அறம் – 2

இதுவரை என் பிராமண நண்பர்கள் அத்தனை பேருமே கமலைத் திட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் – சுமார் 30 ஆண்டுகளாக – கமலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்த ஜென்மம் நான். இனி ஒருபோதும் கமல் மீது நட்பு பாராட்ட மாட்டேன். ஷங்கரை அவர் இரண்டு முறை எழுத்தாளர் என்று அழைத்தது அவலம். அவலம். அவலம். இரண்டாவது முறை அவர் எழுத்தாளர் ஷங்கர் என்று மட்டுமே சொன்னார். இயக்குனர் என்றே சொல்லவில்லை. இதைப் போன்ற வடிகட்டின அராஜகத்தை என் வாழ்நாளில் கண்டதில்லை. என் ரத்தம் கொதிக்கிறது.

எழுத்தாளன் என்பவர் கடவுளுக்கு நிகரானவர். படைப்பாளி. ஒரு தேசத்தின் மனசாட்சி. ஒரு கலாச்சாரத்தின் அடையாளம். திருவள்ளுவனைப் போல. எத்தனையோ அரசர்களின் பெயர் நமக்கு ஞாபகம் இல்லை. ஆனால் கபிலனும், பரணனும், வள்ளுவனும் நம் அடையாளங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட எழுத்தாளன் என்ற அடையாளத்தை ஒரு entertainer-க்கு இன்னொரு entertainer கொடுப்பதைத் தமிழகத்தின் மகா பெரிய அவலங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

கமல் பற்றி ஒருமுறை நிகழ மறுத்த அற்புதம் என்று எழுதினேன். நிகழ மறுத்த அவலம் என்று மாற்றி எழுத விரும்புகிறேன் இப்போது.