ஸ்ரீலஸ்ரீ மனுஷ்ய புத்திரன் சுவாமிகள்

இன்று பதினோரு மணி அளவில் மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குப் போனேன்.  டிசம்பர் என்றால் மட்டும் வீட்டுக்கு வருகிறீர்கள் என்றார் கிண்டலுடன்.  எனக்குப் புத்தக விழாவின் மீது என்றைக்குமே மரியாதை கிடையாது.  புத்தக விழா சமயத்தில் என் புத்தகம் வர வேண்டும் என்ற எண்ணமே எனக்கு அசூயையை வரவழைக்கக் கூடியது.  காரணம், எந்த ராஜா எந்தப் பட்டிணத்துக்குப் போனாலும் பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் அதிகபட்சம் 5000 பிரதிகளே போகின்றன.  இதில் டிசம்பர் மாதம் பதிப்பாளரைச் சந்திப்பதில் என்ன பயன்?

நான் சந்திக்கப் போனது உயிர்மை ஆசிரியரை.  எனக்கு எதை எழுதினாலும் 25 வயதில் கணையாழிக்குக் கதை எழுதி அனுப்பி விட்டு, அசோகமித்திரனிடமிருந்து போஸ்ட் கார்ட் வரும் வரை திக் திக் என்று அடித்துக் கொள்ளும்.  அதேபோன்ற மனநிலைதான் இப்போது எழுதினாலும் இருக்கிறது.  உயிர்மைக்கு ஒரு கதை அனுப்பினேன்.  அது பிரசுரமானதா, நிராகரிக்கப்பட்டதா, இந்தப் பிரளய காலத்தில் உயிர்மை வந்து விட்டதா, போன் வேலை செய்யாததால் போனிலும் மனுஷ்ய புத்திரனைப் பிடிக்க முடியவில்லை…  நேரே போனதற்கு இதுதான் காரணம்.  கதை வந்திருந்தது.  கதை நன்றாக இருந்தது என்றார் மனுஷ்.  நான் நம்பவில்லை.  எனக்கென்னவோ ஹமீத் என்னைத் திட்டி எழுதுவதுதான் உண்மை என்று தோன்றுகிறது.  பாராட்டிச் சொல்வது ஏதோ முக தாட்சண்யத்துக்காகச் சொல்வதாகப் படுகிறது.

உயிர்மையில் அவருடைய ஒரு கவிதை வந்துள்ளது.  படித்தேன். எப்போதும் போலவே அவருடைய இந்தக் கவிதையும் ரொம்பப் பிடித்திருந்தது.  ஆனால் ஒரு ’கொலைபாதக’ ஆச்சரியம் என்னவென்றால், இப்போது சென்னையில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதோ அதை அப்படியே புகைப்படம் எடுத்தது போல் கவிதையாக எழுதித் தள்ளியிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.  கவிதை எழுதிய தினம் 16 நவம்பர்.  16-ஆம் தேதி சென்னையில் மழை மட்டுமே பெய்து கொண்டிருந்தது.  சென்னையில் மழை சர்வ சாதாரனம். வெள்ளம் பற்றிய நினைவு கூட இல்லை.  இந்தத் தேதியில் எந்தப் பொய்யும் இருக்க வாய்ப்பில்லை.  ஏனென்றால், உயிர்மை 22, 23 தேதியே அச்சுக்குப் போய் விடும்.  எனக்குப் பயமாக இருக்கிறது.  மனுஷய புத்திரனின் பெயரில் தான் மனிதன் இருக்கிறான்.  இவர் ஒன்று சைத்தனாக இருக்க வேண்டும்.  அல்லது, தேவபுத்திரன் என்று இவர் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும்.  நேரில் பார்த்தபோதே தெரிந்திருந்தால் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருந்திருப்பேன்.  ஸ்ரீலஸ்ரீ மனுஷ்ய புத்திரன் சுவாமிகள் என்று தான் அவர் என் மனக்கண்ணில் தோன்றுகிறார்.  இல்லாவிட்டால், துவரங்குறிச்சி மஸ்தான் சாஹிபு.  போன டிசம்பரிலும் இதேபோல் அவருடைய கவிதைத் தொகுதியில் உள்ள ஒரு கவிதையில் ஒரு பாத்திரம் சென்னை மாநகரம் அழிந்து போகும் என்று சாபம் கொடுக்கும்.

நான் சுவாமிகளிடம் கேட்டேன், எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைக்கும் படி வரம் கொடுங்களேன் என்று.  அது என்னமோ, நண்பர்களுக்கு வரமோ சாபமோ கொடுத்தால் பலிக்க மாட்டேன் என்கிறது, பொதுவாகக் கொடுத்தால் பலிக்கிறது என்றார் சுவாமிகள்.

சுவாமிகள் எப்படியும் எம்மெல்லே ஆகி விடுவார் என்றுதான் எதிர்பார்த்தேன்.  இப்போது அதிமுக தொண்டர்கள் உணவுப் பொட்டலங்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுத்து மக்களிடம் உதை வாங்குவதைப் பார்த்தால் சுவாமிகள் மினிஸ்டரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  நிச்சயம் போலீஸ் துறை கிடைக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.  பல என்கவுண்ட்டர்கள் நடந்து சில பல இலக்கியவாதிகளுக்கு ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுத வேண்டியிருக்கும்.  கலாச்சார துறையே கிடைக்கட்டும்.

மனுஷ்ய புத்திரனின் அந்தக் கவிதையின் தலைப்பு: இறந்த நதிகளின் ஆவிகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன.

கவிதையில் ஒரு காட்சி:

யாரோ ஒருவன்

அப்போதுதான் எழுந்து

தன் காலைத் தேநீரை

அருந்திக் கொண்டிருந்தான்

வாசற்கதவைத் திறந்து கொண்டு

ஒரு நதி உள்ளே வருவதைக் கண்டு

திடுக்கிட்டான்

நதி கடுமையான பசியில் இருந்தது

அவனை இழுத்துக் கொண்டு

வேகவேகமாக நடந்து சென்றது