வணக்கம் சாரு,
நலமா?
நீண்ட நாட்கள் கழித்து தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். அகநாழிகை புத்தக வெளியீட்டில் சந்தித்தது. ஞாநிக்கும் தங்களுக்கும் பூங்கொத்து தந்தது அடியேன்தான். நினைவு இருக்கிறதா?
சமீபத்தில் தங்களுடைய ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ கட்டுரைகளை படித்தேன். பழைய கண்ணதாசன் பாடல்களைக் கேட்டதொரு பரவசம். ’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ எவ்வளவு நேர்மையாக இருக்கிறது! எவ்வளவு அழகான போதை தரும் வரிகள்! முதல் வரி ஹேங்ஓவரிலேயே மிதக்கும்போது இரண்டாவது வரி இன்னும் போதை. இந்த பாடல் வரிகளை இப்படி வரிசைப்படுத்தலாம்.
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - முதல் ரவுண்டு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு -இரண்டாவது ரவுண்டு
இசை பாடலிலே என் உயிர்த் துடிப்பு – மூன்றாவது ரவுண்டு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! – நான்காவது ரவுண்டு
கவிஞன்டா…கவிஞன். நாலு ரவுண்டு முடித்தது போல பரவசம் வருகின்றது. கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பு எவ்வளவோ இருக்கிறது. சட்டென இந்தப் பாடல் வரியைத் தலைப்பாக வைக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது? கண்ணதாசனுக்கு அடுத்து குடியை கவித்துவமாக சொன்னது இரண்டு பேர். ஒன்று, மனுஷ்யபுத்திரன் (’கடைசிக்கோப்பை’). அடுத்து நீங்கள். அரசனைப் போல குடிப்பதாகச் சொல்லியிருந்தீர்கள்.
’நினைவின் புதர்ச் சரிவுகளிலிருந்து’ என்ற தங்களின் ஒரு சிறுகதை கணையாழியில் வந்தது. அதில் ராகவனுக்கு பலகாலமாய் ஒரு கனவு இருக்கும். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பார் ஒன்றில் அரையிருட்டில் டன்ஹில் சிகரெட் புகைத்தபடியே ஒரு பாட்டில் பீர் அருந்த வேண்டும். எனக்கும் அதுபோல் ஒரு கனவு. டன்ஹில்லுக்கு பதில் இந்த சினிமா கிளைமாக்ஸில காட்டுவார்களே… அதுபோல ஒரு பெண் நடனமாட குடித்தபடியே ரசிக்கவேண்டும். அட்லீஸ்ட் இந்த பெல்லி டான்ஸ் இருக்கே…
இங்கு ஒரு லிங்க் தந்துள்ளேன். நம் ஊர் டாஸ்மாக்கில் பல்லி டான்ஸ்தான் பார்க்கமுடியும்.
நன்றி
என்.விநாயக முருகன்
(http://nvmonline.blogspot.com)
(பி.கு)
இந்த இரண்டு சுட்டிகளை மறக்காமல் பார்க்கவும். எனது கனவு போலவே தங்களுக்கும் இருந்தால் அட்லீஸ்ட் வீட்டில் குடிக்கும்போது இவை உதவும்.
http://bedouinprincess.com/bio.php?c=40&w=2&r=Y
http://www.youtube.com/watch?v=YamDoDK71Ds
***
டியர் முருகன்,
நீங்கள் கொடுத்த பூங்கொத்தை என் வாழ்நாளில் மறக்க முடியுமா? அன்பின் வெளிப்பாடாக நீங்கள் கொடுத்த பூங்கொத்தை அந்த நபர் பொதுமேடையில் வைத்து அவமானப்படுத்த, அதை நான் விமர்சிக்க, இன்றளவும் குமுதத்தில் என்னை ‘இண்டெர்நெட் பிச்சைக்காரன்’ என்று திட்டிக் கொண்டிருப்பதை எப்படி மறப்பது? கவலைப்படாதீர்கள். நாம் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நரகத்தின் விதிமுறைகளுக்கு அனுசரித்துத்தான் போக வேண்டும்.
இந்த நாடு நரகம் அல்லாமல் வேறு என்ன? ஒருவருக்கு நீங்கள் பூங்கொத்து கொடுக்கிறீர்கள். அவர் அந்தப் பூங்கொத்தைக் கொடுத்ததற்காக உங்களைச் சாடி விட்டு அதை வேறொருவருக்குக் கொடுக்கிறார். நீங்கள் அன்பாக எனக்குக் கொடுக்கும் பொருளை வாங்கி உங்கள் கண் முன்பாகவே குப்பைத்தொட்டியில் வீசி எறியும் நாகரீகத்தையும், பண்பாட்டையும் நாம் இந்தியாவில் அன்றி வேறு எந்த தேசத்தில் காண முடியும்?
சமீபத்தில் நண்பர் பசுபதி எனக்கு போன் செய்தார். லண்டனில் வசிப்பவர். அப்போது நான் கொஞ்சம் அவசர வேலையில் இருந்தேன். அப்புறம் கூப்பிடுங்கள் என்றேன். ”ஓ, அப்படியா? நான் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறேன்; மூன்று நாள் வேலையாக வந்திருக்கிறேன். அவசரமாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” என்றார். அவர் அப்படிச் சொன்னபிறகு நான் என் வேலையை ஒத்தி வைத்து விட்டேன். விமான நிலையம் என்றதும் எனக்கும் பதற்றம் கூடி விட்டது. இந்தியா நரகம் என்றால் விமான நிலையம் நரகத்தின் நுழைவாயில். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு நரக வாழ்வின் அறிமுகப் படலம் நடக்கும் இடம்.
ஆச்சரியமாக இருக்கிறது; என் எழுத்தை ஆழ்ந்து படிக்கும் பசுபதி போன்ற நண்பர்கள் இந்தியாவைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே புரியவில்லை. இந்தியாவிற்குள் நுழைந்ததும் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டையும், வீசாவையும் பரிசோதித்து அனுப்பியவுடன் பேசாமல் நடையைக் கட்டியிருக்க வேண்டாமா? அவர் அப்படிச் செய்யவில்லை. மீனம்பாக்கம் விமான நிலையத்தை ஹீத்ரோ விமான நிலையம் என்று நினைத்து விட்டார் போலும். பக்கத்தில் வளைகுடா நாடுகளில் கூலி வேலை செய்யும் தமிழர்கள் குடியுரிமைப் பிரிவில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யத் தெரியாமல் திணறுவதைப் பார்த்து ‘கொடுங்கள், நான் பூர்த்தி செய்து தருகிறேன்’ என்று சொல்லி, அந்தப் படிவங்களை தமிழில் பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். ஏனய்யா, தமிழ்நாட்டில் எவனாவது தமிழில் பூர்த்தி செய்து கொடுக்க முடியுமா? இது என்ன அறிவாலயமா? அல்லது, தாலுகா ஆபீசா? விமான நிலையம். அங்கே இருப்பவர்கள் ஒருத்தருக்குக் கூட தமிழ் தெரியாது. குடியுரிமைப் பிரிவில் இருப்பவர்கள் அனைவரும் மலையாளிகள். மற்றவர்கள் அனைவரும் வட இந்தியர்கள். ஒருத்தருக்கும் ஒரு வார்த்தை தமிழ் தெரியாது.
தமிழில் எழுதியதோடு நிறுத்தவில்லை; பசுபதி அந்தக் குடியுரிமை அதிகாரிகளிடம் விவாதம் வேறு செய்திருக்கிறார். மலேஷிய விமான நிலையங்களில் தமிழில் எழுதலாம்; சிங்கப்பூரில் தமிழில் எழுதலாம்; ஏன், தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கையில் தமிழில் எழுதலாம்; தமிழ்நாட்டில் தமிழில் எழுதக் கூடாதா?
இப்படியெல்லாம் ஷங்கரின் அந்நியன் பட வசனமெல்லாம் பேசினால் இங்கே இந்தியாவில் போதைப் பொருள் கடத்தியதாகச் சொல்லி உள்ளே தள்ளி விடுவார்கள். பத்து வருடங்களுக்கு வெளியே வர முடியாது. அதையேதான் குடியுரிமை அதிகாரிகளும் பசுபதியிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்போதே இங்கேயே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்காவிட்டால் ஜெயில்தான் என்று சொல்லியிருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். பசுபதியும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு ரத்தம் கொதிக்க என்னிடம் பேசினார். ஏதாவது செய்யுங்கள் சாரு; பத்திரிகையில் எழுதுங்கள் சாரு… என்னது, பத்திரிகையில் எழுதுவதா? அப்படி எழுதினால் பசுபதியை என்றென்றைக்கும் ப்ளாக் லிஸ்ட் செய்து ஓரம் கட்டி விடுவார்கள். அப்புறம் வெளிநாட்டுப் பக்கமே போக முடியாது.
