you are the reason i could fly…

நான் எப்போதுமே என்னைத் துறவி என்றே சொல்லி வந்திருக்கிறேன்.  அப்படியென்றால் எதன் மீதும் பற்றற்றவன்.  பற்றுடையவன் போல் தெரியும்.  ஆனால் பற்றற்றவன்.  ஆனால் என் தொழிலே எனக்கு தெய்வம்.  நேற்று அதிகாலை மூன்று மணி வரை மனுஷ்ய புத்திரன் வீட்டில் இருந்தேன்.  அந்தக் கொண்டாட்டத்தை செவ்வனே முறைப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.  இன்று முழுவதும் எழுதிக் கொண்டிருந்ததால் எனக்குப் புத்தாண்டு வாழ்த்து கூறிய யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை.  ஃபோனையே எடுக்க முடியவில்லை.  மூன்று கட்டுரைகள்.  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.

நேற்றைய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் காரணமான மனுஷ்ய புத்திரன், செல்வி, சரவணன் சந்திரன், பிரபு காளிதாஸ் போன்ற நண்பர்களுக்கு விசேஷ நன்றி.  அம்மு செல்லத்துக்கும் நன்றி.  கவின் மலரின் குரல் அற்புதமாக இருந்தது.  தமிழ் சினிமா பாடல்கள் என் ரசனைக்கு வெளியே இருப்பதால் என்னால் அவருடைய உலகத்தின் உள்ளே போக முடியவில்லை.  அடுத்த சந்திப்பில் அவர் எனக்காக பின்வரும் பாடலைப் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  அற்புதமான குரல்.  அவர் ஏன் சினிமாவில் பாடவில்லை?  உணர்ச்சி மிகுதியில் அடிக்கடி அவருக்கு பாத பூஜை செய்து கொண்டிருந்தான் என் கவி நண்பன் ஒருவன்.  இசை அப்படிப்பட்டதுதான்.  மார்க் அந்தோனியின் இந்தப் பாடலை கவின்  பாடியிருந்தால் நானும் அவனைப் போல்தான் ஆகியிருப்பேன்.

சரவணன் சந்திரன் எடுத்து வந்திருந்த வஞ்சிரம் வறுவல் பிரமாதமாக இருந்தது.  அதிகம் சாப்பிட்டது நான் தான்.

முழுக்க முழுக்க நான் லிச்சி ஜூஸையே குடித்துக் கொண்டிருந்த தருணங்களில் என்னையே நான் மிக வெறுத்தேன்.  என்னை இந்த நிலைக்கு (லிச்சி ஜூஸ்) ஆளாக்கியவர்கள் எஸ்.ரா., ஜெயமோகன் ஆகியோர்தான்.  நான் காரணம் அல்ல.

மனம் பூராவும் மறுநாள் எழுத வேண்டிய மூன்று கட்டுரைகளையே நினைத்துக் கொண்டிருந்தது.  அராத்துவின் ஒரு மணி நேர சொற்பொழிவை நானும் சில நண்பர்களும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம்.  ஷாலின் மரியா லாரன்ஸ் அராத்துவையும் கணேஷ் அன்புவையும் அண்ணா என்றே அழைத்துக் கொண்டிருந்தது அற்புதம்.  இருவரும் அதனால் ரொம்ப டென்ஷனானதால் அராத்துவை மாமா என்றும் கணேஷை மச்சான் என்றும் அழைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.  இல்லாவிட்டால் தற்கொலை லெவலுக்குப் போயிருக்கும்.  கணேஷ் உணர்ச்சிவசப்பட்ட மனிதர்.

ஷாலினோடு பேசிய போது நான் பெண்ணாக இருந்தால் எப்படி இருந்திருப்பேனோ அப்படியே அவர் இருந்ததாக உணர்ந்தேன்.  எழுத்து தொடர்பாக அவருக்கு நான் ஒரு ஆலோசனை சொல்லியிருக்கிறேன்.  நேற்று மறுத்தவர் இன்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.  பார்ப்போம்.

தமிழச்சி வந்ததும் எல்லா விளக்குகளும் மங்கி விட்டன.  ஒளி வெள்ளம் வந்தால் இந்த அற்ப விளக்குகள் என்ன ஆகும்?

நேற்று இரவை என்னால் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது.