கல்புர்கி கொலை

எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர்.  ஒரு புத்தகத் திருவிழாவில் ஒரு பிரபலமான அகராதியை வாங்கிக் கொண்டிருந்தார்.  இது உங்களிடம் இல்லையா என்று கேட்டேன்.  சிரித்து விட்டு இருபதாவது தடவையாக இதை வாங்குகிறேன் என்றார்.  எழுத்தாளர்களின் விபரீத குணாதிசயங்களில் இது ஒன்றோ என எனக்கு சம்சயம்.  அப்படி இல்லை.  அவருக்குக் கடும் கோபம் வரும் போதெல்லாம் அகராதியை எடுத்துக் கிழித்துப் போட்டு விடுவாராம்.  ஏன் அப்படிக் கோபம்?  ”என் உயிருக்கு உயிரான, என் உயிரை விடவும் மேலான என் புத்தகங்களைப் பார்த்து, ’இந்தக் குப்பையை எல்லாம் எப்போ ஒழிக்கப் போறீங்க?’ என்று என் மனைவி கேட்கும் போதெல்லாம் டிக்‌ஷனரியைக் கிழிப்பேன்” என்றார் எழுத்தாளர்.   புத்தகங்களுக்கே அப்படி என்றால் மதமும் கடவுளும் மனிதனுக்கு – அதுவும் ஒரு இந்தியனுக்கு – எப்படி அர்த்தமாகும்?  இது என்ன ஐரோப்பிய நாடா?  ஐரோப்பிய நாடான ஃப்ரான்ஸிலேயே – அதிலும் கருத்துச் சுதந்திரத்திற்குப் பேர் போன அந்த நாட்டிலேயே Michel Houellebecq என்ற எழுத்தாளரை ஓட ஓட விரட்டி இப்போது நாட்டை விட்டே விரட்டி விட்டார்கள்.  ஃப்ரான்ஸில் இருந்தால் கொலை செய்யப்படுவார்.  ஒரு மதத்தை விமர்சித்து விட்டார்.  எனவே கல்புர்கி ஒரு முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்.  மதத்தை விமர்சித்தால், மக்களின் மத நம்பிக்கைகளை அவதூறு செய்தால் மதப் பற்றாளர்கள் என்ன செய்வார்கள் என்று மக்களோடு மக்களாகப் புழங்கி, அவர்களின் கதைகளைத் தொகுத்துக் கொண்டிருந்த ஒரு முதிய எழுத்தாளருக்குத் தெரியாதா?  கல்புர்கிக்கு எதிராக எத்தனையோ மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன.  ஒரு போராட்டத்தில் கல்புர்கியின் பேராசிரியரே தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார்.  பல ஆண்டுகளாக கல்புர்கி இதைச் செய்து வந்திருக்கிறார்.  கருத்துச் சுதந்திரம் என்பது நம் கருத்தையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது அல்ல.  இந்து மதம் ஒரு மதமே அல்ல; விநாயகர் கடவுளே அல்ல; ஒரு கற்பனை என்றெல்லாம் கல்புர்கி நினைக்கலாம்.  ஆனால் அதைச் சொல்வது கருத்துச் சுதந்திரம் ஆகாது.  அப்படியென்றால் அவர் எல்லா மதங்களைப் பற்றியும் தன் கருத்தைச் சொல்ல வேண்டும்.  சொல்லியிருந்தால் 20 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டிருப்பார்.

நடந்த படுகொலையை நான் நியாயப்படுத்தவில்லை.  யாருமே நியாயப்படுத்த முடியாது.  ஒரு எறும்பைக் கொல்வதற்குக் கூட நமக்கு உரிமை இல்லை.  ஆனால் பொதுவெளியில் கருத்துச் சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டு மக்களையும், மக்களின் நம்பிக்கைகளையும் அவமானப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது.  அவமானப்படுத்தினால் அதன் விளைவுகளையும் அந்த முட்டாள் சந்திக்கத்தான் வேண்டும்.