ஸ்ரீவில்லிப்புத்தூர் (2)

பால்கோவா என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம்.  ஆனால் இப்போது அவ்வளவாக இனிப்புப் பண்டங்களின் மீது ஆர்வம் போய் விட்டது, ஒரே ஒரு இனிப்பைத் தவிர.  மற்ற இடங்களில் பால்கோவாவை திரட்டுப் பால் என்கிறார்கள்.  எங்கள் ஊரில் மாடு கன்று ஈய்ந்து முதல் இரண்டு மூன்று தினங்களில் கறக்கும் பாலில் செய்வது மட்டுமே திரட்டுப் பால்.  மற்றதெல்லாம் பால்கோவா தான்.  அந்தத் திரட்டுப் பாலை அமிர்தம் என்றே சொல்லலாம்.  ஈடு இணை இல்லாத ஒரு பண்டம் அது.

கிழக்கு பத்ரியிடம் மட்டுமே சொன்ன, வேறு யாரிடமும் சொல்லாத ஒரு சேதியை இப்போது உங்களுக்கு சொல்லப் போகிறேன்.  இந்திரா பார்த்தசாரதி ஒருமுறை என்னிடம் சொன்னார்; செக்ஸ் இல்லாமல் ஒரு நாவல் எழுதுங்களேன் என்று.  சிரித்துக் கொண்டே சரி என்றேனே தவிர செக்ஸ் இல்லாமல் வாழ்க்கை இல்லையே என்றுதான் நினைத்துக் கொண்டேன்.  சில பேருக்கு பதவி, சிலருக்குப் பணம், சிலருக்கு அடுத்தவரைத் துன்புறுத்துதல், சிலருக்கு வயிறு, சிலருக்கு அடிமைத்தனம், சிலருக்கு ஆன்மீகம் என்று வாழ்க்கையாக இருக்கும் போது ஒருத்தனுக்குக் காமமே வாழ்க்கையாக இருக்கக் கூடாதா என்ன என்றும் ஓடியது நினைவு.  காமத்தைக் கடக்கலாம்.  சாத்தியம்தான்.  ஆனால் வாழ்ந்து பார்த்தால்தானே கடக்க முடியும்?  காமத்தை அடக்கி விட்டுக் கடந்து விட்டதாகக் கற்பிதம் கொள்ள முடியுமா, சொல்லுங்கள்?  ஆனால் இதை ஒரு சவாலாக ஏற்றால் என்ன என்றும் யோசனை ஓடிக் கொண்டிருந்தது.  இந்த நிலையில்தான் பெருமாள் (என் கதாபாத்திரம் அல்ல; நிஜமான பெருமாள்) என் கனவில் வந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற தலைப்பைச் சொல்லி, ஒரு ப்ளூப்ரிண்டையும் போட்டுக் கொடுத்தார்.  (மதுரை ஆதீனத்தின் கனவில் சிவபெருமான் வரும் போது என் கனவில் பெருமாள் வரக் கூடாதா?)

அந்தப்படியாக இப்போது நான் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எல்லாம் கதாபாத்திரமாக வருவார்.  25 ஆண்டுகளாக நான் வாசித்து வரும் ந்ருஸிம்ஹப்ரியா பத்திரிகை இதற்கு மிக உதவிகரமாக உள்ளது.  ஸ்ரீவைஷ்ணவத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நீங்கள் இந்த நாவலில் பார்க்கலாம்.  நாவலில் செக்ஸே இல்லை.  முடியும் வரை பெருமாளின் (கடவுள் அல்ல; கதாபாத்திரம்) வாழ்க்கை இப்படியே போனால் பரவாயில்லை.  (கடவுள்) பெருமாள் (கதாபாத்திரம்) பெருமாளின் வாழ்வில் ஏதாவது ஏடாகூடம் பண்ணினால் அதற்கு நான் ஜவாப்தாரி அல்ல.

நாவல் எப்போது முடியும் என்று எனக்குத் தெரியாது.  எந்தத் திட்டமும் இல்லை.  ஆனால் இடையில் ஒரு ஜாலியான நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஆன்மீகக் குறுங்கதைகள்.  அது இணையத்திலேயே வரும்…

 

 

 

Comments are closed.