பொதுவாக ஹிட்லரின் ஜெர்மனியில் பசுபதி போன்ற அராஜகவாதிகளை, கலகக்காரர்களை அந்தக் குடியுரிமை அதிகாரிகளின் பூட்ஸ்களை நாக்கினால் நக்கச் சொல்வார்கள். இந்தியா அந்த விதத்தில் கொஞ்சம் பரவாயில்லை. பூட்ஸையெல்லாம் நக்கச் சொல்ல மாட்டார்கள். மன்னிப்புக் கடிதமே போதும்.
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீகள் பசுபதி? இந்தியா ஒரு நரகம். இங்கே வாழ்வதாக இருந்தால் நரகத்தின் விதிமுறைகளை மட்டுமே நீங்கள் பின்பற்ற முடியும். இதே விதியின்படிதான் பூங்கொத்து கொடுத்த விநாயகம் முருகனின் மீதும் தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
அந்தச் சம்பவம் ஞாபகம் இருக்கிறது முருகன்; மறக்கவே மாட்டேன்.
இப்போது குடிக்கு வருவோம். குடியைக் கவித்துவமாகச் சொன்ன கண்ணதாசன், மனுஷ்ய புத்திரன்… குடியை மட்டும் அல்ல; குட்டிகளைப் பற்றியும் இரண்டு கவிஞர்களும் விளைந்து விளைந்து எழுதியிருக்கிறார்கள்.
இதோ இன்றைய உயிர்மையில் வந்திருக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதையைப் பாருங்கள்.
இன்று ஒரு புதிய மச்சத்தைக்
கண்டு பிடித்தேன்
ஒரு புதிய தீவிற்கு
ஒரு புதிய நட்சத்திரத்திற்கு
ஒரு புதிய எரிமலைக்கு
அதைக் கண்டுபிடித்தவனின் பெயரை
இடுவதைப் போல
அந்த மச்சம் என் பெயரால்
அழைக்கப்படலாம்
இவ்வளவு காமம் ததும்பும் வரிகளை சமகாலக் கவிஞன் வேறு எவனாவது எழுதியிருக்கிறானா? பாப்லோ நெரூதா கூட எழுதவில்லை.
மனுஷ்ய புத்திரனை நேரில் சந்திக்கும்போதுதான் மச்சத்தை அவர் எங்கே கண்டு பிடித்தார் என்ன ஏது என்று விசாரிக்க வேண்டும். லேசில் சொல்ல மாட்டார். அப்ஸொலூட் வாட்காவை ஊற்றி ஆளை சரித்த பிறகுதான் கேட்டு வாங்க வேண்டும்.
முருகன் சொல்லும் பெல்லி டான்ஸை ஏற்கனவே பார்த்து எழுதி விட்டேன். ஸேடி என்பது அவர் பெயர். என்னுடைய இப்போதைய மனநிலையில் ஸேடியின் டான்ஸெல்லாம் ஈர்க்கவில்லை. நிலவிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவனிடம் காகித நிலவைக் காண்பிக்க முடியுமா? இதெல்லாம் ஜூஜூபி என்று தோன்றுகிறது. மன்னிக்கவும். இதற்கு மேல் எழுத முடியாது.
***
சராசரி மனிதர்களின் குடிக்கும், எழுத்தாளர்களின் குடிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று குறிப்பிட்டேன். கடந்த வேலண்டைன்ஸ் டே அன்று காலை எட்டு மணிக்கு ஒரு போன் வந்தது. க.சீ. சிவகுமார். ஆள் நல்ல போதையில் இருந்தது போல் தெரிந்தது. ”என்னய்யா இது, இவ்வளவு காலையில்?” என்று கேட்டேன். “ம்ஹூம், நேற்று மாலையிலிருந்து குடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். பிறகு அபிராமி அந்தாதியிலிருந்து
பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்-
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே
என்ற பாடலைப் பாடி அது பற்றி நீண்ட நேரம் பேசினார்.
உன் பாதத்தையே பற்றும்படிச் செய்து விட்டாய் தேவி… இதை உணர்கின்ற ஒவ்வொரு கவிஞனும் குடிக்கலாம்.
2.2.2010.
10.35 a.m.
