அராத்துவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா – 7.1.17

நன்றி: மின்னம்பலம்

http://www.minnambalam.com/k/1483621181
araathu

வடிவமைப்பு: கார்த்திகேயன் மேடி

***

தற்கொலை குறுங்கதைகள் என்ற பெயரல்ல, அராத்து என்ற பெயர் தான் அந்த புத்தகத்தை அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. அராத்துவின், தற்கொலை குறுங்கதைகள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கௌதம் மேனனும் கூட அதையே தான் பேசினார். அவரது டிரேட்மார்க் பேச்சாக, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கலந்து பேசியபோது அவர் சொன்னது He is interesting என்பது தான். அராத்து என்ற கேரக்டர் சமூகவலைதளங்களில் உருவானபோதும் இப்படி ஒரு கியூரியாசிட்டி தான் மற்றவர்கள் மத்தியில் உருவானது. அப்படி என்னதான் இருக்கிறதென தேடிப்போனவர்களை அராத்துவின் எழுத்துக்கள் புருவம் உயர்த்த வைத்தன.

பொதுவாக சமூகவலைதளங்களில் பெண் சுதந்திரம், பெண்ணியம் என்று பேசும் பல ஆண்களைப் பார்க்கலாம். ஆனால், அவர்கள் சுதந்திரத்துடன் எழுதுகிறார்களா என்ற கேள்வியை அவர்களிடத்தில் உருவாக்கியது அராத்துவின் எழுத்துக்கள். கண்ணில் பார்க்கும் பெண்மையைத் தாண்டி பெண்களைப்பற்றிப் பேசவோ, எழுதவோ தயங்கும் சமூகவலைதளங்களில் அராத்து என்ற கேரக்டரின் எழுத்துக்கள் தர்க்கத்தை உருவாக்கின. அப்போது எழுதப்பட்ட சில சிம்பிள் கவிதைகளின் தாக்கம் தர்க்கமாகவே, சீரியஸான புத்தகமாக கொண்டுவரப்பட்டு அராத்து என்ற கேரக்டர் உருவம்பெற்று எழுத்துலகில் உலவத் தொடங்கினார். இதோ இரண்டு வருடங்கள் கழித்து ஆறு புத்தகங்களுடன் இந்த வருடத்தை தொடங்குகிறார்.

பிரேக் அப் குறுங்கதைகள்

சயனைட் குறுங்கதைகள்

ஆழி டைம்ஸ்

காட்டுப்பள்ளி

உயிர் மெய்

இங்கு பஞ்சர் போடப்படும்

இவை அராத்துவின் புத்தகங்களின் லிஸ்ட். பிரேக் அப் குறுங்கதைகள், சயனைட் குறுங்கதைகள், உயிர் மெய் என மாடர்ன் காதல், கடலை என டாப் கீரில் செல்லும் அதே சமயத்தில் குழந்தைகளுக்கான ஆழி டைம்ஸ் ஆகிய புத்தகங்களுடன் அராத்து வித்தியாசமாக வந்திருப்பதைப் போலவே, ஆறு புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்ச்சியும் வித்தியாசமாகவே நடைபெறுகிறது. ஜெயமோகன், சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்ற தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளர்கள் அமர்ந்திருக்கப்போகும் அந்த மேடை இதுவரை நடைபெற்ற இலக்கிய விழாக்களைப் போல இருக்காது என அராத்து உறுதியளித்திருக்கிறார். உரையாடல், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் என இலக்கியம் மட்டுமல்லாமல் எழுத்தாளர்களின் சுவாரஸ்யமான இன்னொரு முகத்தை வெளிக்கொணரும் நிகழ்வாக இது இருக்குமென்பது அராத்துவின் உறுதிமொழி. வழக்கத்துக்கு மாறாக எழுதிய புத்தகங்களும், பெயரும் தான் அராத்துவை இதுவரை வளர்த்தெடுத்தவை என்பதால் சொன்னதை செய்துமுடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. எனவே சமரசத்துக்கு இடமில்லாமல் இந்நிகழ்ச்சியை நடத்திமுடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் செல்வோம். மகிழ்வோம்.