செடியில் குடும்பப் பேட்டி

என்னய்யா தீங்கு செய்தேன் உங்களுக்கு?  தெரியாமல் செய்கிறீர்களா, தெரிந்தே அவமதிக்கிறீர்களா?  அவந்திகா சொல்வதைப் பார்த்தால் இரண்டாவது விஷயத்துக்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.  விஷயம் இதுதான்.  செடி பத்திரிகையில் என் குடும்பப் புகைப்படமும் பேட்டியும் வந்துள்ளது.  அவந்திகாவின் பேட்டி என்றே சொல்லலாம்.  ஒரு எழுத்தாளனின் மனைவியின் பேட்டி.  படித்து விட்டு அவந்திகா, ”இதை எழுதிய பரிசல் கிருஷ்ணாவுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.  செடி பத்திரிகைக்கும் அதன் ஆசிரியருக்கும் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.  இதுவரை என் வாழ்நாளில் இப்படிப்பட்ட நல்ல வார்த்தைகளை நான் கேட்டதில்லை.  இதில் என்னைப் பற்றி எழுதியிருப்பது போல் நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை.  ஆனால் அப்படி நடந்து கொள்ள இன்றிலிருந்து முயற்சி செய்வேன்” என்றாள். செடி பத்திரிகையின் தீபாவளி மலர்.  தீபாவளி மலரை தனியாக நூறு ரூபாய் விலை வைத்துக் கொடுப்பதை விட வார இதழையே பக்கங்களை அதிகரித்துக் கொடுத்திருப்பது நல்ல விஷயம்.

என்னவோ தெரியவில்லை, செடிக்கும் எனக்கும் ஒத்தே வர மாட்டேன் என்கிறது.  அதன் இணைய இதழில் இரண்டு முறை என் பெயரை அறிவழகன் என்று வெளியிட்டார்கள்.  ஒரு முறை நடந்தால் தவறு.  அதைச் சுட்டிக் காட்டியும் இரண்டாவது முறையும் அறிவழகன்.  என் பெயரை அறிவழகன் என்று போடுவது என்னைக் கொலை செய்வதற்கு சமம் இல்லையா?  பாஸ்போர்ட்டிலும் வங்கிக் கணக்கிலும்தான் அறிவழகன் என்று இருக்கிறது.  சரி, விட்டு விட்டேன்.

பிறகு மாணவர் பயிற்சித் திட்டத்தில் பயிற்சிக்கு வரும் புகைப்படக்காரரை அனுப்பி என்னைப் புகைப்படம் எடுத்தார்கள்.  அதுவும் பிரச்சினை ஆனது.  அதாவது, செடி நல்ல பத்திரிகை.  நான் தான் வம்பு.  நான் தான் பிரச்சினை பண்ணுகிறவன்.

இப்போது இந்த தீபாவளி மலர் பேட்டி.  இதில் என்ன ஏடாகூடம் என்றால், அன்பர் பரிசல் கிருஷ்ணா அவந்திகாவின் பெயரை சுகந்தா என்று போட்டிருக்கிறார்.  புகைப்படத்திலேயே அப்படித்தான் போட்டிருக்கிறார்.  சரி, எனக்கு ஒரே ஒரு கேள்விதான்.  உங்கள் மூளையில் இப்படிப்பட்ட யோசனையெல்லாம் எப்படி ஐயா உதிக்கிறது?  அம்மாவின் ஒரிஜினல் பெயர் என்ன என்று கேட்டீர்கள்.  அப்போதே என்னுடைய மரமண்டைக்கு உறைத்திருக்க வேண்டும்.  நான் ஒரு முட்டாள்.  சுகந்தா என்று சொல்லி விட்டேன்.  ஆனால் அப்போதே வேறொன்றும் சொன்னேன்.  அந்தப் பெயர் இப்போது வங்கிக் கணக்கில் மட்டுமே உள்ளது.  அவந்திகா என்றே எல்லோரும் அழைக்கும் வழக்கம்.  அவந்திகா பெயரை ஸ்ரீராமஜெயம் போல் ஆயிரம் முறையாவது எழுதியிருப்பேன்.  இப்போது உங்கள் இஷ்டத்துக்கு சுகந்தா சுகந்தா என்றே எழுதியிருக்கிறீர்கள்.  உங்களுக்கு எப்படி இந்த யோசனை வந்தது?  அல்லது, வேண்டுமென்றே செய்கிறீர்களா?  இப்போதும் என்னால் நீங்கள் வேண்டுமென்றே செய்கிறீர்கள் என்று நினைக்க முடியவில்லை.  ஆனால் அவந்திகா என்ற பெயரை எப்படி சுகந்தா என்று எல்லா இடத்திலும் போட்டீர்கள்?  நான் கேட்கிறேன், தங்கர் பச்சானின் ஒரிஜினல் பெயர் தெரியுமா உங்களுக்கு?   அவர் புகைப்படத்தைப் போட்டு அதன் கீழே அவருடைய ஒரிஜினல் பெயரைப் போடும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?  ரஜினிகாந்தின் பெயரை சிவாஜி ராவ் என்றுதான் போடுகிறீர்களா?

ஒன்று, நீங்கள் வேண்டுமென்றே என்னை அவமதிக்கிறீர்கள்.

அல்லது,

உங்கள் நிர்வாகத்தின் திறமையின்மை மிக மிக மோசமாக இருக்கிறது.  என் வீட்டுக்கு ஒரு சமையல்கார அம்மாவை வைத்தேன்.  முதல் நாள், ஸ்டவ்வைப் பற்ற வைத்துத் தருகிறீர்களா என்று கேட்டார்.  கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைக்கத் தெரியாதாம்.  இவர் சமையல்காரர்!  இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டு எப்படி ஐயா பத்திரிகை நடத்துவது?  ஒருவரின் பெயரில் கூடவா ஆள் மாறாட்டம் செய்வார்கள்?  நல்லவேளை, பல எழுத்தாளர்களின் குடும்ப போட்டோ வந்துள்ளது.  ஜோடியைப் பிரித்துப் போடாமல் இருந்தீர்களே, உங்களுக்குக் கோடி கும்பிடு!!!

பி.கு. வாசகர்கள் குழம்பியிருப்பார்கள், அது என்ன பத்திரிகை செடி என்று.  அவந்திகாவின் பெயரை சுகந்தா என்று மாற்றும் போது விகடன் என்ற பெயரை செடி என்று மாற்றலாம் இல்லையா?