஸ்.வி. சேகர் பாணியில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரை எப்படிப் பத்திரிகைகளும் புத்திஜீவிகளும் கலைஞன் கலைஞன் என்று கொண்டாடுகிறார்கள்?  அப்படியானால் எஸ்.வி. சேகரையும் கலைஞன் என்று கொண்டாட வேண்டியதுதானே?

என்னுடைய பரதேசி விமர்சனம் பற்றி கவிஞர் பெருந்தேவி ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது கீழே:

பரதேசி படம் இன்னும் பார்க்கக் கிடைக்கவில்லை. என்றாலும் கதைத்தளம், காட்சிகள் பற்றி பலரும் எழுதியிருப்பதை வாசிக்கக் கிடைத்தவரை சாரு பியானிஸ்ட் படத்தோடு பரதேசியை ஒப்பிட்டு எழுதியிருப்பதை முக்கியமானதாகக் கருதுகிறேன். அடிமைப்பட்டவர்கள்-அப்பாவிகள் x அதிகாரத்திலிருப்பவர்கள்-வில்லன்கள் என்கிற கருப்பு வெள்ளை இரட்டைமுரணில் நம்பிக்கைக் கீற்று எப்படி அழிக்கப்படுகிறது என்கிறார் சாரு. நம்பிக்கைக் கீற்றான கிறித்துவ மருத்துவர் கதாபாத்திரத்தை கோமாளித்தனமாகக் காட்டியிருப்பதையும் தொடர்புறுத்திப் பேசுகிறார். சற்றே வேறுவிதமாகவும் யோசிக்கலாம். “வாழ்க்கை என்பது நீங்கள் நினைப்பது போல இவ்வளவு குரூரமாக இல்லை பாலா” என்கிறார் சாரு. இங்கே கொஞ்சம் மாறுபடுகிறேன். வாழ்க்கை குரூரமானதுதான், சாரு, பல தருணங்களில் பல தனி, பொதுவெளிகளில். அதே நேரத்தில் நல்லவர் x கெட்டவர் போன்ற கெட்டிப்படுத்தப்பட்ட முன்யூக முரண்களைக் கலைத்து, உலக வாழ்வின் ஆக அடிப்படையான பண்பாட்டுச்சுயங்களுக்கு (cultural selves) இடையிலான (intersubjectivity) உறவின் நீர்மையைச் (fluidity) சொல்லும், இந்த பண்பாட்டுச் சுயங்களுக்கிடையிலான உறவு உருவாகிற விதத்தின் பல்வேறு செயல்பாட்டு அடுக்குகளை காட்சிப்படுத்தக்கூடியதே கலை என்று நினைக்கிறேன். (இனவரைவியலும் கலையும் மாறுபடுகிற புள்ளியென்றும் இதைக் கொள்ளலாம்.) நீர்மையை செயல்பாட்டு அடுக்குகளைக் காட்சிப்படுத்துவதாலேயே நம்பிக்கைக்கீற்று போல ஒன்று கலைப்படைப்பில் தெறிக்கிற சாத்தியமும் ஏற்படுகிறது. இந்த அடிப்படையில் யோசிக்க, பரதேசியில் மருத்துவர் கதாபாத்திரத்தை திரித்திருப்பது வலதுசாரி இந்துத்துவ மனப்போக்கு என்பதோடுகூட இதைத் தாண்டியும் கலைத்தன்மை குறைபாடுற்ற கலையின் ஒரு சுட்டுதல் என்பதாக புரிந்துகொள்கிறேன்.”

பெருந்தேவியின் மொழியைப் பார்த்து பயந்து விடாதீர்கள்.  இனவரைவியல் என்பது ஒரு இனத்தின் வரலாறு.  ஆங்கிலத்தில் ethnography என்று சொல்லலாம்.  இவ்வளவு பெரிய பதப் பிரயோகங்களெல்லாம் பரதேசி போன்ற ஒரு மொண்ணையான படத்துக்குத் தேவையில்லை.  சிலர் எழுதியிருக்கிறார்கள், சாரு இவ்வளவு பெரிய விமர்சனம் எழுதியிருப்பதிலிருந்தே பரதேசி எவ்வளவு முக்கியமான படம் என்று தெரியவில்லையா என்று.  இது மிகவும் மலினமான வாதம்.  ஜூவியில் கூட அட்டைப் படத்தில் “நாங்க மட்டும்தான் திருடனா?  நீங்க இல்லியா?” என்று வசனம் போட்டு கலைஞர் நம்பர் ஒன்னின் பெரிய போட்டோ போட்டிருக்கிறது.  அதற்காக கலைஞர் நம்பர் ஒன் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா?  (கலைஞர் நம்பர் டூவாக இப்போது பாலா வந்து விட்டதால் மூத்தவரை நம்பர் ஒன் என்று சொல்லி இருக்கிறேன்.  இதே ரீதியில் இனிமேல் எஸ்.வி. சேகரை கலைஞர் நம்பர் த்ரீ என்று அழைப்போமாக!

நான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எம்.டி. முத்துக்குமாரசாமியின் லிங்க்:

http://mdmuthukumaraswamy.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

தொடரும்…

 

Comments are closed.