நானும் வாசகர் வட்டமும்… (2)

இன்றைய தினம் புதிய எக்ஸைல் இரண்டாம் பதிப்புக்கான பிழை திருத்தங்களை அனுப்பி வைத்தேன்.  பிழை திருத்தம் செய்தவர் டாக்டர் ஸ்ரீராம்.  இரண்டு லட்சம் வார்த்தைகளைச் சரி பார்த்திருக்கிறார். இவரும் செல்வகுமாரும்தான் வாசகர் வட்டத்தின் செயலாளர்கள்.  இவர்கள் இருவரும் குடிப்பழக்கம் இல்லாதவர்கள். வாசகர் வட்டத்தில் குடித்து விட்டுக் கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லும் நட்புக் கொழுந்துகள், உறவுக் கொழுந்துகள் இந்த வேலையை எனக்காகச் செய்யுமா?

இது அவர் செய்யும் இரண்டாவது பிழை திருத்தம்.  இப்போது எடிட்டிங் வேலையையும் சேர்த்து செய்திருக்கிறார்.  இரண்டு உதாரணம் தருகிறேன்.

சாரு, (புதிய எக்ஸைல்) பக்கம் 818-இல் ‘இருடீர் மனிவிளக்கத்…’ எனத் தொடங்கும் பாடலில் இரண்டாம் வரியில் மருடேயும் என்ற வார்த்தைக்கு அருகில் *(நட்சத்திரக் குறி) உள்ளது. அந்த நட்சத்திரக் குறியை நீக்க வேண்டும். மருடேயும் என்ற வார்த்தையை ‘மருடீர்ந்த’ என்றும் பாடலாம் என்று கூறுகின்றனர். அந்த குறிப்பு நாவலில் இல்லை. எனவே, அந்த நட்சத்திரக் குறியை நீக்க வேண்டும்.

For reference:

http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0413.html

“இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே
குருடேயு மன்றுநின் குற்றம்–மருடேயும்*
பாட்டு முரையும் பயிலா தனவிரண்
டோட்டைச் செவியு முள.”
என அவனை முனிந்து பாடினர். † [மகனாகிய நன்னன் புலவர் புகழ்ச்சிக்கு உரியவனாகலின், இப்பாட்டில் வரும் ‘ ஏழிலார்கோவே’ என்பது,தந்தையாகிய நன்னனையேகுறிக்கும்; அவனே ஔவையார் காலத்துக்கு ஏற்றவனும் தீச்செயலுமுடையவனுமாதலால்.] தொல்காப்பியச் செய்யுளியலுரையிற் குறிப்பில்லாமலும், தமிழ் நாவலர் சரிதையில் ” ஔவையார் ஒருவனைப்பாடி அவனிகழ்ச்சி சொல்ல, அப்போது பாடிய அங்கதம்” என்னும் குறிப்புடனும் அடியில் வரும் அகவலொன்று காணப்படுகின்றது:–
* ‘ மருடீர்ந்த’ எனவும் பாடலாம்.

http://www.tamilvu.org/slet/l1200/l1200pd2.jsp?bookid=21&auth_pub_id=100&pno=738

மற்றொரு காலத்துக் கொண்கான நாட்டதிபனும் ஏழில்மலைத் தலைவனுமாகிய நன்னன்பாற் சென்று சிறந்த பாடல்களைப் பாடிப் பொருள் கூறி மகிழ்விக்கவும் அவன் அவற்றைப் பாராட்டினானல்லனாக, அது கண்டு இவர் முனிந்து

“இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே,

குருமேயு மன்றுநின் குற்றம் – மருடீர்ந்த

பாட்டு முரையும் பயிலாதன விரண்,

டோட்டைச் செவியு முளை”

என்று பாடி வெறுத்து மீண்டனர்.

ஒரே ஒரு வார்த்தைக்கு இத்தனை விளக்கம். இப்போது நான் அந்த வார்த்தையை மருடீர்ந்த என்று மாற்றி விட்டேன்.

இன்னொன்று:

சாரு, இதை அப்படியே விட்டுவிடலாமா அல்லது மாற்ற வேண்டுமா என்று பாருங்கள்:

பக்கம் 628-இல் இருந்து பக்கம் 631-இன் இரண்டாம் பத்தி வரை படித்துப் பாருங்கள். பின், பக்கம் 808-இன் கடைசிப் பத்தியில் இருந்து பக்கம் 814-இல் 

மூன்றாம் பத்தி வரை படித்துப் பாருங்கள். இட்லி, இட்லி மாவு அரைக்கப்படும் முறை, பாக்கெட் மாவு பற்றிய கருத்துக்கள் திரும்ப வருகின்றன. 

 எப்பேர்ப்பட்ட கவனம் பாருங்கள்! சென்னையில் உணவு விடுதிகளில் கிடைக்கும் இட்லி இட்லிக்கே அவமானம் என்று உணர்வதால், அந்த obsession காரணமாக எழுதியதையே திரும்ப எழுதி விட்டேன். ஸ்ரீராம் சொன்ன பின் மாற்றங்கள் செய்தேன்.  என்ன மாற்றம் செய்யலாம் என்று இரண்டு பரிந்துரைகள் எழுதியிருந்தார்.  இரண்டையுமே நிராகரித்து விட்டுப் புதிதாக எழுதினேன்.

இப்படி 70, 80 இடங்களில் மாற்றங்கள் சொல்லியிருக்கிறார். பிழைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் நலம்விரும்பிகள் வாசகர் வட்டத்தால் நான் குட்டிச்சுவராகி விட்டதாகவும், வாசகர் வட்டம் குடிகாரக் கும்பல் எனவும் புலம்புகிறார்கள்.

யாரோ வெளியிலிருந்து சொன்னால் மயிராச்சு என்று விட்டு விடுவேன். என் நலம்விரும்பிகள் சொல்வதால்தான் மண்டைக் குடைச்சல் ஆகிறது.

இவ்வளவுக்கும் பலருடைய பெயரை நான் குறிப்பிடவே இல்லை.  உதாரணமாக ஸாம்.  நான் மருத்துவமனையில் படுத்துக் கிடந்த போது ஒரு வார காலமும் இரவெல்லாம் கண் விழித்து என்னைப் பார்த்துக் கொண்டார்.  நான் படுக்கையில் அசைந்தால் போதும்; என்ன சாரு என்பார்.  இரவெல்லாம் பசிக்கும்.  இரவெல்லாம் ஆப்பிளும் ஆரஞ்சும் உறித்துக் கொடுப்பார்.  ஆனால் அவர் தன் நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்ன போது நன்றாகவே இல்லை ஸாம் என்று சொன்னேன்.  அதையும் கேட்டுக் கொண்டு அவரது வழக்கமான கவர்ச்சிகரமான பெண்களையெல்லாம் மயக்கித் தள்ளக் கூடிய புன்னகையைப் புரிந்தார்.

இது போன்ற அற்புதமான மனிதர்களைக் கொண்டதே வாசகர் வட்டம்.