ஒரே இலக்கு…

டியர் சாரு,

நம்முடைய மாசாணி அம்மன் பயணத்தின் போது உங்களுடைய ஒவ்வொரு  புத்தகத்திலும் இருந்து ஏதேனும்
ஒரு பத்தி அல்லது ஓர் கட்டுரையை  எடுத்து சாரு ஆன்லைனில் நிரந்தரமாக பதிவிடுவதாக (புத்தகங்கள்
பற்றி ஒர் புதிய பகுதியில்) முடிவானதே, சாரு?

தொடர்ச்சியான வேலை பளுவில் மறந்து இருந்தால் ஞாபகப்படுத்தவே சொன்னேன்.

மற்றபடி உங்களுடன் இரண்டு நாள் பயணித்தது – என்னதான் உங்களுக்கு சிரமங்கள் கொடுத்தாலும் – என் வாழ்நாள் அனுபவம். பாருங்கள், வாழ்க்கையில் மிகவும் பிடித்த நபருக்கு எவ்வளவு கஷ்டங்கள் கொடுக்கிறோம்.

ராம் நாராயண்.

டியர் ராம்,

நீங்கள் என்னோடு வந்தது எனக்குத்தான் சந்தோஷம், சௌகரியம்.  எனக்கு ரயில், பஸ் பயணம் எல்லாம் பிடிக்காது.  அந்த வாழ்க்கையெல்லாம் போதும் என்ற அளவுக்கு வாழ்ந்து முடித்தாகி விட்டது.  எனவே, ரயிலில் நீங்கள் உடன் இருந்தது எனக்கு சந்தோஷமே.  ஆனால் ஓடுகின்ற ரயிலில் வந்து நீங்கள் ஏறியதுதான் எனக்குப் பதற்றத்தை அளித்து விட்டது.  என் சிறிய வயதில் கூட நான் இப்படிச் செய்ததில்லை.  அதிலும் “ட்ராஃபிக்” என்ற வார்த்தையே என் அகராதியில் பிடிக்காது.  இந்தியாவில் வாழ்ந்து கொண்டு அந்த வார்த்தையை உச்சரிக்கலாமா?  அதையெல்லாம் உத்தேசித்துத்தானே கணக்கே போட வேண்டும்?

மற்றபடி, நீங்கள் கூட வந்தது அருமையான அனுபவம்.

பயணத்தின் போது நம்முடன் இருந்த திருப்பூர் பிரகாஷ், திருப்பூர் அலெக்ஸ், ஈரோட்டைச் சேர்ந்த ரமேஷ், ஸ்ரீதர், பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜி எல்லோருமே நாம் மிக அருமையான அனுபவத்தை அடையக் காரணமாக இருந்தவர்கள்.  இது பற்றியெல்லாம் விரிவாக எழுத வேண்டும்.

கோவையில் வந்து சேர்ந்து கொண்டார்கள் வாசகர் வட்ட நண்பர்கள் தயாநிதியும், ஈரோடு நவீனும்.  கோவையைச் சேர்ந்த பாஸ்கரோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. திடீரென்று முத்து ராஜன் என்ற நண்பர் வந்து சேர்ந்து கொண்டார்.

ஈரோடு ஆடிட்டர் ரமேஷிடம் சொன்னேன், உங்களைப் போன்ற புத்திசாலியை இதுவரை ஒரே ஒருத்தரைத்தான்  சந்தித்திருக்கிறேன் என்று.  அவர் வாசகர் வட்டத்திலும், இன்னும் பல இடங்களிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.  அப்புறம்தான் தெரிந்தது, ரமேஷின் குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே அதி புத்திசாலிகள் என்று.  ரமேஷின் புதல்வன் (ஒன்பதாம் வகுப்பு) London Trinity College of Music இல் பியானோ ஒன்பது நிலைகள் தேர்வு செய்திருக்கிறான் என்று.  (சிறுவர்களை அவர் இவர் என்று சினிமா நடிகர்களைப் போல் அழைக்கும் பழக்கம் எனக்கு இல்லை; மன்னிக்கவும்).  இன்னொரு அட்டகாசம், ரமேஷின் மகள் – ஐந்தாம் வகுப்பு – மாநில அளவில் செஸ் சேம்பியனாம்.

சே, நான் எல்லாம் ஒன்பதாம் வகுப்பில் கர… சரி வேண்டாம்… நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே இப்போது.

