ஸ்ரீவில்லிப்புத்தூர் (1)

சாரு ஆன்லைனில் எழுதுவதற்காக நிறைய விஷயங்கள் காத்துக் கிடக்கின்றன.  ஆனால் நான் வேறொரு முக்கியமான வேலையில் இருக்கிறேன்.  தேகம் நாவல் ஆங்கிலத்தில் தயாராகி விட்டது.  Corpus. ஸாம், டாக்டர் ராமானுஜம் இருவரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  எடிட் செய்தவர் காயத்ரி.  பிரசுரத்துக்குப் போகும் முன் நான் அதைச் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  மொழிபெயர்ப்பு பிரமாதமாக உள்ளது.  மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை என்பதுதான் முக்கியம்.  இதை சாத்தியமாக்கிய இந்த மூவருக்கும் என் நன்றி.

இந்த நிலையில் புத்தக விழாவின் போது உங்களுடைய புதிய புத்தகங்கள் எதுவும் இல்லையா என்று நண்பர்கள் பலர் கேட்டனர்.  புத்தக விழா வருகிறது என்பதற்காக புத்தகம் எழுத முடியுமா?  உலகில் அப்படி யாரும் புத்தகம் எழுதுவதாக என் அறிவிற்குத் தெரியவில்லை.  தமிழ் எப்போதுமே ஒரு விதிவிலக்கு.  நம்பர் ஒன் எழுத்தாளரின் புத்தகமே இங்கே புத்தக விழாவில் 500 பிரதிதான் விற்கும்.  அதற்காகப் போய் நான் ஒரு புதிய நாவலை எழுத வேண்டுமா?  எக்ஸைல் இந்த ஒரு ஆண்டில் 3000 பிரதிகள் விற்றிருக்கும் என்று யூகிக்கிறேன்.  இதுவே ஒரு எழுத்தாளனுக்கு சாதனை.  ஆனால் என்னைப் பொறுத்தவரை இதை வேதனை என்றுதான் எடுத்துக் கொள்வேன்.  எட்டு கோடி பேர் வாழும் ஒரு தேசத்தில் ஒரு நாவல் 3000 பிரதி விற்கிறது!  துருக்கியில் ஓரான் பாமுக்கின் நாவல் ஒரு லட்சம் பிரதி விற்பனை ஆகிறது.  அவர் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பே இந்த நிலை.  சீனர்கள் கன்னாபின்னா என்று படிக்கிறார்கள்.  நாவல்கள் அங்கே கோடிகளில் விற்பனை ஆகிறது.

தமிழர்கள் புத்தகம் என்பதை ஹராம் (பாவம்) என்று கருதுகிறார்கள். அதனால்தான் அவர்கள் புத்தகம் வாங்குவதை வெறுக்கிறார்கள்.  புத்தகம் எழுதுபவர்களை வெறுக்கிறார்கள்.  புத்தகம் படிப்பவர்களை வெறுக்கிறார்கள். வீட்டில் நம் குழந்தைகள் பாடப் புத்தகத்தைத் தவிர வேறு புத்தகங்களைத் தொட்டு விட முடியுமா என்ன?

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.  என்னுடைய சிறுகதைத் தொகுதி (Morgue Keeper) Amazon மூலம் Kindle வடிவத்தில் பிரசுரமாகி இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.  அந்த வேலை எங்களுக்கு முழுமையாக மூன்று மாதங்கள் ஆயின.  ஆறு பேர் அந்த வேலையில் ஈடுபட்டோம்.  170 ரூபாய்தான் விலை.  என் தோழி ஒருவர் பேராசிரியராக இருக்கிறார்.  அவர் தனது சகாவிடம் இந்தப் புத்தகத்தை வாங்கும்படி சொல்லியிருக்கிறார்.  சகா புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால்தான் சொன்னது.  இல்லையெனில் சொல்லியிருக்க மாட்டார்.  சகா பதிலுக்கு “உன்னிடம் pdf காப்பி இருந்தால் எனக்கு அனுப்பி வை” என்றாராம்.  அடிக்கடி மதிய உணவுக்கு இவர்கள் உணவு விடுதிகளுக்குச் செல்வார்கள்.  ஆயிரக் கணக்கில் செலவாகும்.  தின்று விட்டு மலமாகப் போகும் விஷயங்களுக்கு ஆயிரக் கணக்கில் செலவழிக்கலாம். ஆனால் ஞானமும் அறிவும் எங்களுக்கு ஓசியிலேயே கிடைக்க வேண்டும் என்று கருதும் சமூகம் இது.  இப்படிப்பட்ட சமூகத்துக்கு வருஷா வருஷம் நாவல் எழுத வேண்டுமா என்ன?

வாசகர்களுக்கு kindle பற்றித் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் தங்கள் தமிழ்ச் சமூகத்தின் நூற்றாண்டுகளின் மௌனத்தைக் கடைப்பிடிக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.  Kindle இல் ஒரு தமிழ் எழுத்தாளனின் சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளிவருவது இதுவே முதல் முறை.  Kindle என்பது வாசிப்பு என்ற செயல்பாட்டில் கற்பனையே செய்ய முடியாத அளவுக்குப் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.  பதிப்பகத்திடம் கேட்டேன், உங்கள் புத்தகத்தைக் கேட்டாலே அடிக்க வருகிறார்கள் என்று எழுத்தாளனிடம் சொல்ல வேண்டிய அவசியம் இதில் இல்லை.  புத்தகம் தீர்ந்து விட்டது; அச்சில் இருக்கிறது என்று பதிப்பாளரும் வாசகரிடம் சொல்ல வேண்டிய அவசியம் இதில் இல்லை.  தபாலில் வாங்க வேண்டிய சிரமம் இல்லை.  ஆஃப்ரிக்காவில் இருந்தாலும் அமெரிக்காவில் இருந்தாலும் விரலை சிறிது அசைத்தால் புத்தகம் உங்கள் மொபைல் போனிலும் கணினியிலும் பக்கம் பக்கமாக விரியும். புத்தக விற்பனையில் உள்ள பாரம்பரியம் அத்தனையையும் அடித்து நொறுக்கி விட்டது kindle.  கார்டில் பணம் செலுத்தினால் அடுத்த வினாடி நம் கையில் புத்தகம்.  இது பற்றித் தமிழ் வாசகர்கள் யாரும் அக்கறையே கொள்ளவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை.  ஒரு எழுத்தாளனைப் பார்த்து “உங்களை விஜய் டிவில பார்த்து இருக்கேனே!” என்று பல்லைக் காட்டும் சமூகத்தில் இதற்கெல்லாம் ஆச்சரியப்பட முடியுமா?

இதுவரை morgue keeper kindle edition பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லையெனில் அந்த லிங்கை மீண்டும் தருகிறேன்.

http://www.amazon.com/Morgue-Keeper-ebook/dp/B00AH4Y0GO

வழக்கம் போல் இன்று காலை நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்ற போது ராகவன் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த பால்கோவாவைக் கொடுத்தார்.

(தொடரும்)

 

 

 

 

 

 

Comments are closed.