அறம் – 3

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எடை தூக்கும் பயிற்சிக்கும் பாக்சிங் பயிற்சிக்கும் போய்க் கொண்டிருந்தேன்.  பார்க்க பயில்வான் மாதிரி இருப்பேன்.  அப்போது ஒரு மாற்றத்துக்காக முடியை ஒட்ட வெட்டிக் கொண்டேன்.  அந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சில்லம் அடிப்பதுண்டு.  ஆனால் என்றைக்குமே அடிக்ட் ஆனதில்லை.  கவனம்.  அதைத் தேடி பார்க் பக்கம் போவேன்.  அங்கே தான் அது கள்ளத்தனமாக விற்கப்படும்.  ஆனால் என்னைப் பார்த்ததும் எல்லோரும் ஓடி விடுவார்கள்.  இப்படியே போய்க் கொண்டிருந்ததால் என் நண்பர்கள் என்னை மட்டும் வெளியே இருக்கச் சொல்லி விட்டு உள்ளே போய் பொட்டலத்தை வாங்கி வந்தார்கள்.  என்ன விஷயம் என்றால், என்னை போலீஸ் என்று நினைத்து விட்டார்கள்.  அப்போதெல்லாம் நான் ரைட்டர் என்று சொன்னதுமே எந்த போலீஸ் ஸ்டேஷன் என்று கேட்பார்கள்.  போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் என்று ஒரு பதவி உண்டு.

அப்படித்தான் ரைட்டர் என்று சினிமாவிலும் ஒரு போஸ்ட் உண்டு போல.  அதுசரி, காமன்மேனுக்கு வேண்டுமானால் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டருக்கும் நிஜ ரைட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம்.  உலக நாயகனுக்குத் தெரியாமல் இருக்கலாமா?  க.நா.சு.வும், சி.சு. செல்லப்பாவும், தி.ஜானகிராமனும், அசோகமித்திரனும் எழுத்தாளர்கள்; இயக்குனர் ஷங்கரும் எழுத்தாளர்.  இல்லையா மிஸ்டர் உலக நாயகன்?