முந்தா நாள் எனக்கு ஒரு தெரியாத எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.  முந்தாநாள் என்னால் போனில் பேச முடியாத அளவுக்கு வேலை.  நேற்றும் பலமுறை வந்ததால் எடுத்தேன்.  ஒரு இனிமையான பெண் குரல். நான் தான் வித்யா. அமெரிக்கா. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உங்களோடு நீண்ட நேரம் பேசி இருக்கிறேன்.

எனக்குப் பொதுவாக பெண்களின் பெயர்களும் அவர்கள் தொடர்பான விஷயங்களும் நன்றாக, அபாரமாக ஞாபகம் இருக்கும்.  என்றாலும் வித்யாவை மறந்து விட்டது.  பிறகு அவர் சொன்னார்.  Lydia Davis என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரைப் பற்றிக் குறிப்பிட்டேனே என்றார்.  புரிந்து விட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வித்யா சொன்னார்.  ”ராஸ லீலாவைப் படித்து விட்டேன்.  இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் புக்கர் பரிசு நிச்சயம்.”  அப்போதெல்லாம் எனக்கு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பார் என்ற துளி நம்பிக்கை கூட கிடையாது என்பதால் அந்தப் பேச்சை அதோடு வெட்டி விட்டு வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  வித்யா உலக இலக்கியங்களை நன்கு அறிந்தவர் என்று அவர் பேச்சிலிருந்து எளிதில் புரிந்தது. பிறகு, ஸீரோ டிகிரியை எழுதியது ஒரு பெண் தான் என்றே அமெரிக்க வாசகர்கள் நினைத்து விடுகிறார்கள் என்றார்.  எனக்கும் அப்படியே கடிதங்கள் அங்கிருந்து வருவதுண்டு.  கேத்தி ஆக்கர் (Kathy Acker) பற்றிய பேச்சு வந்தது.  அப்போது Lydia Davis-இன் எழுத்துக்கும் என்னுடைய எழுத்துக்கும் ஒற்றுமை இருப்பதாக வித்யா சொன்னார்.  நான் லிடியாவைப் படித்திருக்கவில்லை என்பதால் அது பற்றி என்னால் கருத்து எதுவும் சொல்ல முடியவில்லை.

முந்தா நாள் Lydia Davis-க்கு Man Booker International Prize கிடைத்திருக்கிறது.  (இதற்கு யூ.ஆர். அனந்தமூர்த்தியின் பெயரும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது) இந்தத் தகவலும் வித்யா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.  நான் கடந்த ஒரு மாத காலமாக ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தேன்.

வித்யா ரொம்ப சந்தோஷமாகவும் ரொம்ப விசனமாகவும் இருந்தார்.  அவர் குறிப்பிட்ட Lydia Davis-க்கு புக்கர் பரிசு.  சந்தோஷம்.  ராஸ லீலாவை ஏன் இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காமல் இருக்கிறீர்கள்?  விசனம்.  நான் என்ன செய்யட்டும்?  எனக்கும் பதற்றமாகவே இருக்கிறது.  இப்போதுதான் ராஸ லீலா மொழிபெயர்ப்புப் பணியே ஆரம்பித்துள்ளது.

எக்ஸைலின் தமிழ் மூலத்தில் ஒரு லட்சம் வார்த்தைகள் இருக்கலாம்.  இப்போது ஆங்கிலத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வார்த்தைகள் ஆகி விட்டது.  கிட்டத்தட்ட முக்கால் வாசி நாவலை மேலும் எழுதிச் சேர்த்திருக்கிறேன்.  ராஸ லீலாவை விடவும் இப்போது வீர்யமாக மாறி விட்டது எக்ஸைல்.  இதற்காக நான் தருண் தேஜ்பாலுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.  அவருடைய ஆல்கெமியைப் படித்த பிறகுதான் எக்ஸைலில் இதையிதையெல்லாம் சேர்க்கலாமே என்ற யோசனையும் திட்டமும் கிடைத்தது.  என் எழுத்து வாழ்வில் என் எழுத்து முறையையே மாற்றி அமைத்த முதல் புத்தகம் தருண் தேஜ்பாலின் The Alchemy of Desire.

எனவே, ராம், என் புத்தகங்களிலிருந்து சில பகுதிகளை எடுத்து சாரு ஆன்லைனில் வெளியிட்டு… இன்னமும் நான் என் மொபைலுக்கு டாப் அப் பண்ணச் சொல்லி வாசகர் வட்டத்தில் எழுதி… வேண்டாம் ராம்.  கண்ணில்லாதவர்களின் தேசத்தில் ஓவியம் தீட்டியது போதும்…

ஒரே ஒரு இலக்கோடு சென்று கொண்டிருக்கிறேன்.  வெல்வேன்.

சாரு

 

 

 

 

Comments are closed.