நாளைக்கு என்ன விசேஷம்?

இன்று காலை மனுஷ்ய புத்திரன் ஃபோன் செய்தார்.  பொதுவாக அவர் காலை வணக்கம் சொல்வதற்கோ குசலம் விசாரிப்பதற்கோ ஃபோன் செய்யக் கூடியவர் அல்ல.  குறைந்த பட்சம் ஆண்களுக்கு.  கொஞ்சம் ஆச்சரியத்துடன் என்ன விசேஷம் என்றேன்.  சிறிது நேரம் என்னுடைய கவிதை வாசிப்பு பற்றிப் பேசி விட்டு விஷயத்துக்கு வந்தார்.

நாளை வீட்டுப் பக்கம் வருகிறீர்களா?

உங்கள் வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்.  நாளை என்ன, இதோ இப்போதே வருகிறேன்.

இப்போது வாருங்கள்.  ஆனால் நாளை மாலை எட்டு மணிக்கு வாருங்கள்.

நாளைக்கு என்ன விசேஷம்? உங்கள் பிறந்த நாளா?

இந்தப் பேச்செல்லாம் பெண்களிடம் வைத்துக் கொள்ளுங்கள் சாரு.  நான் ஆண்.

உண்மையிலேயே எனக்கு விஷயம் தெரியாது ஹமீது.  சொல்லுங்கள்.  அம்முவுக்குப் பிறந்த நாளா?

அட, என்னங்க நீங்க?  நியூ இயர்ங்க… ஒயினாவது சாப்பிடுவிங்கள்ள?

ஓ, எஸ்ராவும் ஜெயமோகனும் சாப்பிட்டா நானும் சாப்பிட்றேன்.

உடனே பேச்சு மாறி விட்டது.

நாளை ஹமீதையும் அம்முவையும் பார்க்கப் போக வேண்டும்.  அம்முவுக்கு பிஸ்கட் பிடிக்குமா என்று கேட்க வேண்டும்.  பிஸ்கட் என்றால் அஞ்சு ரூவா பிரிட்டானியா மாரி அல்ல (பார்க்கவும்: ராஸ லீலா).  நான் சொல்லும் பிஸ்கட், சிட்டி செண்டர் தரைத் தளத்தில் உடனுக்குடன் செய்து கொடுக்கும் ஐரோப்பிய பிஸ்கட்.  ஒரு டப்பா ஐநூறு ரூபாய்.  எனக்கும் அந்த பிஸ்கட் ரொம்பப் பிடிக்கும்.

ஆனால் மாலை ஆறு மணிக்கு மேல் எழுத்தாளர்கள் கூடும் இடங்களுக்குச் சென்றால் பாடி கார்டோடு செல்வது என் வழக்கம்.  மனுஷ்ய புத்திரன் பற்றிக் கவலை இல்லை.  அன்பின் மொத்த வடிவம் அவர்.  அவர் வீடும் என் வீடு மாதிரி.  என் வீட்டை விடவும் நான் சௌஜன்யமாக உணரும் வீடு அது.  ஆனால் அவரைப் பார்க்க வரும் மற்ற எழுத்தாளர்கள் பற்றி அப்படி நினைக்க முடியாது.  பழைய வரலாறும் அப்படி இருந்தது இல்லை.  ஷாலின் மரியா லாரன்ஸும் வரப் போவதாகச் சொன்னதால் எனக்கு நீங்கள் பாதுகாப்பு தர முடியுமா, ஒருமுறை லீனா மணிமேகலை விசாரணை விழாவில் எனக்குப் பாதுகாப்பு கொடுத்தார் என்று கேட்டேன்.  நான் தினந்தோறும் கிக் பாக்ஸிங் பயிற்சி செய்பவளாக்கும், கவலைப்படாமல் வாருங்கள் என்றார்.

அப்பாடா, இனி கவலை இல்லை.  பெண்கள் பாதுகாப்புக்கு இருந்தால் பேய் பூதம் கூட அண்டாது. எழுத்தாளர்கள் எம்மாத்திரம்?