தீபாவளி ஸ்பெஷல் ஆன்மீகக் கதை (1)

ஆன்மீகவாதிகள் ஏன் இத்தனை முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு இப்போதெல்லாம் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.  இப்போதெல்லாம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இப்போதுதான் அந்த ஜீவராசிகளோடு எனக்குப் பரிச்சயம் உண்டாகி இருக்கிறது.  ஒரு எழுத்தாளனோடு மனைவியாக வாழ்வது ரொம்பக் கஷ்டம் என்று பல பெண்கள் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.  பாரதியின் மனைவியே அப்படித்தான் சொல்லி இருக்கிறார்.  இதேபோல், ஒரு நடிகனின் மனைவியும் புலம்பலாம்.  ஆனால் ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவியோ மந்திரியின் மனைவியோ பேராசிரியரின் மனைவியோ ஸாஃப்ட்வேர் நபரின் மனைவியோ புலம்ப மாட்டார்கள்.  பணம், அதிகாரம் என்று பல வசீகரங்கள் அதில் உள்ளன.  இப்போதெல்லாம் நான் ஒரு ஆன்மீகவாதியின் கணவனாக இருப்பது கடினம் என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறேன்.  அவந்திகாவினால் எனக்கு ஒரு பிரச்சினை இல்லை.  அவள் உண்டு; அவளுடைய ஆன்மீகம் உண்டு என்று இருப்பாள்.  எந்த நேரத்திலும் என் உலகத்தில் அவள் குறுக்கிட்டதே இல்லை.  ஆனால் அவளைச் சந்திக்க வரும் ஆன்மீக அன்பர்களின் லொள்ளுதான் தாங்க முடிவதில்லை.

வாராவாரம் அவந்திகா எடுக்கும் ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்கு வரும் ஒரு மாணவன் இன்று தீபாவளியை முன்னிட்டு வீட்டுக்கு வந்தான்.  விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் என்பதால் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தாள் அவந்திகா.  அவன் வந்த நேரத்தில் அவள் உள்ளே பூஜையறையில் இருந்ததால் அவன் வராந்தாவில் அமர்ந்தான்.

திடீரென்று பூஜையறையிலிருந்து அன்பான குரலில் ”சாரு, நீ என்ன ஆட்டோபயக்ரஃபியா எழுதி இருக்கே?  எக்ஸைல் ஆட்டோபயக்ரஃபின்னு நீ எழுதியிருக்கியாம்ல?  கொஞ்சம் வெளியே வாயேன்” என்றாள் அவந்திகா.  ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தால், பையன் கையில் எக்ஸைல்.  அடப் பாவி!  மலேஷியாவிலிருந்து நண்பர்கள் எக்ஸைல் பிரதிகளை எடுத்து வரச் சொன்னதால் அதை வாங்கி வைத்திருந்தது இப்படியா முடிய வேண்டும்?

தம்பி கேட்டான்.  “இது ஆட்டோபயக்ரஃபின்னு இங்கே போட்டு இருக்கே?” முதல் பக்கத்தில் autofiction பற்றிய மேற்கோளைக் காண்பித்தான்.  காண்பித்து விட்டு, முதல் அத்தியாயத்தைப் படிக்க ஆரம்பித்தான்.  நல்லவேளை, சத்தம் போட்டுப் படிக்கவில்லை.  இவன் என்ன எக்ஸைலை மாணிக்கவாசகரின் திருவாசகம் என்று நினைத்து விட்டானா?

அதோடு விடவில்லை.  ”வாங்க, உக்காருங்க” என்று சோஃபாவில் பக்கத்து இடத்தைக் காண்பித்தான். என்னோரு சுமார் ஒருமணி நேரம் பேச நினைக்கும் ஆர்வம் அவன் முகத்தில் தெரிந்தது.

அடுத்த கேள்வியை வீசினான்.  ”இது ஃப்ரெஞ்ச்லேர்ந்து ட்ரான்ஸ்லேஷனா?”

மேற்கோள் ஃப்ரெஞ்சிலும் இருந்ததால் ஏற்பட்ட சந்தேகம்.

அடுத்தது, “இது என்ன புக்கு?”

இன்னும் இதுபோல் நூறு கேள்விகள் வைத்திருந்தான் என்று நினைக்கிறேன்.

இதே தம்பியிடம் ஏற்கனவே ஒருமுறை மாட்டியிருக்கிறேன்.  ஒரு ஆன்மீகக் கூட்டத்தில் பேச ஒப்புக் கொண்டிருந்தேன்.  அப்போது இந்த ஆன்மீக டெரரிஸ்டுகளைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.  அவர்கள் கேட்ட கேள்விகளைப் பார்த்த போதுதான் இனிமேல் இந்தக் கூட்டத்தின் பக்கமே திரும்பக் கூடாது என்று முடிவெடுத்தேன்.  அன்றைய கூட்டத்தின் ஹீரோவே இந்தத் தம்பிதான்.  அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு என்னைத் திக்குமுக்காடச் செய்தான்.

இலக்கியம் படிக்க வேண்டும் என்கிறீர்கள்?  அந்தப் புத்தகமெல்லாம் எங்கே கிடைக்கும்?

டீவில ஏன் ரொம்ப அசிங்கமா காட்றாங்க?

சினிமால்லாம் ஏன் ரொம்ப அசிங்கமா இருக்கு?

இதுபோல் பல கேள்விகள்.  18 வயதில் ஆன்மீகத்தில் புகுந்தால் மூளை இப்படித்தான் போகும் என்று நினைத்துக் கொண்டேன்.  அதுவும் தவிர, ஆங்கிலம் தெரியாத, மிடில் க்ளாஸ் – லோவர் மிடில் க்ளாஸ் கூட்டமே இப்படித்தான் இருக்கும்.  அதிலும் அந்தக் கூட்டம் ஆன்மீகத்தில் பாய்ந்தால் அவ்வளவுதான்.  சுனாமி தேவலை.

நான் இன்று அவனிடம் மிகவும் கடுமையான தொனியில் கேட்டேன்.  ஆனந்த விகடன் படிப்பாயா?  கேள்விப்பட்டிருக்கேன்; படிச்சதில்ல.  அதுல இலக்கியம் இருக்குமா?

நான் கோபத்தின் உச்சத்துக்கே போய் விட்டேன்.  விகடன் பெயர் கூடத் தெரியாத ஒரு பொடியன், எக்ஸைலைப் பார்த்து ஆட்டோபயக்ரஃபியா என்று கேட்டு என்னிடம் இலக்கிய விவாதம் செய்ய ஆர்வப்படுகிறான்.

அதிலும் அந்தக் கேள்வியை அவந்திகாவிடம் கேட்டிருக்கிறான்.  ஏன் தம்பி, நான் நன்றாக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா என்று உள்ளுக்குள் கேட்டுக் கொண்டு ”உன்னை மாதிரி தம்பிகள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் பைத்தியம் பிடித்து விடும்; முதலில் அந்தப் புத்தகத்தை எடுத்த இடத்தில் வை” என்றேன்.

அவனுக்கு நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்று புரியவில்லை.  திருதிருவென்று முழித்துக் கொண்டே புத்தகத்தைக் கையில் வைத்திருந்தான்.   “லூஸுக் கம்மனாட்டிப் பயலுங்களா” என்று மனசுக்குள் திட்டிக் கொண்டே என் அறைக்குள் வந்தேன்.

Comments are closed.