உங்களுக்கு என் பிறந்த நாள் பரிசு

மழை புயல் எப்படி இருந்தாலும் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு நடைப் பயிற்சிக்குச் சென்று விடும் நான் கடந்த இரண்டு தினங்களாகப் போகவில்லை.  என் உடல்நலத்தைப் பேணும் சித்த மருத்துவர் எனக்குக் கடவுளைப் போன்றவர்.  அவர் தொலைபேசியில் அழைத்த போது எடுக்கவில்லை.  என்னைப் பற்றி நன்கு அறிந்த அவர் வேறொரு தொலைபேசியிலிருந்து அழைத்தார்.  அடுத்த வாரம் பேசுகிறேன், மன்னியுங்கள் என்று சொல்லி வைத்து விட்டேன்.  காரணம், ஸீரோ டிகிரியைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  என்ன ஆச்சரியம் என்றால், 20 ஆண்டுகளுக்கு முன் நான் அந்த நாவலை எந்த மனநிலையில் எழுதினேனோ அதே மனநிலைக்குப் போய் விட்டேன்.  ஒருவித பித்தநிலை.   24 மணி நேரமும் இசையாலும் மதுவாலும் வாழ்ந்த கால கட்டம் அது.  இப்போது மது இல்லை.  என் மனமும் தேகமும் ஆன்மாவும் எல்லாமும் இப்போது மீண்டும் இசையால் நிறைந்திருக்கும் அற்புதக் கணம் இது.

Wim Mertens இன் தீவிர ரசிகன் நான்.  மெர்ட்டன்ஸ் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர். இதுவரை 50 ஆல்பம் வெளியிட்டிருக்கும் இவரது இசை நிகழ்வு ஒன்றை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று.  அடுத்த ஆண்டு பெல்ஜியத்தில் இவரது நிகழ்ச்சி நடந்தால் நாம் ஒன்றாகப் போகலாமா இளங்கோ? எனது அடுத்த ஆண்டுக்கான பயணத் திட்டத்தில் பெல்ஜியமும் உண்டு.

விம் மெர்ட்டன்ஸின் Struggle for Pleasure என்ற அற்புதத்தை உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் பரிசாக அளிப்பதில் சந்தோஷம் அடைகிறேன்.  நாளை காலையில் பாபா கோவிலுக்குச் சென்று விட்டு மஹாபலிபுரம் கிளம்பி விடுவேன்; நேரம் இருக்காது என்பதால் இப்போதே உங்களுக்கு இந்தப் பரிசைக் கொடுத்து விடுகிறேன்.  இந்த இசையைக் கேட்டு உங்கள் கண்கள் கலங்கினால் உங்களுக்கு இறைவனோடு பேசும் மொழி கை வந்து விட்டது என்று பொருள்.

Comments are closed.