நரேந்திர மோடி

இதை நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதைப் படிக்கும் உங்களுக்கு சிறிது அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் என்னைப் பொறுத்தவரை, இன்று இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை ஊழல்தான்.  மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா மத்திய காலத்தில் ஒரு கொடுங்கோல் மன்னனின் ஆட்சியில் இருப்பது போலவே இருக்கிறது.  சரியான சாலைகள் இல்லை; தண்ணீர் இல்லை; மின்சாரம் இல்லை; கல்வி இல்லை; மருத்துவம் இல்லை.  அரசியல்வாதிகள் கோடிக் கணக்கில் ஊழல் செய்வதால் அந்த மனோபாவம் கீழ்மட்டம் வரை ஓடி நிலைகுத்தி விட்டது. 30 ரூபாய் தூரத்துக்கு ஒரு ஆட்டோக்காரர் கூசாமல் 100 ரூ. கேட்கிறார் என்றால் அரசியல்வாதியின் கோடிக்கணக்கான ரூபாய் ஊழலே காரணம்.  இதில் அரசு அதிகாரிகளின் ஊழல் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.  அது அரசியல்வாதிகளின் ஊழலை விடப் பெரிது.  இப்படி இந்திய தேசமே ஊழலால் புரையோடிப் போய் இருக்கிறது.  இதற்குக் காரணம், இத்தனை ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிதான்.

இதற்கு மாற்றுக் கட்சியாக இருப்பது பிஜேபி மட்டும்தான்.  ஆனால் அந்தக் கட்சியிலோ கடுமையான உட்கட்சிப் பூசல்.  இந்தப் பூசலால்தான் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.  இப்படிப்பட்ட இந்தியாவின் இருண்ட அரசியல் சூழலில் இப்போது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிபவர் நரேந்திர மோடி தான்.  குஜராத் படுகொலைகள் நடக்கக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருக்கிறது.  குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் எந்தத் தவறும் செய்யாத அப்பாவி மக்கள் 2000 பேர் கொல்லப்பட்டார்கள்.  அதை ஒரு முதலமைச்சர் என்ற முறையில் மோடி தடுத்திருக்க வேண்டும்.  அதுதான் அவருடைய கடமை.  அந்தக் கடமையிலிருந்து அவர் தவறி விட்டார்.

ஆனால், இதே போன்ற குற்றச்சாட்டு காங்கிரஸ்காரர்கள் மீதும் இருக்கிறதே?  இந்திரா காந்தி படுகொலை சம்பவத்தின் போது 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்களே, யார் காரணம்?  காரணமாக இருந்தவர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லையே?  இப்படி ஒரு இனப்படுகொலைக்குக் காரணமான ஒரு கட்சி இந்தியாவையும் அழிவை நோக்கியே செலுத்திக் கொண்டிருக்கிறதே, இதற்கு ஒரு மாற்று வேண்டாமா?  இப்படி யோசிக்கும் போதுதான் நரேந்திர மோடியின் ஆட்சியைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.  குஜராத்தைப் பார்த்தால் இந்தியாவைப் போலவே தெரியவில்லை.  மின்வெட்டு என்றால் என்ன என்று கேட்கிறார்கள் குஜராத்திகள்.  ஆனால் இந்தியா முழுவதும் மின்வெட்டுப் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.  கர்னாடகாவில் கூட கிராமப்புறங்களில் பத்து மணி நேர மின்வெட்டு இருந்து வருகிறது.  மின்வெட்டே இல்லாததோடு உபரி மின்சாரம் வேறு கைவசம் என்பதால் குஜராத்தில் தொழில்வளம் பெருகிக் கொண்டிருக்கிறது.  நீர்த் தட்டுப்படும் அறவே இல்லை.

இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது என் நண்பர் குறிப்பிட்டார், ஹிட்லரின் ஆட்சியில் கூடத்தான் நிர்வாகம் ஒழுங்காக இருந்தது என்று.  ஹிட்லரின் ஆட்சி சர்வாதிகாரம்.  ஆனால் மக்கள் நினைத்தால் மோடியை தேர்தலில் வீட்டுக்கு அனுப்பி விட முடியும்.  ஆனால் தொடர்ந்து குஜராத் மக்கள் மோடியையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?  அந்த மக்கள் மோடியின் ஆட்சியையே விரும்புகிறார்கள்.  மோடி ஆட்சிக்கு வந்த போதுதான் குஜராத்தில் பூகம்பம் வந்தது.  அதைத் தொடர்ந்து மதக் கலவரம்.  மோடியைத் தவிர வேறு யாரேனும் அப்போது ஆட்சியில் இருந்திருந்தால் குஜராத் இன்று இந்தியாவின் மிகப் பின் தங்கிய மாநிலமாக ஆகியிருக்கும்.  ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த இந்தப் பதினோரு ஆண்டுகளில் குஜராத் இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆகியிருப்பது மட்டும் அல்லாமல் வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போன்ற வசதி வாய்ப்புகளை அடைந்திருக்கிறது.

இந்த நிலையில் மிக மோசமான ஆட்சி, ஊழல், போலியான மதச்சார்பின்மை மற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் மதக் கலவரம் என்ற மூன்றின் அடையாளமாக இருக்கும் காங்கிரஸ் வேண்டுமா?  மதக் கலவரம் என்ற கரும்புள்ளியைத் துடைக்க விரும்பும் மோடி வேண்டுமா?  என் வாக்கு மோடிக்குத்தான்.   குஜராத்தில் மட்டும் அல்ல; இந்திய அரசியலிலேயே ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ வேண்டுமானால் பிஜேபி நரேந்திர மோடியைத்தான் பிரதமராக முன்னிறுத்த வேண்டும்.

எனக்கு ஒரே ஒரு கவலைதான்.  மோடி பிரதமர் ஆனால் இந்தியா முழுவதிலும் மது விலக்கை அமல் படுத்தி விடுவாரோ?  நண்பர் சொன்னார்; அப்படியெல்லாம் நடக்காது.  காந்தி பிறந்த மண் என்பதால்தான் குஜராத்தில் மது விலக்கு அமலில் இருக்கிறது.  மற்றபடி இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்தும் அளவுக்கு மோடி ஒன்றும் கெட்டவர் அல்ல.

இப்போதைக்கு இந்தியாவில் மோடியை விட்டால் வேறு வழியே இல்லை.  ஆனால் மோடிக்கு எதிரி காங்கிரஸ் அல்ல; பிஜேபி தான். அதுதான் கவலையாக இருக்கிறது.

 

 

 

 

Comments are closed.