ஒரு கடிதமும் பதிலும்…

சாருஆன்லைனில் வெளிவரும் ஆங்கிலக் குப்பைகள் நான் பதிவிடுவதல்ல.  சில கிரிமினல்களின் வேலை.  என் இணையதளப் பொறுப்பாளரின் பார்வைக்காக விட்டு வைத்திருக்கிறேன்.

பின்வருவது என்னுடைய ஒரு கடிதமும் அதற்கான பதிலும்:

dear kuppuswamy,

இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல் என்று நினைக்கிறேன்.  நீங்கள் மொழிபெயர்த்த பனி படித்து விட்டேன். எனக்கு ஒவ்வொரு ஞாயிறும் பரீட்சை.  பழுப்பு நிறப் பக்கங்களை சனிக்கிழமை அனுப்பி விட வேண்டும்.  ஆனாலும் அதைத் தொடாமல் ஒரு வாரத்தில் பனியை முடித்து விட்டேன்.  எனக்கு இது சாதனை.  உலகிலேயே மிக மெதுவாகப் படிக்கும் வாசகன் நானாகவே இருப்பேன்.  அதற்குப் பல காரணங்கள். ஒரே ஒரு வார்த்தையைக் கடக்க எனக்கு சமயங்களில் ஒரு மணி நேரம் கூட ஆகும். பனியில் வரும் ராக்கி என்ற வார்த்தை அப்படி ஆனது.   ராக்கிக்கும் எனக்குமான உறவு அப்படிப்பட்டது.
நாவல் பற்றி, உங்கள் பணி பற்றி கட்டுரையாக எழுதுவேன்.
இன்னொரு முக்கிய விஷயம், ஓரான் பாமுக்கின் பனி என்ற இந்த நாவல் உலகின் மிக முக்கியமான நவீன க்ளாஸிக் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.  ஆனால் தருண் எழுதியுள்ள the story of my assassins என்ற நாவல் பனியை விடவும் காத்திரமானது.  நீங்கள் இதுவரை படித்திருக்காவிட்டால் அதை சிபாரிசு செய்கிறேன்.
சி.சு.செ., க.நா.சு, ஆதவன், இ.பா., அ.மி., நகுலன், எம்.வி..வி., ஆ. மாதவன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா., தி.ஜா., தி.ஜ.ர., ந. முத்துசாமி போன்ற எனது ஆசான்களின் வரிசையில் உங்களையும் வைத்து விட்டேன்.  நீங்கள் இப்போது என் குருதியில் கலந்து விட்டீர்கள்.
அன்புடன்,
சாரு
இஸ்தாம்பூல் என்றே துருக்கி முழுவதும் குறிப்பிடுகிறார்கள்.  அது பற்றி நாளைய மெயிலில் எழுதுகிறேன்.  நாளை மதியத்துக்குள் தினமணி கட்டுரையை முடிக்க வேண்டும்.
ஜி. குப்புசாமியின் பதில்:
அன்புமிக்க சாரு,
வணக்கம்.
உங்கள் கடிதம் என்னை உணர்ச்சிவயப்பட வைக்கிறது.  உயிர்மையின் ஆரம்ப இதழ்களில் வந்த என் மொழிபெயர்ப்புகளை அப்போதே பாராட்டிச் சொல்லியிருக்கிறீர்கள். 2003 ல் ஜூலியன் பார்ன்ஸின் நிசப்தம் சிறுகதை தமிழில் வந்த மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு என்று ஹமீதிடம் நீங்கள் சொன்னது நினைவிருக்கிறது.
நான் என்ன சொல்ல?  சாகித்ய அகாதெமியை விட உங்கள் பாராட்டு முக்கியம்.

இன்றிரவு எனக்கு தூக்கம் வரப்போவதில்லை. உங்கள் பாராட்டு வார்த்தைகள் தூங்கவிடப்போவதில்லை.
நன்றி,
GK